ஐ.பி.எல். அரசியலின் அடுத்த கட்டம்! ஜாலி சசி... காலி மோடி!

28 April 2010 ·

ஐ.பி.எல். அரசியலின் அடுத்த கட்டம்!
ஜாலி சசி... காலி மோடி!

.பி.எல். தொடங்கி, அதை உச்சத் துக்குக் கொண்டுசெல்ல லலித் மோடி கையாண்ட மோடி மஸ்தான் வேலைகளே, அவரைக் குப்புறத் தள்ளிவிட்டது. இறுதிப் போட்டி முடிந்த சில நிமிடங்களில் 34 பக்கக் குற்றச்சாட்டு அடங்கிய சஸ்பெண்ட் உத்தரவு இ-மெயிலை மோடிக்கு அனுப்பியது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.). இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மும்பையில் கூடிய ஐ.பி.எல். ஆட்சி மன்றக் குழு, லலித் மோடி மீதான 22 குற்றச்சாட்டுகள் பற்றி ஆய்வு செய்ததுடன், தன் இடைக்கால கமிஷனராக சிராயு அமீனை நியமித்து, விசாரிக்கச் சொல்லியுள்ளது!

இந்த விவகாரம் பற்றி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர், ''கொச்சின் அணி ஏலத்தில்தான் தொடங்கியது முதல்

சர்ச்சை. ஐ.நா. சபையில் துணை பொதுச் செயலாளராகப் பணியாற்றி இருந்தாலும், இந்தியாவுக்காக எதையும் செய்யாத சசிதரூரை ஐ.நா. சபைத் தலைவர் தேர்தலில் இந்தியா சார்பில் நிறுத்தியது, காங்கிரஸ். அங்கு வெற்றி பெற முடியவில்லை என்றதும், அவரை எம்.பி-யாக்கி, வெளியுறவுத் துறை இணை அமைச்சராகவும் ஆக்கியது. அத்துடன் வளைகுடா, மேற்கத்திய நாடுகளுக்கான முக்கியமான பொறுப்பும் அவருக்குத் தரப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளில் சசிதரூர் சிக்கினாலும், காங்கிரஸ் கட்சியின் கொள்கை களைப்பற்றி விமர்சித்தாலும் அவரை ஒன்றும் செய்யவில்லை காங்கிரஸ். 'கொச்சின் அணி ஏலத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை' என்றார் தரூர். ஆனால், அவர் காதலி சுனந்தாவுக்கு கொச்சின் அணியின் இலவசப் பங்குகள் வழங்கப்பட்டன. கிரிக்கெட் விளையாட்டுக்கு சம்பந்தமே இல்லாமல் அழகுக் கலை நிறுவனம் நடத்திவரும் சுனந்தாவுக்கு, கிரிக்கெட் தொடர்பான ஆலோசனைகளுக்காக இலவசப் பங்குகள் வழங்கியதாக 'கொச்சின் அணி' உரிமையாளர்கள் தெரிவித்தனர். கடைசியில், இந்த விவகாரத்தில் எதிர்க் கட்சிகளின் பிரஷர் தாங்க முடியாமல் தரூரை ராஜினாமா செய்யவைத்தது காங்கிரஸ்.

ஆட்சிக்கு வந்தது முதல் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவோம் என்று கூறினாலும், நடவடிக்கை இன்றி அமைதி காத்தது மத்திய அரசு. அதோடு, கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் என்றபோதும், மத்திய அரசுக்கே பல கோடி இழப்பு என்றபோதும் ஒன்றும் செய்யாத மத்திய அரசு, சசிதரூருக்கு பிரச்னை என்றதும் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. விவகாரம் தொடர்பாக சோனியா - மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினர். ஐ.பி.எல். இறுதிப் போட்டி முடிந்தவுடன் லலித் மோடியை கமிஷனர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இ-மெயில் அனுப்பி இருக்கிறது பி.சி.சி.ஐ.!'' என்றார் அந்த அதிகாரி.

டெல்லி எம்.பி. ஒருவர், ''நாடாளுமன்றத்தில் உருக்கமாகப் பேசி, அனுதாபம் பெற முயற்சித்தார் தரூர். ஆனால், எம்.பி-க்களே அதை கேலி செய்து சிரித்தனர். ராகுல் காந்தியிடம் சென்று, ஐ.பி.எல்-லில் நடக்கும் வில்லங்கங்கள் அனைத்தையும் சொல்லி, 'என்னை மட்டும் இவர்கள் பழிவாங்குவது எப்படி?' என்று குமுறினாராம் தரூர். இதை ராகுல் அப்படியே பிரணாப்புக்கு அனுப்ப... முதலில் பிரணாப்புக்கு இதில் ஆர்வம் இல்லை. 'லலித்மோடி, பி.ஜே.பி. ஆதரவாளர். சசிதரூர், காங்கிரஸ் கட்சிக்காரர். இதை பி.ஜே.பி.-காங்கிரஸுக்கு இடையே நடக்கும் போராகக் கருதாமல், சோம்பலாக இருக்கிறார் பிரணாப்' என்று சோனியாவிடம் சொல்லப்பட்டதும்தான் ஆக்ஷன்கள் ஆரம்பித்தன.

ஐ.பி.எல். அணிகளை ஏலம் எடுத்தவர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடந்தது. ராகுலுக்கு நெருக்கமான ஷாரூக் கான் வீட்டிலும் புகுந்த வருமான வரித் துறை அதிகாரிகள், மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளரான முகேஷ் அம்பானி வீடு, அலுவலகங்களில் மட்டும் சோதனை செய்யவில்லை. அங்கே கை வைத்தால், ஆபரேஷன் வேறுவிதமாகப் போகும் என்பதால், இந்த முடிவு. எவ்வளவோ பிரஷர் கொடுத்தும் லலித் மோடியை எதுவும் செய்ய முடியவில்லை.

தொடர்ந்து ஐ.பி.எல். விவகாரத்தைத் தோண்டத் தோண்ட, மத்திய அரசுக்குப் பிரச்னை அதிகரித்தது. முக்கியக் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், அவர் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரஃபுல் பட்டேல் மீதும் சர்ச்சை திரும்பியது. சில காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் ஐ.பி.எல். அணிகளில் பங்கு இருப்பது தெரியவந்தது. கொச்சின் அணி ஏலம் விவகாரத்தில் சரத்பவாரின் மருமகன் சதானந்த் சுலே சம்பந்தப்பட்ட தொலைபேசி உரையாடல்களை வருவாய் புலனாய்வுத் துறையினர் பதிவு செய்திருந்தனர். பின்னர்தான், லலித்மோடிக்கு ஆதரவாளரான சரத்பவாரை வளைக்கும் வேலைகளில் காங்கிரஸ் இறங்கியது. கடந்த 20-ம் தேதி பிரணாப் முகர்ஜியும் ப.சிதம்பரமும், சரத்பவாரை முக்கியமான ஃபைல்களோடு நாடாளுமன்றத்தில் சந்தித்து, 'ஐ.பி.எல். விவகாரத்தில் உங்கள் குடும்பத்துக்கு உள்ள தொடர்பு குறித்த ரெக்கார்டுகள் இவை. இதையெல்லாம் வருமான வரித் துறையினர்தான் கொடுத்து இருக்கிறார்கள். கூட்டணி அரசில் இருந்துகொண்டு ஆட்சிக்குச் சவால்விடும் ஒரு தனி நபருக்கு நீங்கள் ஆதரவாகச் செயல்படுவது சரியில்லை' என்று நெருக்கடி கொடுத்தனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ்தான் ஐ.பி.எல். இயங்கினாலும், இதற்கு தனி ஆட்சி மன்றக் குழு உள்ளது. இருப்பினும், பி.சி.சி.ஐ. சிறப்புப்பொதுக் குழுவில் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையினர் தீர்மானம் நிறைவேற்றினால், ஐ.பி.எல். தலைவர் பதவியைப் பறிக்க முடியும். ஆனால், அதற்குக் காலம் ஆகும். அதுவரை லலித்மோடி தலைவராக நீடிப்பதை விரும்பாத காங்கிரஸின் அழுத்தம் காரணமாக, பி.சி.சி.ஐ. அவசர அவசரமாக லலித் மோடியை சஸ்பெண்ட் செய்துள்ளது!'' என்றார்.

இதுபற்றி லலித் மோடி, ''நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஐ.பி.எல்-லில் எல்லாம் ஒளிவுமறைவின்றி நடத்தப்பட்டது. என்னை நேரில் சந்திக்க தைரியமின்றி இ-மெயில் அனுப்பியுள்ளது பி.சி.சி.ஐ.'' என்றவர், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாட உள்ளார்.

ஆனால், இவ்வளவு பேரையும் மாட்டிவிட்ட சசிதரூரோ, சந்தோஷத்தில் இருக்கிறார். சொந்த மாநிலம் சென்றவர், 'கொச்சின் அணியை நான் வாங்காதது பெரிய தவறு. இருப்பினும், கேரளாவுக்கு என்று ஓர் அணியை வாங்கிக் கொடுத்ததில் மகிழ்ச்சி. கேரளாவுக்கு கொச்சின் அணி கிடைத்ததன் மூலம் சுற்றுலா அதிகரிக்கும். இளைஞர்களுக்கு கிரிக்கெட் வாய்ப்பு கிடைக்கும். கேரளா முன்னேறும்...'' என்று அள்ளிவிட்டுக்கொண்டு இருக்கிறார்!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites