கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்!
அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர். இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் control கோலுக்கு அனுப்பப் படுகிறது. இது கிட்டத் தட்ட ஒரு கைத் தொலைபேசி யளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாவின் மேல் வைக்கப் படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது. கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர் பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு பார்வை அற்றவர் மூலம் இந்தக் கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல் முதலாக எழுத்துக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு இந்த கொன்றோல் கோல் காட்சிகளை பெரிதாக்கவும் (zoom) வெளிச்சத்தைக் குறைக்கவும் அதிகரிக்கவும் வசதியளிக்கிறது. இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர் , பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர் உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும் படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்றும் , இந்தக் கருவியை உபயோகித்து புத்தகம் படிப்பது அவசியமில்லை என்று சொல்கிறார்கள். அவர்கள் அறிக்கையின் படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று தெரிகிறது. இக் கருவி கண் பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் , தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும் ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம்.
0 comments:
Post a Comment