அமைதி அழகிரி... அடுத்த பூகம்பம்!

27 April 2010 ·

அமைதி அழகிரி... அடுத்த பூகம்பம்!

''சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி, சாம்பியன் பட்டத்தை மும்பையில் வென்று சென்னை திரும்பி இருக்கிறது. ஆனால், மதுரை சூப்பர் கிங் அழகிரியோ டெல்லியிடம் எந்த நேரத்திலும் தனது சாம்பியன் பட்டத்தை இழந்துவிடுவார்போல் இருக்கிறது!'' - ஐ.பி.எல். ஃபீவரில் வந்து இறங்கிய கழுகார், மேட்ச்சுடன் செய்தியையும் மேட்ச் செய்தார்!

''ஆரம்பம் முதலே அழகிரிக்கு டெல்லி அரசியல் பிடிக்கவில்லை. உரத் துறை என்ற உயிர்த் துறையை கையில் வைத்திருக்கும் அவர், தன் துறையைச் சரிவர

கவனிப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டு தமிழக முதல்வர் வரை கொண்டுசெல்லப்பட்டது. அவரும் தனயனை அவ்வப்போது அழைத்துப் பேசினார்... பலன் இல்லை. இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்துக்குப் போகாமல் தன் சகாக் களுடன் மாலத் தீவுக்குச் சென்றுவிட்டார் அழகிரி. 'உடனடியாக நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும்' என்று கட்டளையிட்டும், அழகிரி அதைக் கண்டுகொள்ளவில்லை.''

''என்னதான் ஆச்சு?''

''சென்னைக்கு வந்ததும் தம்மைச் சந்தித்துவிட்டு, டெல்லி செல்ல வேண்டும் என்று கருணாநிதி அடுத்த கட்டளையையும் பிறப்பித்தார். அழகிரியோ, மாலத் தீவில் இருந்து கிளம்பி நேராக திருவனந்தபுரத்தில் இறங்கினார். திருநெல்வேலியில் தனியார் சிமென்ட் ஆலையின் விருந்தினர் மாளிகையில் தங்கினார். கூடவே, நண்பர்களின் ஜமா. ஐ.பி.எல். அரை இறுதி ஆட்டத்தை அந்த மாளிகையில் ரசித்தவர், கருணாநிதியின் அழைப்பைப் பொருட்படுத்தாமல், இரவே தன் மதுரை இல்லத்துக்குப் போய்விட்டார். ஒரு பக்கம் டெல்லியில் இருந்து கருணாநிதிக்கு ஏக பிரஷர். 'மிக முக்கிய முடிவுகளை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உரத் துறை இருக்கிறது. ஆனால், அமைச்சரைக் காணோம்' என்று கோபக் குரல்கள். நாடாளுமன்றத்தில் உரத் துறை தொடர்பான ஒரு கேள்வி வந்தபோது, அந்தத் துறையின் இணை அமைச்சர் பதில் சொல்ல... பி.ஜே.பி., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், 'கேபினட் அமைச்சர் எங்கே போனார்? வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. இது உண்மையா?' என்று பிரச்னை கிளப்பினார்கள்.''

''அப்போ அழகிரி மேல் டெல்லி சிவக்கிறதாக்கும்?''

''ஆம்... இல்லை என்றும் சொல்ல முடியாது. காங்கிரஸ் உள்ளுக்குள் அழகிரி மீது தங்களுக்கு இருக்கும் கோபத்தை தி.மு.க-விடம் காட்டினாலும், அதை வெளிப்படையாக டெல்லியில் காட்டவில்லை. அழகிரி பற்றி பிரச்னை எழுப்பிய பி.ஜே.பி. தலைவர்களுக்கு, 'அழகிரி அவையில் இல்லை. அவர் துறை தொடர்பான கேள்விக்குத் தக்க பதில் கொடுக்கப்படும். இது நாடாளுமன்றத்தில் சாதாரணமாக நடப்பதுதானே' என்று பிரணாப் முகர்ஜியே அழகிரிக்கு ஆதரவாகப் பேசினார். காங்கிரஸ் மேலிடத்தில் இருக்கும் தி.மு.க. அனுதாபிகள் சிலர் ஒரு விஷயத்தை இப்போது வெளிப்படையாக மீடியாக்களிடம் பேசுகிறார்கள். கடந்த வருடம் ஜூன் மாதம் அழகிரி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினாராம். அதில், 'என் துறை தொடர்பான கேள்விகளுக்கு என் துறையின் இணை அமைச்சர் ஸ்ரீகாந்த்ஜனா அவையில் பதில் அளித்துப் பேசுவார்' என்று சொல்லி இருக்கிறாராம். இந்தக் கடிதத்துக்கு நாடாளுமன்ற விவகாரத் துறையும் சம்மதம் சொல்லி, பதில் கடிதம் போட்டுள்ளதாம். இன்னொரு பக்கம், சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரி, மீடியா ஆலோசனைக் குழு கமிட்டி உறுப்பினர்களுக்கு மதிய விருந்து அளித்தார். அந்த விருந்தில் மிக முக்கியமான 20 பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர். ஒரு பத்திரிகையாளர் விருந்து முடியும்வரை மீராகுமாரியிடம், 'எங்கே அழகிரி? அவர் ஏன் அவைக்கு வரவில்லை? உங்களிடம் சொல்லிவிட்டுச் சென்றாரா?' என்று துளைத்து எடுக்க... மீராகுமாரியோ பதறாமல் வழக்கமான தன் வசீகரச் சிரிப்போடு, 'பொதுவாக மத்திய அமைச்சர்கள், பிரதமர் என யார் வெளிநாடு போனாலும் சபாநாயகர் அலுவலகத்துக்குத் தெரிவிப்பார்கள். ஆனால், அழகிரி என் அலுவலகத்தில் எதையும் தெரிவிக்கவில்லை. அவருக்கு என்ன பிரச்னை என்பது எனக்குத் தெரியாது' என்றாராம்.''

''ஒரு வழியாக 26-ம் தேதி அழகிரி நாடாளுமன்றத்துக்குப் போய்விட்டாரே!''

''ஏதோ லீவு முடிந்து பள்ளிக்குப் போகும் பிள்ளைகணக்காக நாடாளுமன்றத்துக்குப் போனார். அப்போதும் மீடியாக்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் சிரித்தவாறே எஸ்கேப் ஆகிவிட்டார். அவரை மீடியாக்களிடம் இருந்து தற்காத்து அழைத்துப் போனவர் டி.ஆர்.பாலு. பொதுவாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அவசர வேலைகள் இல்லாவிட்டால், எல்லா கேபினட் அமைச்சர்களும் டெல்லியில் இருக்க வேண்டும் என்பது பிரதமரின் கட்டளை. அன்றைய தினம் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் யாராவது வந்தால், அவர்களைச் சந்திக்க வேண்டும் என்று சொல்லி இருந்தாராம் பிரதமர். அழகிரி மட்டும் இதுவரை இந்தக் கட்டளைக்குப் பணியவில்லை என்று இப்போது புதுப் பிரச்னையை எதிர்க் கட்சிகள் கிளப்புகின்றனவாம்...''

''அழகிரியின் மனசில் என்னதான் உள்ளதோ?''

''பிறர் சொல்வதுபோல... பாஷை பிரச்னை, வட இந்திய அரசியல் பிரச்னை என்பது எல்லாம் அழகிரிக்கு இல்லவே இல்லை. சொல்லப் போனால் சவாலான காரியங்களைச் செய்வதுதான் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. உரத் துறைக்கு அவர் பொறுப்பேற்றதும் சமத்தாக ஆங்கிலம் மற்றும் இந்தி டியூஷன்களுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். தனது துறைச் செயலாளர்களை அழைத்து காலை, மாலை ஆலோசனை நடத்தினார். ஆனால், 'தமிழக அரசியலில் இனி உங்களை நுழையவிட மாட்டார்கள். எப்போதும் டெல்லியே கதி என்றுதான் இருக்கவேண்டும். தமிழகத்தில் உங்கள் கை உயர வாய்ப்பில்லை' என்று யாரோ அழகிரியின் காதில் ஓத... அப்போதுதான் சகோதரச் சண்டை தொடங்கியதாகச் சொல்கிறார்கள். ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி தரப்பட, அந்தச் சண்டை இழுத்துக்கொண்டே இருக்கிறது. இப்போது, 'டெல்லியே வேண்டாம். தமிழக அரசியலில் அல்லது கட்சியில் முக்கியப் பங்கு கொடுங்கள் போதும்' என்று ஒற்றைக் காலில் நிற்கிறாராம் அழகிரி. இதனால்தான் தி.மு.க. தலைமையே திக்குமுக்காடும் அளவுக்கு கண்ணாமூச்சி காட்டி, டெல்லியின் கோபம் தி.மு.க. மீது திரும்பும் அளவுக்கு நடந்துகொள்கிறார் என்கிறார்கள். எப்படியும் அடுத்த மாதம் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துவிடுவார் என்றும் அந்த இடத்துக்கு கனிமொழியை தி.மு.க. சிபாரிசு செய்யும் என்றும் சொல்கிறார்கள்.''

ஜில் என்று கிர்னி பழ ரசத்தை ருசித்த கழுகார்,

''கேதன் தேசாய் பற்றி உம்ம நிருபர் தனியாகவே கட்டுரை அனுப்பியிருப்பார். என் காதுக்குச் சில விஷயங்கள் வந்ததையும் கேளும். மத்திய சுகாதாரத் துறையின் அமைச்சராக அன்புமணி இருந்தபோதுதான் தேசாய் பற்றிய சலசலப்பு முளைத்தது. அதாவது, 'அமைச்சருக்கு அதிகாரம் அதிகமா? இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் அதிகமா' என்ற ஈகோ போர். அன்புமணி தென்மாநிலத்துக்காரர் என்பதால், தேசாய் மீது பெரிதாக அவரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இப்போது, சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்துக்கும் தேசாய்க்கும் பனிப்போர் உச்சத்தில். அதன் வெளிப்பாடாகத்தான் ஆசாத், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி தேசாய் முகமூடியைக் கிழித்தாராம்!'' என்றவர்,

''வழக்கம் போல ஊரைச் சொல்ல மாட்டேன் பேரைச் சொல்ல மாட்டேன். தமிழக அமைச்சர் ஒருவரின் மகன் செய்த காரியத்தை பாரீர்... பாரீர்..! என அறிவாலய வட்டாரத்தில் சொல்லிச் சொல்லி மாய்கிறார்கள். அமைச்சர் மகனுக்கு முடி திருத்திக்கொண்டு இருந்த தொழிலாளி, திடீரென்று தும்மல் போட்டிருக்கிறார். என்ன நினைத்தாரோ அமைச்சர் மகன், 'எதுக்குய்யா தும்மல் போட்ட?' என கேட்டுக்கொண்டே தொழிலாளியை சுவரில் தள்ளித் தாக்கினாராம். அதனால் அந்தத் தொழிலாளியின் ஒரு கண் பாதிக்கப்பட, தற்போது மருத்துவமனையில் படுத்திருக்கிறார். அடிபட்ட கண்ணில் பார்வை வருவது ரொம்பவே சிரமம் என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்களாம்.''

''ஐயோ பாவம்!''

''நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 22 சதவிகிதத்தை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்குச் செலவிட வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதேபோல், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் ஒரு விதியை உட்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ-வான ரவிக்குமார் இரண்டு வருடங்களாக வலியுறுத்தி வந்தார். இப்போது அவரது கோரிக்கையை ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியில் 19 சதவிகிதத்தைத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்குச் செலவழிக்க வேண்டும் என்று உள்ளாட்சி மானியத்தில் சொல்லி இருக்கிறார்!'' என்றபடி ஜூட் விட்டார் கழுகார்.

சசிகலா மாற்றங்கள்!

மின்வெட்டுப் பிரச்னையை வைத்து மக்களை சந்தித்து ஜெ. முறையிட... அவரது உயிர்த் தோழி சசிகலாவோ கோயில் கோயிலாகப் போய்க்கொண்டு இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு சீர்காழி, திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோவில், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம் என ஒரு ரவுண்டுமுடித்தவர், இப்போது அடுத்த ரவுண்டில், கடந்த 26-ம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்தார். போன முறை வந்ததைவிட, இந்த முறை அவரதுவருகையில் மெகா மாற்றம்!


முன்பு பாதுகாப்புக்காக வரும் மன்னார்குடி சஃபாரி ஆட்கள், யாரையும் சசியிடம் நெருங்கவிட மாட்டார் கள். புகைப்படக்காரர்களுக்கும் கட்டாயத் தடை இருக்கும். இந்த முறை அது ரெண்டுமே நோ!


0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites