முதல்வர் முன்னால் மோதல்... மெளனம் காத்த போலீஸ்!

28 April 2010 ·

முதல்வர் முன்னால் மோதல்...
மெளனம் காத்த போலீஸ்!

காக்கிகளுக்கும் கறுப்பு கோட்டுகளுக்கும் ஹை கோர்ட் வளாகத்தில் கலவரம் வெடித்து, ஓர் ஆண்டு உருண்டோடிய நிலையில்... அங்கே மீண்டும் ஒரு மோதல்!

கடந்த 25-ம் தேதி சென்னை ஹை கோர்ட் வளாகத்தில் அம்பேத்கர் சிலையை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் திறந்துவைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதற்கு முன்பே, 'ஹை கோர்ட் கலவரத்துக்குக் காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பின்பும் நடவடிக்கை எடுக்காத முதல்வர் விழாவுக்கு வரக் கூடாது' என்று வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக மீடியாவில் செய்தி அடிபட்டுக்கொண்டு இருந்த நிலையில்தான்... முதல்வர் கருணாநிதி விழாவில்கலந்துகொண்டார். 'மோதல் வெடிக்கலாம்...' என்று எல்லாத் தரப்பும் தயாராகவே வந்திருக்க, எதிர் பார்ப்போடு விழா தொடங்கியது. முதல்வர் வருகையைக் கண்டித்து பெரும் பாலான வழக் கறிஞர்கள், விழாவைப் புறக்கணித்திருந் தார்கள்.

சம்பவத்தை நேரில் பார்த்த நடுநிலை வழக்கறிஞர்கள் சிலர் நம்மிடம், ''இரண்டு நாட்களுக்கு முன்பே 'வக்கீல்கள், நீதிபதிகள் மீது கொலைவெறித் தாக்குதலுக்கு உத்தரவிட்ட, 2009 பிப்ரவரி 19 சம்பவத்தின் மூளை... அம்பேத்கர் சிலைத் திறப்பு விழாவுக்கு வருகை தரும் குற்றவாளி போலீஸை பாதுகாக்கும் கருணாநிதியே திரும்பிப் போ!' என்று மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நோட்டீஸ்களை விநியோகித்து ஹை கோர்ட் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்கள்தான் விழாவில் கருணாநிதிக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டி கோஷம் போட்டவர்கள். அதிலும் குறிப்பாக, முதல்வர் மைக் பிடித்ததுமே பின் வரிசையில் இருந்த அவர்கள், 'முதல்வரே திரும்பிப் போ!' என்று கோஷம் போட்டனர். ஆனால், முதல்வர் இதையெல்லாம் சட்டை செய்யாமல் பேச்சைத் தொடர்ந்தார். இந்த நிலையில், எதிர்ப்புத் தெரிவித்த வக்கீல்களுக்கு எதிர்ப்புறமாக உட்கார்ந்திருந்த இன்னொரு பிரிவினர் தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளை அப்படியே அலேக்காகத் தூக்கி, முதல்வருக்கு எதிர்ப்பு சொன்ன வழக்கறிஞர்களை நோக்கிச் சகட்டுமேனிக்கு வீசினர். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுக்க... வெறிகொண்ட அவர்கள் வக்கீல்கள் மீது பாய்ந்து ஆவேசமாகத் தாக்க ஆரம்பித்தார்கள். பெரிய கற்களைக் கொண்டும் தாங்கினார்கள். இதனால் கறுப்புக் கொடி காட்டிய வழக்கறிஞர்கள் நிலைகுலைந்தனர். தப்பித்து ஓடியவர்களையும் விரட்டிச் சென்று அடித்தார்கள். 10 நிமிடங் களுக்கும் மேல் இந்தச் சம்பவம் மேடைக்கு எதிரே அரங்கேறிய நேரத்திலும் முதல்வர் தன் பேச்சை நிறுத்தவில்லை!'' என்றனர்.

காயம் அடைந்த மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் சுரேஷ் உட்பட ஐந்து பேர் உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுரேஷிடம் பேசினோம். ''ஹை கோர்ட் கலவரத்துக்குக் காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி நீதிமன்றமே உத்தரவிட்டும், கருணாநிதி அவர்களைப் பாதுகாத்து வருகிறார். அப்படிபட்டவர், நீதி மன்றத்தில் அம்பேத்கர் சிலைத் திறப்பு விழாவுக்கு வரக் கூடாது என்று சொன்னோம். அதையும் மீறி வந்த வருக்கு, ஜனநாயக முறையில் கறுப்புக் கொடி காட்டினோம். அப்போது எங்களைத் தாக்குவதற்காக, திட்டமிட்டு தி.மு.க. ரவுடிகளுக்கு கறுப்பு- வெள்ளை உடை கொடுத்து தயாராக அழைத்து வந்திருந்தனர். தி.மு.க. எம்.எல்.ஏ-வான வி.எஸ்.பாபுவின் ஏற்பாட்டில் வந்த ரவுடிகள் தான் அந்த அராஜகத்தைக் கட்டவிழ்த்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள். சுற்றி நின்ற போலீஸ் வழக்கம்போல கைகட்டி வேடிக்கை பார்த்தது. முதல்வர், மத்திய அமைச்சர், சுப்ரீம் கோர்ட், ஹை கோர்ட் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் முன்பே வன்முறையை அரங்கேற்றி இருக்கும் இந்த ஆட்சி... ஜனநாயக ஆட்சியா... காட்டாச்சியா?'' என்றார் காட்டமாக.

முன்பு ஹை கோர்ட் வளாகத்தில் கலவரம் வெடித்த போதும், மீடியா ஆட்கள் பாதிக்கப்பட்டனர். இப்போதும் மீடியாக்கள் தப்பவில்லை. சம்பவத்தை கவரேஜ் செய்ய வந்த பத்திரிகையாளர்கள், ''சம்பவம் நடக்க ஆரம் பித்ததுமே அதை மீடியா ஆட்கள் படமெடுத்தனர். வழக்கறிஞர்களைத் தாக்கியவர்களில் ஒரு பிரிவு, படம் எடுத்தவர்களை அடித்துத் துவைத்தது. ஜெயா டி.வி. கேமராமேனிடம் இருந்து கேமராவைப் பறித்து, சகட்டுமேனிக்கு அடித்தார்கள். என்.டி.டி.வி. - இந்து தொலைக்காட்சியின் கேமராமேன், லைவ் இண்டியாவின் கேமராமேன் ஆகியோரை அடித்து நொறுக்கினர். இந்தத் தாக்குதலின் வீடியோ மற்றும் போட்டோ ஆவணங்கள் எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்று திட்டமிட்டுத்தான் கேமராக்களை உடைத்தனர். சேர்களைத் தூக்கி வீசி அடித்தவர்களிடம் இருந்து டி.ஜி.பி-யான லத்திகா சரண் மட்டுமே சேர்களைப் பிடுங்கினார். ஆனால், மற்ற போலீஸ்காரர்கள் சிலையாகவே நின்றனர்!'' என்று குற்றம் சாட்டினர்.

வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ.விடம் பேசினோம். ''எனக்கும் அந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை. வேண்டும் என்றே அவதூறு பரப்புகிறார்கள்'' என்றார்.

தாங்கள் தாக்கப்பட்டதற்காக எஸ்பிளனேடு போலீஸ் ஸ்டேஷனில் பத்திரிகையாளர்கள் புகார் கொடுக்க... போலீஸ் புகாரை வாங்கவில்லை. உடனே, பத்திரிகையாளர்கள் மேலதிகாரிகளிடம் முறையிட... உதவி கமிஷனர் சந்திரன், ''இது சாதாரண சம்பவம். இதுக்குப் போய் புகாரா?'' என்றார். பத்திரிகையாளர்கள் சீறி, ''முதல்வர், தலைமை நீதிபதிகள் முன்பு வன்முறை வெறியாட்டம் நடந்திருக்கு... இது சின்ன சம்பவமா?'' என்று கேட்டனர். இறுதியில் வேறு வழி இல்லாமல் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

வழக்கறிஞர்கள் தரப்பில், ''இந்த விழாவைப் பெரும் பாலான வழக்கறிஞர்கள் புறக்கணித்துவிட்டோம். அதையும் மீறி உணர்ச்சிவசப்பட்ட சிலர்தான் இப்படி எதிர்ப்பு காட்டினர். அதற்குப் பதிலடி வன்முறை என்பதை ஏற்க முடியாது. நீதிமன்றத்துக்கு உள்ளேயே நீதி இல்லையா?'' என்று குமுறினர்.

இந்த வன்முறைக் களேபரத்துக்கு மௌன சாட்சியாக அதே வளாகத்தில் நின்றது... பசுவை தேரில் ஏற்றிக் கொன்ற மகனை அதே தேர்க் காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் சிலை!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites