சிக்கிய சசிதரூர்... சிக்காத திமிங்கிலங்கள்! கோடிகள் விளையாடும் ஐ.பி.எல்.!

19 April 2010 ·


''பி
ரிக்க முடியாதது சர்ச்சையும் சசிதரூரும்...'' - இப்படியரு நவீன திருவிளையாடல் மொழி உருவாகியே விட்டது! மத்திய அமைச்சரான புதிதில் அரசு வீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சொகுசாகத் தங்கி, மத்திய அரசுக்கு செமத்தியாக பில் தீட்டியதில் தொடங்கி... இந்திரா காந்தியின் வெளியுறவு கொள்கையை விமர்சனம் செய்தது வரையில் சசிதரூரின் 'புகழ்' பெருகிக்கொண்டே இருக்கிறது!
அதெல்லாம் தாண்டி இப்போது அவர் சிக்கி இருப்பது ஐ.பி.எல். கிரிக்கெட்டில்! ஏற்கெனவே, எட்டு அணிகள் உள்ள
நிலையில் புதிதாக இரண்டு அணிகளை ஏலம் விடுவதாக ஏற்பாடாகி, கொச்சி அணியை ஏலத்தில் எடுத்த 'ரேண்டவூ' நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக சசிதரூர் மீது பகீர் குற்றச் சாட்டு கிளம்பியிருக்கிறது. ''நான் ஆலோசனை மட்டும்தான் வழங்கினேன். எனக்கும் கொச்சி அணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!'' என்று பேக்கடிக்கிறார் சசி. ஆனாலும், கொச்சி அணியின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் பற்றிய
விவரத்தை அண்மையில் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி வெளியிட்டபோது, சுமார் 17 சதவிகித பங்குகள் (அதாவது 70 கோடி ரூபாய்!) துபாயில் வசிக்கும் சுனந்தா புஷ்கர் என்ற அழகு கலை நிபுணருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக சொன்னார்.

சுனந்தா புஷ்கர் சசிதரூரின் காதலி, சீக்கிரமே அமைச்சரின் மூன்றாவது மனைவி என சொல்லப்படுவது சூறா வளிக்கு சூட்டையும் ஜிலுஜிலுப்பையும் கிளப்பிவிட்டது. தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சுனந்தா புஷ்கரைத்தான் சசிதரூர் திருமணம் செய்யப் போகிறாராம். இந்நிலையில், 'ரேண்டவூ' நிறுவனத்தின் பங்குதாரர்கள் தொடர்பான விவரங்களை வெளியிடக்கூடாது என்று லலித் மோடியை சசிதரூர் மிரட்டினார் என்று பரபரப்பானால், சும்மாவா என்ன! 'சசி தனது மத்திய அமைச்சர் பதவியை உதற வேண்டும்' என்று பி.ஜே.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொடி தூக்கி இருக்கின்றன.

சசிதரூருக்கு ஆதரவாக காங்கிரஸ் கப்சிப் காட்ட... ''சசிதரூர் பதவி விலகத் தேவையில்லை. இந்த விவகாரத்தில் முழுமையாக விசாரித்து, தேவைப் பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்!'' என பிரதமரும் அறிவித்துவிட்டார். இதற்கிடையில், கொச்சி அணி ஏல விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை கண்டறிய சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலவச பங்குகள் வழங்கப் பட்டுள்ளதன் மூலம் ஹவாலா மற்றும் கறுப்புப் பணம் கோடிக்கணக்கில் விளையாடியுள்ளதாகவும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்து வரும் மோசடிகள் குறித்து சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் பணியாற்றும் ஒருவர் நம்மிடம், 'இதற்கு முன்பு அதிகபட்சமாக மும்பை அணி 441 கோடி ரூபாய்க்கு விலை போனது. ஆனால், சமீபத்தில் விடப்பட்ட ஏலத்தில் புனே அணி அதிகபட்சமாக 1,702 கோடிக்கும், கொச்சி அணி 1,533 கோடிக்கும் விலை போயுள்ளது. 20 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பண பரிவர்த்தனை என்றாலே அது வங்கி மூலமாகத்தான் இருக்க வேண்டும் என்கி றார்கள். ஆனால், இங்கு விளையாடும் வீரர்களுக்கு ஹாட் கேஷ் வழங்கப்படுகிறது. எங்களைப்போன்ற ஊழியர்களுக்கும் ரொக்கப் பணம் வழங்கப்படுகிறது. இதற்கு எந்த சேவை வரியும் கிடையாது. கிரிக்கெட்டின் கடவுள் என்று சொல்லப்படும் டெண்டுல்கர், டோனி எல்லோரும் விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமைகள். அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. கோடிக்கணக்கில் விலை கொடுத்து வாங்கப்படும் இவர்கள் யாருக்காக, எந்த அணியின் வெற்றிக்காக விளையாடுகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

போட்டி முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. பெட் அடிப்படையில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டு வீரர்கள் மைதானத்துக்கு அனுப்பப்படுகிறார்கள். உதாரணத்துக்கு, ரஞ்சி கோப்பையில் விளையாடி இரண்டு சதம் அடித்த கணபதி, ஸ்ரீகாந்த்தின் மகன் அனிருத் ஸ்ரீகாந்த் எல்லாம் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். முதலில், முரளி விஜய்க்கு வாய்ப்பு இல்லாமல் உட்கார வைத்தனர். தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டதால், அவரை உட்கார வைக்க முடியாத நிலையில் உள்ளனர்.

உள்ளூர் வீரர்களுக்கு மட்டும் இந்த நிலை இல்லை. இதுவரை அதிக மெய்டன் ஓவர் வீசிய ஐதராபாத் அணி வீரர் சமிந்தா வாசுக்கு, ஐந்து ஆட்டத்துக்கு மேல் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. டெல்லி அணியில் உள்ள மெக்ராத் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ்க்காக வாங்கப்பட்ட தென்னாப்பிரிகாவைச் சேர்ந்த நிதினி சும்மா உட்கார்ந்திருக்கிறார்.

சென்னை டீம் கேப்டன் டோனி அடுத்த ஆண்டு மும்பைக்கு செல்லப்போகிறார். அதனால், அவர் முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இதுவரை எந்தப் பயிற்சியிலும் பங்கேற்கவில்லை. அவ்வப்போது வந்து தலையைக் காட்டிவிட்டு போய்விடுவார். ஆட்டத்தின் முக்கிய நேரங்களில் பிளம்மிங் கொடுக்கும் ஆலோசனைகளை டோனி சட்டை செய்வதில்லை என்று வீரர்களே கூறுகிறார்கள். அதேபோன்று பஞ்சாப் அணியில் யுவராஜ்ஒத்துழைப்பு அளிக் காமல் உள்ளார். டோனியும், யுவராஜ் சிங்கும் பிளே பாய் போல சுற்றி வருகிறார்கள். சென்னை அணியின் கோச்சாக இருந்த ராபின் சிங் கழற்றிவிடப்பட்டார். முதல் ஐ.பி.எல்-லில் சென்னை அணி இறுதி போட்டி வரை செல்ல அவரது கோச்சிங்கும் ஒரு காரணம். தற்போது அவர் மும்பை அணிக்கு சென்று விட்டார். அதேபோன்று நம்முடைய திருச்சியைச் சேர்ந்த ராஜகோபால் சதீஷ§க்கு சரியான வாய்ப்பு கொடுக்காததால் அவரும் மும்பை அணிக்கு சென்று விட்டார்.

மொத்தத்தில் யாருக்காகவோ விளையாடி, யாரையோ திருப்திப்படுத்துகிற நிலைதான் நிலவுகிறது. தொடர் ஆட்டங்களினால் கிட்டத்தட்ட எல்லா வீரர்களும் காயம் மற்றும் சோர்வுடன் உள்ளனர். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சோர்ந்துபோய் உள்ளனர். ஐ.பி.எல். முடிந்த உடனேயே, மேற்கு இந்திய தீவுகளில் உலகப்கோப்பை 20-20 போட்டி தொடங்க உள்ளது. இந்தியாவுக்காக இவர்கள் எப்படி விளையாடப் போகிறார்களோ தெரியவில்லை!' என்றார் அவர்.

ஆக, அரசியல் தொடங்கி கிரிக்கெட் வரைக்கும் புகுந்து விளையாடும் எமகாதக 'ஆட்ட நாயகன்' கரன்சி நோட்டுதான் என்பது நமக்கெல்லாம் எவ்வளவு கேவலம்!

சசிதரூர்... புஷ்கர்..!

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் உறவினர் என்கிற தகுதிதான் சசிதரூரை மத்திய அமைச்சர் என்கிற அளவுக்கு உயர்த்தியது. தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு ஜனநாயகத்தில் பணநாயகம் நடமாடுவது குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த கருத்தரங்கில் காரசாரமாகப் பேசி பரபரப்பு கிளப்பியவர் சசிதரூர். ஆனால், இன்றைக்கு அவரே கறுப்புப் பண விவகாரத்தில் சிக்கி இருப்பதை சுட்டிக் காட்டும் டெல்லி புள்ளிகள், ''ஐ.நா. சபையில் செக்ரட்டரி ஜெனரலுக்கு போட்டியிடுகிற அளவுக்கு சசிதரூர் பப்ளிசிட்டி ஆனதற்கு காரணமே கறுப்புப் பணம்தான்!'' என்றும் குண்டு போடுகிறார்கள்.

சசிதரூரோடு இணைத்துப் பேசப்படும் புஷ்கர் ஸ்ரீநகரில் பட்டப்படிப்பு வரை படித்தவர். டெல்லியில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி ஹோட்டல் நிர்வாகி ரானா என்பவரை திருமணம் செய்தார். பின்னர் ரானாவின் நண்பரான கேரளாவைச் சேர்ந்த சுஜித் மேனன் என்பவர் பழக்கமாக... முதல் கணவரை உதறிவிட்டு சுஜித் மேனனை மணந்தார். சுஜித் மேனன் விபத்தில் இறந்துவிட... யதேச்சையாக சசிதரூருக்கும் புஷ்கருக்கும் பழக்கம் ஏற்பட்டது. புஷ்கருக்கு இப்போது 17 வயதில் ஒரு மகன் உண்டு!


0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil