சீனிவாச சர்ச்சைகள் 'அவர் அசைக்க முடியாத அரசியல் சக்தி!'

24 April 2010 ·

சீனிவாச சர்ச்சைகள்
'அவர் அசைக்க முடியாத அரசியல் சக்தி!'

.பி.எல். தலைவர் லலித் மோடி வீசிய குற்றச் சாட்டில், மத்திய அமைச்சர் சசிதரூர் விக்கெட் வீழ்த்தப்பட்ட பிறகும் அதிர்வலைகள் ஓயவில்லை... ஏலத்தில் முறைகேடுகள், கிரிக்கெட் சூதாட்டம், வரி ஏய்ப்பு என்று ஐ.பி.எல்-லை சுற்றி பரபரப்புகள் பற்றி எரிகின்றன! இந்த சூட்டில், ஐ.பி.எல். கிரிக்கெட்டை டி.வி-யில் ஒளிபரப்ப உரிமை பெற்ற நிறுவனங்கள், அணிகளை ஏலத்தில் எடுத்த உரிமையாளர்கள், பங்கு தாரர்களின் வீடுகள் என எங்கும்வருமானவரித் துறையினர் புகுந்து புறப்பட... அந்த ரெய்டு புயலில் தமிழகமும் தப்பவில்லை!இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்... இவர்தான் சென்னை சூப்பர் கிங்ஸின் உரிமையாளர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டின் செயலாளர்! அவரது சென்னை அலுவலகத்திலும் அதிரடியாக வருமானவரி ரெய்டு நடந்திருக்கிறது.இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் விளையாட்டிலும், அரசியல் களத்திலும் எப்போதுமே பரபரப்பான பிரமுகராக வலம் வந்திருக்கிறார். சீனிவாசனை நன்கு அறிந்தவர்களிடம் பேசினோம்.

''அமெரிக்காவில் கெமிக்கல் இன்ஜினீயரிங் முடித்து விட்டு, அப்பா நாராயணசாமியின் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனப் பொறுப்புக்கு வந்தார் சீனிவாசன். சிமென்ட், சர்க்கரை, எரிசக்தி, வர்த்தகம் மற்றும் நிதி ஆகிய துறைகளில் கொடிக்கட்டிப் பறக்க ஆரம்பித்தார். 3,500 கோடி ரூபாய் புழங்கும் அளவுக்கு தொழிலில் உயர்ந்த சீனிவாசனுக்கு, அரசியலில் பெரிய செல்வாக்கு உண்டு. மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனுடன் நெருக்கமாக இருந்தார். கடந்த 2001 தேர்தலில் அ.தி.மு.க. வந்து ஆட்சியில் அமர்வதற்கு சிமென்ட் விலை உயர்வும் முக்கியக் காரணமாக இருந்தது. 'சிமென்ட் நிறுவனங்கள் எல்லாம் சிண்டிகேட் போட்டுக்கொண்டு விலையை உயர்த்திவிட்டன. இதற்கு காரணமே முரசொலி மாறன்தான்' என்று 2001 தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா காட்டமாகச் சொன்னார். ஆட்சிக்கு வந்த பிறகு 25.4.2002 அன்று சட்டசபையிலேயே சீனிவாசனை கடுமையாக விமர்சித்த ஜெ., 'சிமென்ட் சீனிவாசன், முரசொலி மாறனின் பினாமி' என்றும் பேசினார். அதோடு, அரசுக்கு சொந்தமான 77 ஏக்கர் நிலத்தை தி.மு.க. அரசு, சீனிவாசனுக்கு குத்தகைக்கு விட்டது பற்றியும் அதிரடி கிளப்பினார்...'' என்றவர்கள், அந்த நில விவகாரத்தையும் சொன்னார்கள்...

''சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ-வின் 77 ஏக்கர் நிலம், கடந்த 1996-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் தொடக்கத்தில் சீனிவாசன் பொறுப்பில் வழங்கப்பட்டது. 'இந்த இடத்தில்தான் காஸ்மோபாலிட்டன் கிளப்பின் அனெக்ஸ்ஸ§ம், கோல்ப் ஃபெடரேஷனும் நடத்தப்பட்டது. இதற்கான குத்தகைத் தொகைகூட நிர்ணயிக்கவில்லை. அதன்பிறகு ஆட்சியின் இறுதியில், கருணாநிதி 30 ஆண்டுகளுக்கு அந்த குத்தகையை நீட்டித்தார். காரணம், தி.மு.க-வோடு சீனிவாசனுக்கு உள்ள நெருக்கம்தான். இதற்காக கருணாநிதி மீது நடவடிகை எடுப்போம்' என்றெல்லாம் சட்டசபையில் ஜெயலலிதா குற்றம் சாட்டி இருக்கிறார். ஆனால், தன்னை நோக்கி வரும் விமர்சனங்களுக்கு எப்போதும் சீனிவாசன் பதில் சொல்லி, சர்ச்சைக்கு எண்ணெய் வார்ப்பது கிடையாது. தன்னைச் சுற்றி நடப்பவற்றை கூர்ந்து கவனிப்பார், அவ்வளவே!

அதன்பிறகு, 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பழைய மகாபலிபுரம் சாலையில் கருங்குழிப்பள்ளம் என்ற இடத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க 50 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு குத்தகையாகக் கொடுத்தது தமிழக அரசு. அப்போது சங்கத்தின் தலைவராக இருந்தவர் சீனிவாசன்தான் (இப்போதும் அவர்தான் தலைவர்!). தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு கோடிக்கணக்கில் பணம் இருந்தும், அரசு நிலத்தை இந்த சங்கத்துக்கு குத்தகைக்கு கொடுத்தது அந்த சமயத்தில் கூர்ந்து கவனிக்கப்பட்டது...'' என்றெல்லாம் விவரித்தனர்.

ஐ.பி.எல். கொடுக்கல் - வாங்கல்கள் பற்றி நன்கறிந்த சிலர், ''2008-ம் ஆண்டுதான் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொருளாளராக இருந்த சீனிவாசன் (தற்போது செயலாளராக இருக்கிறார்) மீது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஏ.சி.முத்தையா வழக்கு போட்டார். 'வாரியத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பது வாரிய விதிமுறை. சென்னை சூப்பர் கிங்ஸின் பங்குதாரராக அவர் எப்படி இருக்க முடியும்? அவருக்காகவே விதிமுறைகள் திருத்தப்பட்டன. அவருடைய பொருளாளர் பதவியைப் பறிக்கவேண்டும்' என்றெல்லாம் சொல்லி இருந்தார் முத்தையா. ஆனால், அந்த வழக்கில் சீனிவாசன்தான் ஜெயித்தார்!'' என்று சுட்டிக் காட்டினர்.

முன்பு அண்ணா சாலையில் இருந்த இந்தியா சிமென்ட்ஸ் அலுவலகம், சில மாதங் களுக்கு முன்புதான் சாந்தோம் பகுதியில் பிரமாண்டமான ஹைடெக் கட்டடத்துக்கு மாறியது. இங்கேதான் வருமான வரித் துறையினர் புதனன்று அதிரடியாக சோதனை போட்டனர். இந்த அலுவலகத்தில் ரிமோட் மூலம் திறக்கப்படும் இரும்பு கேட், தனியார் செக்யூரிட்டி அதிகாரிகளின் பலத்த பாதுகாப்பு உண்டு. உள்ளே எந்த வாகனம் நுழைந்தாலும் ஸ்கேனிங் செய்ய நவீன வசதிகள் இருக்கிறதாம். வழக்கமாக இது போன்ற ரெய்டுகளில் தனியார் டிராவல்ஸ் வண்டிகளை புக் செய்து கிளம்பும் வருமான வரி அதிகாரிகள், இந்த முறை சிவப்பு விளக்கு போட்ட அலுவலக காரில் வந்திறங்கியது பலருக்கு ஆச்சர்யம். இந்த ரெய்டு பற்றி அந்த துறையின் புலனாய்வுப் பிரிவினர் சிலர்,

''இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ஏற்கெனவே தாக்கல் செய்த வருமானவரி கணக்கு விவரங்களை கையோடு கொண்டுபோய் அந்த அலுவலகத்தில் உள்ள ஆவணங் களோடு சரி பார்த்தோம். சென்னை சூப்பர் கிங்ஸ்அணியின் பங்குதாரரான சீனி வாசன் தவிர மற்ற யாரெல்லாம் உண்டு என்கிற விவரங்களும் சேகரிக்கப் பட்டிருக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுமார் 400 கோடிக்கு ஏலம் எடுக்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. அது பற்றிய ஆவணங்களை எல்லாம் திரட்டியிருக்கிறோம். இதில் பினாமியாக ஏதேனும் முக்கிய நிறுவனம் இருந்ததா என்பதை உறுதிப்படுத்த முயன்று வருகிறோம்!'' என்ற அதிகாரிகள், பொதுவாக ஐ.பி.எல். வருவாய் நிலவரம் பற்றிச் சொல்லும்போது...

''இதில் ஏகத்துக்கும் வருமானம் பார்த்த பலரும், வருமான வரித் துறையினரிடம் நஷ்டக் கணக்கையே காட்டினார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பணம், ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமல் கள்ளத்தனமாகக் கொண்டு வரப் பட்டிருக்கிறதா என்ற சர்ச்சைகள் குறித்து ஆராய்ச்சி நடக்கிறது. இதுபற்றி அமலாக்கப் பிரிவினரும் சோதனைகள் நடத்தியபடி உள்ளனர்!'' என்றார்கள்.

''அப்போதே எச்சரித்தேன்!''

''இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனுக்கு எதிராக முன்பே நீதிமன்றம் ஏறியதோடு, மறுபடியும் தற்போது குரல் எழுப்பத் தொடங்கியிருக்கும்தொழிலதிபர் ஏ.சி.முத்தையாவுடன் நாம் பேசினோம். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரும், ஸ்பிக் நிறுவனத்தின் சொந்தக்காரருமான ஏ.சி.முத்தையா நம்மிடம், ''இந்த விவகாரம் இவ்வளவு தூரம் பூதாகாரமாக வெடிக்கக் காரணம், ஐ.பி.எல். அணிகளை நடத்தும் உரிமையாளர்களில் சிலரே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர்களாக இருப்பதுதான். இவர்களுக்கு வசதியாக அத்தனை விதிமுறைகளையும் மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நடத்துகிறது இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் சொந்தக் காரர் சீனிவாசன். இவரே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராகவும் இருக்கிறார். ஒரு அணியின் உரிமையாளரே இந்திய கிரிக் கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலும் இருந்தால் அதன் பண நிர்வாகம் உள்ளிட்ட விஷயங்கள் சரியாக நடக்கும் என எப்படி எதிர்பார்க்க முடியும்? இதேபோல லலித் மோடியும் சில அணிகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். ஆனால், அவரே ஐ.பி.எல். அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார். இவர்கள் யார் மீதும் எனக்கு எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை. ஆனால், பிசினஸ§ம் விளையாட்டும் வேறு வேறாக இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.

எனவே, அணியின் சொந்தக்காரர்கள் யாரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலோ, மாநிலகிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலோ அல்லது ஐ.பி.எல். அமைப் பிலோ உறுப்பினராக இருக்கக்கூடாது. இதை மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இந்திய கட்டுப்பாட்டு வாரியத்தின் போர்டு உறுப்பினர்களிடம் எடுத்துச் சொன்னேன். கடிதமும் எழுதினேன். ஆனால், நான் சொன்னதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொண்டு விவாதிக்கவில்லை.

இப்போதுகூட ஒன்றும் மோசம் போய்விடவில்லை. சொந்தமாக கிரிக்கெட் அணிகளை வைத்திருப்பவர்கள் இந்திய கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து பதவி விலக வேண்டும். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் ஐ.பி.எல். தொடர்பாக அத்தனை விவகாரங்களையும் ஒரு கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும். ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கியவர்கள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்தால், நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, இவர்கள் முதலில் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதுதான் சரியாக இருக்கும்!'' என்றார் ஏ.சி.முத்தையா.

முத்தையா தனக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கிவிடவும், சீனிவாசன் தரப்பும் பதில் கொடுக்கத் தொடங்கி இருக்கிறது. ''இந்தியா சிமென்ட்ஸ் என்பது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம். எந்த விஷயத்தையும் நாங்கள் வெளிப்படையாகவே செய்கிறோம். நாங்கள் எதையும் மறைக்கவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கப் போகிறோம் என்கிற தகவலைக்கூட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் எடுத்துச் சொல்லிய பிறகே செய்திருக்கிறோம்!'' என்று சொல்கிறது இந்தியா சிமென்ட்ஸ் தரப்பு.

இவ்வளவு களேபரத்துக்கு இடையே வருமான வரித் துறையும் அமலாக்கப் பிரிவும் லலித் மோடியின் இ-மெயிலிருந்து 780 முக்கியமான மின்னஞ்சல்களை தனியாக கொக்கி போட்டு எடுத்திருக்கிறதாம். பி.சி.சி.ஐ., ஐ.பி.எல். மற்றும் சில முக்கியமான உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சல்களில், ஐ.பி.எல். இன்று சர்ச்சைப் புயலில் சிக்கக் காரணமான பரிவர்த்தனை மற்றும் பேரங்கள் தொடர்பான பல 'க்ளூ'க்கள் இருக்கிறதாம். எப்போது மின்னஞ்சல்கள் வெளிச்சத்துக்கு வருமோ... யார் யார் சிக்குவார்களோ!


அடுத்தடுத்து அமைச்சர்கள்?

ஐ.பி.எல். சர்ச்சையால் சசிதரூரை ஏற்கெனவே காவு கொடுத்தது காங்கிரஸ். இப்போது அதே கட்சியின் இன்னொரு அமைச்சரானபிரபுல் பட்டேலும் சிக்கி இருக்கிறார். விமானத் துறை அமைச்சரான பட்டேலின் மகள் பூர்ணா, ஐ.பி.எல்-லுக்கு ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜராக இருக் கிறார். கொச்சி அணி ஏலத்தில் எடுக்கப்படுவதற்கு முன் அதன் மதிப்பு என்ன என்பது பற்றி அறிய சசிதரூர் பிரபுல் பட்டேலின்உதவியை நாடியதாகவும், பூர்ணா மூலம் அந்த விவரங்கள் சசிதரூருக்கு கொடுக்கப் பட்டதாகவும் இப்போது சர்ச்சை கிளம்ப, பதறிப் போன பிரபுல் பட்டேல், ''என் மகள் சின்னப் பெண். அவளுக்கு 24 வயதுதான் ஆகிறது. சம்பந்தமில்லாமல் அவரை இந்தப் பிரச்னையில் சிக்க வைக்க சிலர் முயற்சிக்கிறார்கள்!'' என்று கதறி இருக்கிறார்.

''கொச்சி அணியின் மதிப்பு பற்றி தெரிந்து உதவுவாறு சசிதரூர் கேட்டார். நான் அவரை லலித் மோடியை அணுகிக் கேட்கும்படி சொன்னேன். இது தவிர, இந்த விஷயத்தில் எனக்கு வேறு எதுவும் தெரியாது!'' என்றும் சொல்லி இருக்கிறார் பிரபுல். இது குறித்து விளக்கம் அளிக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங் கேட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமா..?

சீனியர் அமைச்சரான சரத் பவாரின் தலையும் இந்த விவகாரத்தில் உருண்டிருக்கிறது. ஐ.பி.எல். போட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் தனக்கோ தன் கணவருக்கோ எந்த பங்கும் கிடையாது என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் பவாரின் மகள் சுப்ரியா. ஆனால், பவாரின் மருமகன் சதானந் துக்கு கிரிக்கெட் ஒளிபரப்பு நிறுவனத்தில் ஏதோ ஒரு பங்கு இருக்கிறது. அது பற்றி விசாரணை நடத்தியே தீரவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. கிறுகிறுத்துப் போன பிரதமர், சரத்பவாரிடமும் விளக்கம் கேட்டிருக்கிறாராம்.

வருமான வரித் துறையின் ஆக்டோபஸ் கரங்கள் ஐ.பி.எல்-லை சுற்றி வளைத்துக் கொண்டிருப்பது ஒரு பக்கமிருக்க, இன்னொரு பக்கம் அமலாக்கத் துறை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நெருக்க ஆரம்பித்திருக்கிறது. 2008-ல் நடந்த முதல் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக வெளிநாட்டைச் சேர்ந்த 33 கிரிக்கெட் வீரர்களுக்கு 1.72 மில்லியன் டாலரைக் கொடுத்திருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்த விஷயம் ரிசர்வ் வங்கியின் கவனத்துக்குக் கொண்டு வராமலே காதும் காதும் வைத்தமாதிரி நடந்து முடிந்தது எப்படி என்பதை அமலாக்கப் பிரிவு இப்போது விசாரித்து வருகிறது.

கிரிக்கெட் விளையாட்டில் என்ன இருந்துவிடப் போகிறது என்று அப்பாவியாக இந்த விசாரணையைத் தொடங்கிய அமலாக்கப் பிரிவு லலித் மோடியின் பணப் பரிவர்த்தனையைக் கண்டு அதிர்ந்து போனது. லலித் மோடிக்கு ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்தில் (ஏ.பி.என். ஆம்ரோ வங்கியின் புதிய பெயர் இது!) இருக்கும் வங்கிக் கணக்கில் ராஜஸ்தான் ராயல் அணியின் சொந்தக்காரர்களில் ஒருவரான சுரேஷ் செல்லாராம் பணத்தை போட்டிருக்கிறார். இவர் ஏன் லலித் மோடியின் வங்கிக் கணக்கில் பணம் போட வேண்டும்? இவர் மாதிரி வேறு எந்தெந்த அணியின் சொந்தக்காரர்கள் பணம் போட்டிருக்கிறார்கள் என்கிற ரீதியிலும் அமலாக்கத் துறை விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil