'கடல் நீர் கண்ணீர் ஆகிறது?!'

24 April 2010 ·

கதறும் மீனவர்கள்...
'கடல் நீர் கண்ணீர் ஆகிறது?!'

காஞ்சிபுரம் மாவட்டம், நெம்மேலி ஊராட்சியில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்க, ''எங்களின் வாழ்க்கையை அழித்து விட்டு, சென்னைக்குக் குடிநீரா..?' என்று சீறத் தொடங்கியிருக்கின்றன நெம்மேலி சுற்றுவட்டார மீனவ கிராமங்கள்!

கிழக்குக் கடற்கரைச்சாலையில் மாமல்லபுரத்துக்கு முன்னால் சாலை யோரம் நெம்மேலி, கிருஷ்ணன்காரணை ஆகிய கிராமங்களில், அறநிலையத் துறை யின்

கட்டுப்பாட்டில் உள்ள 40 ஏக்கர் நிலம் இந்த ஆலைக்காகக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் கடல் நீரிலிருந்து தினசரி 10 கோடி லிட்டர் குடிநீர் தயாரிக்கப்படவிருக்கிறது. ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான இந்தத் திட்டத்துக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அடிக்கல் நாட்டினார். கடந்த ஒருமாதமாக பணிகள் முழு வேகத்தில் நடந்து வரும் நிலையில்தான் எதிர்ப்பும் பலமாக எழுந்துள்ளது. இந்த

ஆலைக்கு ஆரம்பத்தில் மீனவ மக்கள் மத்தியில் சிறிய அளவில் எதிர்ப்பு இருந்து வந்தது. ஆனால், இப்போது

காஞ்சிபுரம் மாவட்ட கடலோர மீனவ கிராமங்கள் அனைத்திலும் எதிர்ப்பு வலுத்து விட்டது! அரசுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்க கடந்த 20-ம் தேதி, ஆலைக்கு அருகில் உள்ள சூளேரிகாட்டுக்குப்பம், புதிய கல்பாக்கம், நெம்மேலிக்குப்பம் ஆகிய கிராமங்கள் உள்பட 17 மீனவர் கிராமங்களின் தலைவர்கள் கூடி... 'கடல்நீரைக் குடிநீராக்கும் திட்ட எதிர்ப்புக் குழு' என்ற கூட்டமைப்பை உருவாக்கி உள்ளனர்.

முதல் கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 46 மீனவர் கிராமங்களிலும் வரும் 26-ம் தேதி கறுப்புக்கொடி ஏற்றுவது என்றும், 30-ம் தேதி நீலாங்கரையில் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் எதிர்ப்புக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

தென்னிந்திய மீனவர் நல சங்கத் தலைவர் கு.பாரதி நம்மிடம், ''முதலில், இந்தத் திட்டத்தின் மூலம் சென்னை மக்களுக்குக் குடிநீர் தரப்போவதில்லை. பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள பெரிய பெரிய ஐ.டி. கம்பெனிகளுக்காகத்தான் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதே உண்மை!'' என்று பட்டென்று உடைத்தவர் மேலும்,

''குடிநீராக்கும் நிலையத்திலிருந்து தினமும் 265 மில்லியன் லிட்டர் கடல்நீரை எடுத்து அதிலிருந்து 100 மில்லியன் லிட்டர் குடிநீராக்கப்படும் என அறிவித் துள்ளார்கள். மீதமுள்ள அதிகப்படியான உப்புநீரை மீண்டும் கடலுக்குள்கொண்டுவிடுகிறார்களாம். 32 சதவிகிதம் உப்புத்தன்மை உள்ள கடலில் மீன்வளம் இருக்கும். 35 சதவிகிதம் உப்புத்தன்மை வந்துவிட்டாலே, அந்தக் கடல் 'சாக்கடல்' ஆகி விடும். அங்கு மீன்வளம் என்பதே இல்லாமல் போகும். புதிய ஆலையிலிருந்து கடலுக்குள் கொட்டப்படும் வேதிப்பொருள்களால் மீன்கள் மட்டும் அல்லாமல், நுண்ணிய உயிர்கள்கூட இல்லாமல் போகும். ஒரு கட்டத்தில் தொழிலுக்கு வாய்ப்பே இருக்காது. மீனவர்கள் அந்த இடத்தைவிட்டே வெளியேற வேண்டிய அபாயம் ஏற்படும்!'' என்கிறார் பாரதி.

''ஆலையை ஒட்டியுள்ள மீனவ கிராமங்களுக்கு மட்டுமின்றி, படிப்படியாக காஞ்சி மாவட்ட மீனவ கிராமங்கள் அனைத்துக்குமே இதனால் பாதிப்பு...'' என அபாய சைரனை ஒலிக்கும், தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோசுமணி, ''கடலில் நீரோட்டங்கள் உண்டு. இரவு நேரத்தில் மாமல்லபுரம் கடலில் வலை போட்டால், காற்றும் கடல் நீரோட்டமும் ஏழெட்டு கிலோமீட்டர் தொலைவுக்குக் கூட வலையை இழுத்துச் செல்லும். அதன் போக்கில் சென்றுதான் மீன்பிடிப்பது வழக்கம். இப்படி ஓர் இடத்தில் கடல்நீரில் மாற்றம் ஏற்பட்டால், அடுத்தடுத்து அது மற்ற பகுதிகளுக்கும் பரவும். மீன் கிடைக்காதவர்கள் ஓர் இடத்திலிருந்து வேறு இடத்துக்குப் போவார்கள். ஏற்கெனவே, அங்கு மீன் பிடிப்பவர்களுக்கும் இவர்களுக்கும் மோதல் ஏற்படும். இப்போதே, மீன்வளம் இல்லாமல் வெவ்வேறு கிராமத்துக்காரர்கள் மோதிக் கொள்கிறார்கள். ஓராண்டுக்கு முன்பு பட்டிப்புலம், புதுநெம்மேலிக்குப்பம் மீனவர் கிராமங்களுக்குள் வலை தொடர்பாக, மோதல் ஏற்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டார். ஆகவே, இந்த ஆலை வந்தால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும்!'' என்றார்.

நெம்மேலி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான சீனிவாசன், சூளேரிகாட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் நம்மிடம், ''திட்டம் வருவதற்கு முன்பாக, தாசில்தார், குடிநீர்வாரியப் பொறியாளர் உள்பட அதிகாரிகள் வந்து பேசினார்கள். திட்டத்தால் மீன்வளத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொன் னார்கள். 'அப்படியானால், நல்ல குடிநீராக்கிவிட்டு கடலில் கொட் டப்படும் அதிக உப்பு நீரில் மீனை வளர்த்து சோதனை செய்து பார்த் தீர்களா?' என்று கேட்டேன். அதற்கு பதில் சொல்லவே இல்லை. எனவே, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை அறவே ஒழிக்கவேண்டும். அதையும் மீறி அவர்கள் குடிநீரை எடுத்தால், எங்கள் சமுதாயத்தின் ரத்தத்தை உறிஞ்சித்தான் தண்ணீர் எடுக்கிறார்கள் என்று அர்த்தம்!'' என்று ஆவேசப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியைத் தொடர்புகொண்டோம். நாம் சொன்னவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டவர், ''எனக்கு அவசரமாக ஒரு மீட்டிங் இருக்கிறது. அப்புறம் பேசலாமே!'' என்று போனை கட் செய்து விட்டார்!

கைபம்புகளில் உப்பு நீர்!

கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்காக, கடலோரம் உள்ள நிலத்தில் பல இடங்களில் ஆழமாகத் தோண்டிவருகிறார்கள். அந்த இடத்தில் சிறிதளவு ஆழம் தோண்டினால்கூட ஊற்றைப் போல தண்ணீர் வரும். கட்டுமானத்துக்கு வசதியாக அந்தத் தண்ணீரை எடுத்து, பெரிய பைப் மூலம் கடலுக்குள் விட்டுவருகின்றனர். ஆலை அமையும் இடத்தில் தண்ணீரை எடுப்பதால், நீர் அழுத்தம் காரணமாக கடல்பகுதியிலிருந்து வேகவேகமாக ஊருக்குள் உப்புநீர் புகுந்துவருகிறதாம். இதனால், சூளேரிக்காட்டுக்குப்பத்தில் உள்ள கைபம்புகளில் இப்போது உப்புநீர்தான் வருகிறது என்கிறார்கள் அந்த கிராமத்து மக்கள்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites