''ஓ நண்பனே...'' - உருகும் விஜய டி.ஆர்.

28 April 2010 ·

சாவிலும் சாந்தியில்லை!

'அமைதிக்குப் பெயர்தான் சாந்தி' பாடலின் மூலம்தான் நமக்கு நடிகர் ஸ்ரீநாத் அறிமுகம்! படப்பிடிப்புக்குச் சென்ற இடத்தில் ஸ்ரீநாத் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. மலையாளத்தில் 'நித்ரா' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீநாத். 'இரயில் பயணங்களில்' படத்தில் அறிமுகமாகி, தமிழி லும் சில படங்களில் நடித்துவிட்டு மீண்டும் மலையாளத்துக்குச் சென்றார். அங்கே சில படங்களில் ஜோடியாக நடித்தன் மூலம் வாழ்க் கையிலும் ஜோடியானார்கள் நடிகை சாந்தி கிருஷ்ணாவும், ஸ்ரீநாத்தும்!

சில வருடங்களில் அந்தத் திருமண பந்தம் விவாகரத்தில் முடிய... லதா என்பவரை இரண் டாவது திருமணம்

செய்துகொண்டார். இதற்கு நடுவில் மலையாளத்தில் 'ஒரு சி.பி.ஐ. டைரி குறிப்பு', 'கிரீடம்' என்று பல ஹிட் படங்களில் கனமான பாத்திரத்தை ஏற்று, குணச்சித்திர நடிகராக அடுத்த ரவுண்ட் வந்தார். கடந்த சில வருடங்களாக மலையாள டி.வி. சீரியல்களில் கலக்கினார்.

டைரக்டர் பத்மகுமாரின் இயக்கத்தில் 'ஷிகார்' என்ற புதிய படத்தில் லாரி டிரைவர் கதா பாத்திரத்தில் மோகன்லால் நடிக்க, அவருக்கு துணையான ஒரு ரோலில் ஒப்பந்தமாகி இருந்தார் ஸ்ரீநாத். படத்தின் ஷ¨ட்டிங் எர்ணாகுளம் அருகே கோதமங்கலத்தில் நடந்து வந்தது. அங்கு மரியா இன்டர்நேஷனல் ஹோட்டலில் படப் பிடிப்புக் குழு தங்கி இருந்தது. கடந்த 23-ம் தேதி காலையில் தன் அறையில் இடது கை மணி கட்டு அறுக்கப்பட்டு, ரத்தம் வழிய இறந்து கிடந் திருக்கிறார் ஸ்ரீநாத். விசாரணைக்குப் பின்னர், 'அவர் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்' என்ற முடிவுக்கு வந்த போலீஸார், உடலை போஸ்ட்மார்டம் செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

திருவனந்தபுரத்தில் 25-ம் தேதி மீடியாவிடம் பேசிய ஸ்ரீநாத்தின் சகோதரர் சத்தியநாத், ''சினிமா உலகில் கால்வைத்த நாள் முதல், பல பிரச்னைகளைச் சந்தித்தவர் ஸ்ரீநாத். அவரது யதார்த்தமான நடிப்பைக் கண்டு பொறாமைப்பட்டு பல பிரபல நடிகர்கள் அவனை மிகக் கடுமையாக அவமானப்படுத்தி இருக்கிறார்கள். சொந்த வாழ்க்கையிலும்கூட எழாத பிரச்னைகளே இல்லை. இருந்தும், எதற்கும் மனம் தளராதவன் திடீரென்று தற்கொலை செய்துகொண்டான் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. மலையாள நடிகர்கள் சங்கமான 'அம்மா'வில் அவன் உறுப்பினராக இல்லை. அவனை அதில் இணையச்சொல்லி தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள். 'ஷிகார்' ஷ¨ட்டிங்கிலும் அந்தப் பிரச்னை எழுந்திருக்கிறது. சங்கத்தில் இணைய ஸ்ரீநாத் மறுத்ததாலேயே, அவனை டார்ச்சர் செய்திருப்பார்கள் என்று தெரிகிறது. ஸ்ரீநாத்தை யாராவது கொன் றிருக்க வேண்டும். அல்லது தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு அவனைத் தூண்டியிருக்க வேண்டும்'' என்று சொல்லியவர், கேரள முதல் வரிடம் நியாயம் கேட்டு மனுக் கொடுக்கும் முயற்சிகளில் இருக்கிறார்.

கடந்த 2004-ம் ஆண்டில் கேரள சிவசேனாவில் சேர்ந்த ஸ்ரீநாத், கடந்த நாடாளுமன்றத் தேர் தலின்போது திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் தொகுதியின் சிவசேனா வேட் பாளராகக் களம் இறங்கினார். இதனால், ஸ்ரீநாத் தற்கொலைக்கு நியாயம் வேண்டிப் போராட்டத்தில் குதித்து இருக்கிறது கேரள சிவசேனா. ''மோகன்லாலுடன் இந்தப் புதுப் படத்தில் நடிப்பதை நினைத்து ரொம்பவும் பூரிப்பில் இருந்தார் ஸ்ரீநாத். ஆனால், 'அம்மா'வில் அவர்இல்லாததைக் காரணம் காட்டி, படத்தில் அவருக்குத் தருவதாகச் சொல்லி இருந்த முக்கியமான ரோலில் இருந்து தூக்கிவிட்டு, டம்மி ரோலைத் தந்து இருக்கிறார்கள். ஸ்ரீநாத்துக்குச் சொல்லாமலே அவர் தங்கி இருந்த அறையை செக்-அவுட் செய்து அவமானப்படுத்தி யதாகவும் தெரிகிறது. ஸ்ரீநாத்தின் மரணத்துக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடத் தயாராகி விட்டோம்!'' என்கிறார் திருவனந்தபுரம் மாவட்ட சிவசேனா தலைவர் அஜீ.

மோகன்லாலிடம் பேசினோம். ''திறமையான கலைஞன் யாராக இருந்தாலும், என்னோடு இணைத்துக்கொள்வதுதான் என் வழக்கம். 'ஷிகார்' படத்துக்காக தமிழ்த் திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனியை நானே சிபாரிசு செய்திருக்கிறேன். காரணம், அந்த வேடத்துக்கு அவர் மிகச் சரியாக இருப்பார் என்பதுதான். இப்படித் தொழில் விஷயத்தில் பாரபட்சம் பார்க்காமல் செயல் படும் என்னை, ஸ்ரீநாத் விவகாரத்தில் இழுத்துவிடுவது வேதனை தருகிறது!'' என்று கொதித்தார்.

'ஷிகார்' திரைப்பட யூனிட்டோ, ''ஷ¨ட்டிங் வந்த நாளில் இருந்தே அவர் எப்போதும் குடித்துக்கொண்டே இருந்தார். குடும்ப விவகாரமோ என்னவோ தெரியவில்லை... தொடக்கத்தில் இருந்தே குடியும் கவலையுமாக இருந்தவர், திடீரென இந்தத் துயர முடிவை எடுத்து இருக்கிறார். அந்தக் கலைஞனுக்காக நாங்கள் வருந்துகிறோம்!'' என்கிறார்கள்.

சாவிலும் சாந்தி இல்லை!

''ஓ நண்பனே...''

- உருகும் விஜய டி.ஆர்.

''கோடம்பாக்கத்து வீதிகளில் வாய்ப்புத் தேடி அலைந்த என் சமகால இளைஞன்தான் ஸ்ரீநாத்தும். நாங்கள் அவ்வப்போது ஒன்று கூடி எங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோம். அதன் பிறகு, 'ஒருதலைராகம்' வெற்றியைத் தொடர்ந்து 'இரயில் பயணங் களில்...' பட வேலைகளில் நான் இருந்த நேரம். ஹீரோ ஒரு பாடகர் என்பதால், நன்றாகத் தமிழ் பேசக்கூடிய நடிகரைத் தேடிக்கொண்டு இருந்தேன். அப்போதுதான் ஸ்ரீநாத் என்னைத் தேடி வந்து வாய்ப்பு கேட்டார். ஸ்ரீநாத் கேரளக்காரர் என்பதால் அப்போது அட்சர சுத்தமாகத் தமிழ் பேச வராது.

எனவே, 'வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை தேடிவர ஆராதனை செய்யட்டுமா' என்ற பாடலை நானே பாடிக்காட்டி அவரை நடிக்கச் சொன்னேன். முதலில் திணறினாலும் உடனே அந்தப் பாடல் வரிகளை அப்படியே மலையாளத்தில் எழுதிவைத்துக்கொண்டு மனப்பாடம் செய்யத் தொடங்கிவிட்டார். விடாப்பிடியான அவரது அந்த ஆர்வம் எனக்குப் பிடித்தது. 'தினமும் நேரம் ஒதுக்கி பயிற்சி பண்ணுங்க. என்னோட படத்துல நீங்க நடிக்கிறீங்க'ன்னு சொன்னேன். ஆனாலும் நேரக் கணக்கு எதுவும் பாராம தினமும் என்கிட்டே வந்து படத்தைப் பற்றியும் அவரது கேரக்டர் பற்றியும் மணிக்கணக்கில் பேசி பயிற்சி எடுத்துப்பார்.

அந்தப் படத்துல வர்ற 'நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம்விடுவேனா...' பாடலைப் படம்பிடிக்கும்போது ஸ்ரீநாத்துக்கு ஒட்டுத் தாடி வைத்திருந்தோம். அப்போது வேடிக்கையாக என்னிடம், 'கொஞ்ச நேரத்துக்கு இந்த ஒட்டுத் தாடியை வெச்சிருப்பதே வியர்வை, அரிப்புன்னு பெரும் அவஸ்தையா இருக்கு. எப்படி நீங்க இவ்வளவு பெரிய தாடியை மெயின்டெய்ன் பண்றீங்க?''ன்னு என் தாடியைத் தடவிக் கேட்டார். இது 1980-ல் நடந்த சம்பவம். இத்தனை வருடங்கள் கழித்து இப்பவும் நான் தாடியோடுதான் இருக்கிறேன். ஆனா, உரிமையோட என் தாடியைத் தொட்டுக் கேள்வி கேட்கத்தான் ஸ்ரீநாத் இல்லை!'' என்கிறார் சோகமாக விஜய டி.ஆர்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites