சசிதரூர் ரன் அவுட்

21 April 2010 ·''மச்சி... ஒரு பொண்ணை லவ் பண்றேன். அவளை அசத்துற மாதிரி என்ன பரிசு தரலாம் சொல்லு...''

''உங்க தெருப்பசங்கதான் சூப்பரா கிரிக்கெட் ஆடுறானுங்களே... உன் சக்திக்குத் தகுந்த மாதிரி அவனுங் களை வேணா ஏலம் எடுத்துக் குடேன்!'
அப்படித்தான் வேடிக்கை ஆகிப் போய்விட்டது சசிதரூர் நிலைமை!

அண்மையில் 76 சி.ஆர்.பி.எஃப். வீரர்களை மாவோயிஸ்ட்கள் படுகொலை

செய்ய... காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், 'அறிவாளி யான ப.சிதம்பரத்தின் திமிரால்... கர்வத்தால்... இது நிகழ்ந்துள்ளது. ஆதிவாசிகளின் நலன்களை பிரச்னைகளை ஆராயத் தவறிவிட்டார்' என்று கடும் விமர்சனத்தை முன்வைத்தார். மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விவகாரத்தில் ஜெயராம் ரமேஷ§க்கு எதிராக கபில் சிபில் கருத்து வைத்தார், அந்நிய நாட்டு பேச்சுவார்த்தை, விசா கட்டுப்பாடு விவகாரங்களில் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு

எதிராக சசிதரூர் நறுக்கென்று நாலு வார்த்தை சொன்னார். இப்படியாக ஆளும் காங்கிரஸுக்குள்ளேயே நடந்துவரும் டமால் டுமீல்களின் அடுத்த காட்சியாக - சர்வதேச புகழ் சசிதரூர் விவகாரம்!

பிரபல சமூக வெப்சைட்டுகளில் ஒன்றான டிவிட்டரில் சசிதரூர் அவ்வப்போது ஏதாவது கருத்து சொல்லி, பிரச்னையில் சிக்கிக்கொள்ளுவார். 'அரசின் சிக்கன நடவடிக்கையை முன்னிட்டு அமைச்சர்கள் விமானத்தில் சாதாரண வகுப்பில் செல்ல வேண்டும்' என்று அறிவிக்கப்பட்டபோதுகூட... சாதாரணர்களுக்கான வகுப்பை 'ஆடு மாடுகளை அடைக்கும் கொட்டகை' என்றார்! இதே டிவிட்டரில்தான் சசிதரூருக்கு எதிரான ஆப்பை வைத்தார் ஐ.பி.எல். ஆணையத்தின் கமிஷனர் லலித் மோடி!

'கொச்சின் ஐ.பி.எல்-லை ஏலம் எடுத்தவர்கள் யார் யார்? இதை வெளியில் சொல்லக்கூடாது என்று வேறு அவர்கள் கூறுகின்றனர்' என்று லலித் மோடி டிவிட்டரில் பற்ற வைத்ததுதான் இன்று சசிதரூரின் ராஜினாமா வரை வந்து நிற்கிறது! 'இந்த ஏலதாரர்கள் குறித்தும், பங்குதாரர்கள் குறித்தும் வெளியே சொல்லக் கூடாது என்று மத்திய அமைச்சர் சசிதரூர் தன்னை மிரட்டுகிறார்' என்று மோடி மேற்கொண்டு சொல்ல... கொச்சி அணி ஏலம் விஷயத்தில் ஆர்வமாக உள்ளே வந்த காஷ்மீரப் பெண்(மணி) சுனந்தா புஷ்கருக்கும் சசி தரூக்கும் உள்ள தொடர்பெல்லாம்கூட வரிசைகட்டி வெளியே வந்துவிட்டது. என்னதான் நடந்தது? யார்தான் யோக்கியர்? கொச்சி ஐ.பி.எல். டீம் கோடிக்கணக்கில் ஏலம் விடப்பட்டபோது... இந்த ஏலத்தை ஆறு பேர் பிரித்துக் கொண்டனர். மின் சாதன கம்பெனியான ஆங்கர் 27 சதவிகித பங்குகளை, மும்பை சினிமா ஃபைனான்ஸ் கம்பெனி 12 சதவிகிதத்தை, பார்னி பில்டர்ஸ் என்கிற ரியல் எஸ்டேட் கம்பெனி 26 சதவிகிதத்தை, ஆனந்த் ஷ்யாம் 8 சதவிகிதத்தை, ரேண்டவூ ஸ்போர்ட்ஸ் என்கிற துபாய் நிறுவனம் 26 சதவிகித பங்குகள், விவேக் வேணுகோபால் ஒரு சதவிகித பங்குகளையும் வாங்கியிருக்கிறார். 'ஸ்பெக்ட்ரம்' ஏலம் போன விலைக்கும்... பிறகு அதை ஏலம் எடுத்த கம்பெனிகள் விற்றபோது கிடைத்த பணத்துக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம் நாட்டை உலுக்கிய மாதிரிதான் இதுவும். கொச்சி அணியை ஏலம் எடுத்த ரேண்டவூ நிறுவனம்... அதில் ஒரு சதவிகித பங்கை மட்டும் வைத்துக்கொண்டு, மீதி 25 சதவிகித பங்குகளை எட்டு பேருக்கு கொடுத்துள்ளது. 'கொச்சின் டீமுக்காக வியர்வை சிந்தி உழைப்பவர்களுக்குத்தான் இதைக் கொடுக்கிறோம்' என்று சொல்லியிருக்கிறது ரேண்டவூ நிறுவனம். இந்த பங்குகளை வாங்கிய எட்டு பேர்களில் ஒருவர்தான் - 'சசி தரூருக்கு மூன்றாவது மனைவியாக வாக்கப்படப் போகிறார்' என்று சுட்டிக்காட்டப்படும் சுனந்தா புஷ்கர்! இவருக்கு தரப்பட்ட பங்குகளின் மதிப்பு எவ்வளவு என்று ஆளுக்கொரு கணக்கை சொல்ல... '70 கோடி' என்ற தகவலை பத்திரிகைகளுக்கு சப்ளை செய்தார் லலித் மோடி.

சுனந்தா புஷ்கருக்கு ஆதரவாக சசிதரூர் போனில் பேசியதை லலித் மோடி தரப்பு டேப் பண்ணி வைத்திருக்கும் தைரியத்தில்தான், மத்திய அமைச்சர் என்றும் பாராமல் அவருக்கு எதிராக மோடி கொடி பிடிக்கிறார் என்று ஒரு தரப்பு சொல்ல... ''லலித் மோடிக்கு பக்காவாக பி.ஜே.பி. ஆதரவு இருக்கிறது. அவர்கள் தரும் உந்துதல்தான் இதற்கெல்லாம் காரணம்!'' என்று தரூர் தரப்பு டென்ஷனாகிறது.

சசிதரூர் ஐக்கிய நாடுகள் சபையில் அண்டர் செக்ரெட்டரியாக பணியாற்றியவர். பிறகு, அந்த சபையின் தலைமைப் பதவியில் இருந்த கோபி அன்னானின் செயலாளராக பணியாற்றினார். இறுதியில் கோபி அன்னான் வகித்த செக்ரெட்டரி ஜெனரல் பதவிக்கும் போட்டியிட்டார் தரூர்.

ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றும்போதும் சரி... வெளியுறவு அமைச்சகத்தில் பதவி வகித்தபோதும் சரி... சசி தரூருக்கும் ஐ.எஃப்.எஸ்.அதிகாரி களுக்கும் தொடர்ந்து பனிப்போர்தான். அதையும் தாண்டித்தான், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன் உதவியோடு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி யிட்டு வெற்றிபெற்று... அமைச்சரா னார் அவர்.

''சசிதரூர் அமைச்சராகி... ஒரு வருடத்துக்குள் 18 முறை துபாய்க்கு பயணமாகியுள்ளார். அமைச்சராகும் முன்பு துபாயில் அஃப்ரஸ் வென்சர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார் சசிதரூர். இந்த நிறுவனத்தில் அவர் போட்ட முதலீடு எல்லாம் சர்வதேச அளவில் வந்து குவிந்த சந்தேகத்துக்குரிய பணம். குறிப்பாக, ஈராக்கில் உணவுக்கு எண்ணெயை விற்ற கூப்பன் விவகாரத்தில் புரண்ட பணம் இதில் உள்ளது. கணக்கில் வராத அந்த கறுப்புப் பணத்தை வெள்ளை ஆக்கிக் கொடுக்கத்தான் தன் 'கேர்ள் ஃபிரெண்ட்' பெயரால் சசிதரூர் கிரிக்கெட் விவகாரத்தில் தலை நுழைத்தார் என்றும் லலித் மோடி வட்டாரம் பரப்பத் துவங்கியுள்ளது.

இந்நிலையில், ''கொச்சின் போட்டியில் லலித்மோடி தன்னுடைய பங்குதாரர்களை நுழைக்க முயற்சித்தார்!'' என்று ரேண்டவூ நிறுவனம் குற்றம் சாட்டுகிறது. ''கிட்டத்தட்ட 50 மில்லியன் டாலர் கொடுக்கிறோம்... ஏலத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று மோடி எங்களை வலியுறுத்தினார்...'' என்று இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இப்போது சொல்ல... ''லலித் மோடிக்கு பி.ஜே.பி. ஆதரவு மட்டுமல்ல... சரத்பவார் தரும் பலமும் இருக்கிறது!'' என்ற குரல்களும் கேட்கத் துவங்கியுள்ளன. தேர்தலில் போட்டியிடுவதற்கு சில காலம் முன்பு, ஜனநாயகத்தில் பணநாயகம் விளையாடுவது குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் காரசாரமாகப் பேசினார் சசி. அதை சுட்டிக் காட்டும் சிலர், ''இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்றுதான் இருந்தது அப்போது. இப்போதோ, பதவியையும் இழந்துவிட்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார். அவருக்கு எப்படி நாங்கள் இரக்கம் காட்ட முடியும்?'' என்கிறார்கள் காங்கிரஸுக்குள்ளேயே!

சிதரூர் பற்றிய சர்ச்சை பூதம் ராஜினாமாவைத் தொடர்ந்து ஓய... இப்போது அடுத்த சிக்கல் லலித் மோடிக்கு!

'லலித் மோடியை ஐ.பி.எல். தலைவர் பதவியிலிருந்து தூக்கவேண்டும். ஊழல் நடந்திருக்கும் ஐ.பி.எல். அமைப்பையே கலைக்கவேண்டும்' என்ற குரல்கள் டெல்லியில் ஒலிக்கத் துவங்கிவிட்டன.

2008-ம் ஆண்டு ஐ.பி.எல். தலைவரானார் மோடி. அதன்பின், கிரிக்கெட் வாரியத்துக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டியது. அதோடு, லலித் மோடியும் தனது பங்குக்கு கோடி கோடியாகப் பணத்தைக் குவித்தது தற்போதுதான் தெரியவந்துள்ளது. ''நான்கு ஆண்டுகளுக்கு முன்பு லலித் மோடி சாதாரணமான நபர். தான் நடத்திவந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால், அதை விற்றுவிட்டார். இந்நிலையில், ஐ.பி.எல். தலைவரான பிறகு பெரும் கோடீஸ்வரராகி விட்டதாக உளவுத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்போதெல்லாம் அவர் தனி விமானத்தில்தான் பயணிக்கிறார். உயர் ரக மெர்ஸிடஸ் கார்களை வாங்கி வைத்திருக்கிறார். இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் கிடைத்தது என்பது பற்றி வருமானவரித் துறையினர் ரகசியமாக விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன...'' என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

ஏற்கெனவே நடந்த இரண்டு ஐ.பி.எல். போட்டிகளிலும் மேட்ச் பிக்ஸிங் சூதாட்டம் நடந்ததா என்று இப்போது துருவுகிறார்களாம் அதிகாரிகள். லலித் மோடியுடன் டெல்லியை சேர்ந்த சூதாட்டத் தரகர் ஒருவரை இணைத்து பல்வேறு தகவல்கள் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டன. ஐ.பி.எல். அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப், கொல்கத்தா ஆகிய மூன்றின் மறைமுக உரிமையாளராக லலித் மோடியே இருப்பதாகவும், அந்த அணியை ஏலம் எடுத்தவர்கள் டம்மிகள்தான் என்றும் ஒரு தகவல் உலுக்கத் தொடங்கியுள்ளது!

பஞ்சாப் டீமின் பங்குதாரர்களில் ஒருவர் - லலித் மோடியின் வளர்ப்பு பெண்ணுடைய கணவரான கவுரவ் பர்மன் என்றும் சொல்கிறார்கள். இவர் உலகத்திலேயே மிகப்பெரிய பெட்டிங் வெப்சைட்டை நடத்துவதாக ஒரு குற்றச்சாட்டும் கிளம்ப, ''அதற்கு எனக்கும் எந்த தொடர்பும் இல்லை'' என்று கடுமையாக மறுத்திருக்கிறார் கவுரவ் பர்மன். லலித் மோடி தரப்பும் தன் மீதான குற்றச்சாட்டுகளை அடியோடு மறுக்கிறது. இருந்தாலும், வருமானவரித் துறை அதிகாரிகள் சுறுசுறுவென இயங்கத் தொடங்கியுள்ளனர். ''கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் பாதுகாப்பு காரணங்கள் கருதி, ஐ.பி.எல். போட்டிகளை தள்ளி வைக்கும் யோசனையை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சொன்னார். லலித் மோடியோ... தேர்தலைவிட ஐ.பி.எல்-தான் முக்கியம் என்ற ரீதியில் அசராமல் செயல்பட்டார். அப்போதே மோடி மீது மத்திய அரசின் பார்வை பலமாகப் படிந்துவிட்டது!'' என்றும் இப்போது சொல்கிறார்கள் வருமான வரித் துறை அதிகாரிகள். விரைவில், சி.பி.ஐ. அதிகாரிகள் லலித் மோடியை கைது செய்து விசாரிக்க உள்ளதாகவும் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு!

இந்த விவகாரத்தில் சசிதரூர் சர்ச்சையைத் தவிர... மத்திய மந்திரிகளாக உள்ள வேறு இரண்டு பேரின் தலையும் உருட்டப்படுகிறது. கறுப்புப் பணத்தை பினாமி நபர்கள் மூலம் ஐ.பி.எல். களத்தில் வெள்ளை ஆக்கப் பார்த்ததாக அவர்கள் மீதும் சந்தேகப் பார்வையைத் திருப்புகிறார்கள் சீனியர் பத்திரிகையாளர்கள்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil