கருணாநிதி கேட்ட கேள்வி!

24 April 2010 ·

கருணாநிதி கேட்ட கேள்வி!

மைச்சரவை மாற்றம் வரும்... விரைவில் வந்து சொல்கிறேன்!' - கழுகாரின் குறுந்தகவல் மட்டும் நம் கைபேசியில் ஒளிர... சில நிமிடத்தில் ஆஜர் போட்டார் கழுகார்!

''அமைச்சரவை மாற்றம் மத்தியிலா, மாநிலத்திலா?'' என்றோம்.

''மாநிலத்தில்தான். பரபர திருப்பம் கொண்ட மாற்றமெல்லாம் இல்லை! ரிட்டயர்மென்ட் மாற்றம்தான். முதல் நபர் ஆற்காட்டார். ஒரு பக்கம், அரசால் சமாளிக்கவே முடியாத மின்வெட்டு விமர்சனங்களுக்கு ஏதாவது வடிகால் கொடுத்தாக வேண்டும். இன்னொரு பக்கம், கடந்த இதழிலேயே நாம் பேசியதுபோல உடல்நிலை..! ஏப்ரல் 21---ம் தேதி ஆற்காட்டாருக்கு பிறந்த நாள். நீண்ட இடைவேளைக்குப் பிறகு புத்துணர்ச்சியோடு தொண்டர்களை சந்திப் பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நானும் அந்தப் பக்கம் தலை காட்டினேன். ஆனால், பெரிதாக தொண்டர் படை அவரது அண்ணாநகர்வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.''

''அடடா!''

''வந்திருந்தவர்களில் சிலரோ உணர்ச்சியே இல்லாமல் பெயருக்கு, 'பெரியவர் வீட்டுலதான் இருக்காரா... எழுந்துட்டாரா? பார்த்துட்டு கிளம்புறோம்' என்கிற ரீதியில்தான் அந்த வீட்டுக்கு வந்தார்கள். ஒன்பது மணிவாக்கில் பனியன், கொஞ்சம்

கசங்கியிருந்த வேட்டியோடு ஹாலுக்கு வந்தார் ஆற்காட்டார். எத்தனை கூட்டங்களை நடத்தி, எத்தனை கும்பல்களைக் கட்டுப்படுத்திய மனுஷர்... வாழ்த்த வந்தவர்களை பலவீனமான ஒரு புன்னகையோடு பார்த்தார். ஆனால், குரல் இளைக்கவில்லை. 'என்னய்யா எப்படியிருக்கீங்க. கட்சி வேலையெல்லாம் நடக்குதா?' என்று கணீர் குரலில் விசாரித்தார். கொஞ்ச நேரத்தில் ஒரு சில அமைச்சர்கள், முதல்வர் மகள் செல்வி ஆகியோர் வந்திருக்கிறார்கள். 'தலைவருகிட்ட நான் ஏற்கெனவே சொல்லிட்டேம்மா, வீட்டுல ரெஸ்ட் எடுத்துட்டு உடம்பைப் பார்த்துக்கிறேன். துறையை நீங்களே பாருங்க தலைவரேன்னு சொன்னேன். இன்னும் பதில் வரலைம்மா' என்றாராம் செல்வியிடம் ஆற்காட்டார்.''

''ஓஹோ!''

''அன்று மாலை ஆற்காட்டார் நேரில் முதல்வரை சந்தித்தபோது, 'என்னய்யா இன்னிக்கும் விசிட்டர்ஸைப் பார்த்தியாமே? உடம்பை கவனிச்சிக்கோ...' என்று உரிமையோடு சொன்னாராம் கருணாநிதி. அப்போதும் தான் அமைச்சரவையிலிருந்து விலகி ஓய்வெடுக்கப் போவதை வலியுறுத்தியிருக்கிறார் ஆற்காட்டார். முதல்வரிடமிருந்து ரியாக்ஷன் அங்கே இல்லை என்றாலும், மனதளவில் முடிவு செய்துவிட்டாராம்.''

''மாறப் போகும் இன்னொருவர் யாரோ?''

''முதுமையில் வாடும் கோ.சி.மணிதான்...'' என்ற கழுகார்,

''20-ம் தேதி கோபாலபுரம் வீட்டில் குஷி மூடில் இருந்திருக்கிறார் கருணாநிதி. அவருடன் துரைமுருகன், பொன்முடி, நேரு, ஐ.பெரியசாமி ஆகியோரும் இருந்திருக்கிறார்கள். 'என்னய்யா நேரு... அண்ணன் தம்பி சண்டையெல்லாம் எந்த அளவுக்கு இருக்கு?' என்று கருணாநிதி கேட்டாராம். நேரு சின்னச் சிரிப்புடன் அமைதியாக இருக்க... 'உன் வீட்டுல இல்லய்யா... என் வீட்டைப் பத்தித்தான் கேட்டேன். நீயும், பெரியசாமியும் ரெண்டு பக்கமும் மாறி மாறிப் பேசுவீங்களே... அதான் கேட்டேன்' என்றாராம் முதல்வர். தமாஷ் பண்ணுகிறாரா... ஆழம் பார்க்கிறாரா என்று புரியாமல் நேருவும் பெரியசாமியும் அமைதியைத் தொடர... துரைமுருகன்தான் அமைதியைக் கலைத்தாராம்! 'தலைவரே, பா.ம.க-வை மட்டும் கூட்டணிக்குள்ளே கொண்டு வந்துடக் கூடாது' என்று வேறு பக்கம் திசை திருப்பினாராம்! உடனே ஐ.பெரியசாமி, 'வட மாவட்டத்துல சிறுத்தைகளையும், பா.ம.க-வையும் விட்டுட்டு தேர்தலை சந்திக்கறது நல்லதில்லை. அ.தி.மு.க. பக்கம் கம்யூனிஸ்ட்கள், தே.மு.தி.க. போயிடுச்சுன்னா நமக்கு ஒவ்வொரு தொகுதியும் ரொம்ப சவாலா இருக்கும்' என்றாராம். இதற்கு பொன்முடி ஏதோ ஆட்சேபனை தெரிவித்து விளக்கம் கொடுக்க முயல, 'இப்ப இதுக்கு அவசரம் என்ன?' என்று முற்றுப்புள்ளி வைத்தாராம் முதல்வர்!''

''சரி!''

''தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரின் உறவினர்கள் திடீரென்று டெல்லிக்குப் பறந்தார்கள். அங்கிருக்கும் ஒரு முக்கிய சொத்தை வாங்குவதுதான் பயணத்தின் நோக்கமாம். இதை மோப்பம் பிடித்த மத்திய உளவுத் துறை, அவர்களைப் பின்தொடர்ந்திருக்கிறது. அதோடு, பிரபல தொழிற்சாலை ஒன்றின் டெல்லி அலுவலகத்துக்குச் சென்ற அந்த உறவினர்கள், ஏதோ பேச்சுவார்த்தை நடத்திவிட்டுத் திரும்ப... அந்த விவரங்களையும் கண்டறிந்து குறித்துக் கொண்டதாம் மத்திய உளவுத்துறை!''

''என்னத்தைச் சொல்ல!''

''சில நாட்களுக்கு முன்பு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் ஒரு ரிசார்ட்ஸில் மிக முக்கிய பா.ம.க. தலைவர்களை டாக்டர் ராமதாஸ§ம், அன்புமணியும் சந்தித்து விருந்தளித்தார்கள் என்று சொன்னேனல்லவா? இரண்டு தினங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு ரிசார்ட்ஸில் மறுபடி அதேபோல் சந்திப்பும் விவாதமும் நிகழ்ந்திருக்கிறது. இம்முறை, 'உங்களுக்காக கட்சி எவ்வளவோ செஞ்சது. நீங்க பதிலுக்கு எதையும் செய்யலை. நீங்கள் எல்லாம் துரோகிகள்...' என்று ஆரம்பித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நோக்கி காடுவெட்டி குரு சீறியிருக்கிறார். 'டாக்டரின் மனசாட்சி பேசுகிறது' என்று ரொம்ப நேரம் பொறுமை காத்த சில மாவட்டச் செயலாளர்கள், ஒரு கட்டத்தில் கூட்டாக எழுந்திருக்கிறார்கள். 'படிச்சவனுக்குத்தான் பதவினு சொன்னீங்க! பயிலரங்கத்துல பரீட்சை எழுதி... அதில் மார்க் எடுத்தாத்தான் அந்தஸ்துன்னு சொன்னீங்க. படிச்சவன் ஒருத்தன் பதவிக்கு வந்து படிக்காத முப்பது விசுவாசிகளை வெளியில விரட்டினான். போலீஸ் ஸ்டேஷன், வழக்குன்னு வந்தபோதும் படிச்சவன் பதுங்கிட்டான். பயப்படாம பாயுறவன் இப்போ கட்சியிலே குறைஞ்சு போயிட்டான். இதுதான் யதார்த்தம். நம்மளை நாமே குத்தம் சுமத்தாம நடக்க வேண்டியதைப் பார்க்கணும்' என்று அந்த மாவட்டச் செயலாளர்கள் டாக்டரிடம் பொங்கித் தள்ள... குருவின் குரல் ஒடுங்கிவிட்டதாம். இடையில் புகுந்து அனைவரையும் சமாதானப்படுத்தினாராம் டாக்டர். இதுபோலவே அடுத்தடுத்து தொடரப் போகும் உள்கட்சி சந்திப்புகளுக்கு டாக்டர் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா? 'மூளையை உலுக்கும் கூட்டம்'!'' - சொல்லிவிட்டு விண்ணைத் தொட்டார் கழுகார்.

சில்மிஷ செயலாளர்

சிறுபான்மை சமூகம் நடத்திக் கொண்டிருக்கும் சென்னையின் பிரபல கல்லூரி சில வருடங்களுக்கு முன்புதான் பவளவிழாவைக் கொண்டாடியது! 'அந்தக் கல்லூரியின் மாணவர்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் செயலாளர்' என்று கல்லூரிக்குள்ளேயே புகைந்து கொண்டிருந்த நெருப்பு... இப்போது வளாகத்தைத் தாண்டி வெளியில் கசியத் துவங்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட செயலாளர் இரவில் திடீரென்று மாணவர் களின் அறைக்குள் புகுந்து திடுக் கிளப்புகிறாராம்! தனக்கு விருப்ப மான மாணவர்களை கையோடு அழைத்துக்கொண்டு போய் தன் அறையில் தங்க வைத்துக் கொள்கிறாராம். அந்த பலான செயலாளர் சென்னையின் மிக முக்கிய அரசியல் புள்ளியின் மகனிடமும் தன் விளையாட்டைக் காட்டியிருக்கிறாராம். இந்த விஷயம் அந்தப் புள்ளியின் கவனத்துக்குப் போக... அவர் சில காவல் துறை அதிகாரிகளை சந்தித்தபடி இருக்கிறாராம். விவகாரம் எந்த நேரமும் தலைப்புச் செய்தி ஆகலாம் என்கிறார்கள் காக்கிகள்!

மெளனசாமி மட சலசலப்பு!

கும்பகோணத்தில் இருக்கிறது மௌனசாமிகள் மடம். அறுபத்துமூவர் குருபூஜை மடமாக இருந்த இந்த மடத்துக்கு வந்து சேர்ந்த மௌனசாமிகள், பெரும் மகானாக வாழ்ந்தவர். உலகெங்கும் அவருக்கு பக்தர்கள் இருக்கிறார்கள். மௌனசாமிகளின் மறைவுக்குப் பிறகு அவரது ஜீவசமாதி இங்கு அமைந்தது.

வரும் 25-ம் தேதி சாமிகளின் 111-வது குருபூஜை விழா நடக்கும் நிலையில், மடத்தைப் பற்றிய சலசலப்புகள் கிளம்பியுள்ளன. தற்போது, மடத்தை நிர்வகித்து வரும் ஒருவர் மடத்தின் சொத்துகளை வைத்து ஏகமாக விளையாடி விட்டதாகவும், இந்த வருடம் அவரை குருபூஜை செய்ய விடாமல் தடுத்து தாங்களே குருபூஜை செய்யப் போவதாகவும் சிலர் பரபரப்பு கிளப்பிவிட்டனர். ஆனால், 'மடத்துக்கென்று சொத்துகள் ஏதும் இல்லாத நிலையில் அதை எப்படி அபகரித்துக் கொள்ள முடியும்?' என்று கேள்வி எழுப்பும் மறு தரப்பினர், குருபூஜை விழாவே பக்தர்கள் பங்களிப்பில்தான் நடக்க இருப்பதாகச் சொல்கிறார்கள். குருபூஜை நாளன்றுதான் தெரியும் இந்த மோதலின் வீரியம்!

'புத்தர் சிரித்தார்!'

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஆறு மாவட்டச் செயலாளர்கள் திடீரென நீக்கப் பட்டிருக்கிறார்கள். 'கட்சியின் மாவட்டச் செய லாளர்களின் களப்பணிகளை கண்காணிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டது. அக்குழு அளித்த பரிந் துரைப்படிதான் நீக்கம் நடைபெற்றிருக்கிறது' என்பது கட்சித் தலைமையின் வாதம். ஆனால், நீக்கப் பட்டவர்களோ, 'அரசியல் அனுபவமே இல்லாமல் கட்சிக்குப் புதிதாக வந்த ஓர் இளைஞரும் இவ ரோடு பணிபுரிந்து வரும் ஒருவரும் சேர்ந்து சில நோக்கங்களோடு கொடுத்த ரிப்போர்ட்தான் இப்படி விளைவு உண்டு பண்ணிவிட்டது' என்கிறார்கள்! 'புத்தர் சிரித்தார்!' என்று இந்த அதிரடி நீக்கத்துக்கு சங்கேத வார்த்தையும் கொடுத்துப் புழுங்குகிறார்கள்.

நன்றி விகடன்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites