
முகேஷ் அம்பானிக்கு நேரில் பிரசாதம்: திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் நீக்கப்படுவாரா? அறங்காவலர் கூட்டத்தில் முடிவு
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த இலவச தரிசனம், கட்டண தரிசனம், வி.ஐ.பி. உடனடி தரிசனம் போன்ற முறைகள் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னணி இடத்தை பிடித்திருக்கும் இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி கடந்த 19-ந்தேதி திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தார். இதற்காக அவருக்கு சிறப்பு விருந்தினர் மாளிகையில் அறை ஒதுக்கப்பட்டது.
அவர் அங்கிருந்து சாமி கும்பிட சென்றார். இதையறிந்ததும் ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் ரமணா தீக்ஷித்லு கோவிலுக்கு வெளியே ஓடிச்சென்று முகேஷ் அம்பானியை வரவேற்றார். பின்னர் அவருக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்து வணங்கினர்.
பின்னர் அவர் கருவறை அருகே சென்று சுமார் 20 நிமிடம் வரை சாமி கும்பிட்டார். பின்னர் அங்கிருந்து தனது அறைக்கு புறப்பட்டு சென்றார்.
அதன் பிறகு ரமணா தீக்ஷித்லு பிரசாதங்களை எடுத்துக்கொண்டு முகேஷ் அம்பானி அறைக்குச் சென்றார். பின்னர் அதை அவரிடம் கொடுத்து சடாரியை தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தார்.
தலைமை அர்ச்சகரின் இச்செயலுக்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஏழுமலையான் முன்பு அனைவரும் சமம்தான். அம்பானி அறைக்கு சென்று தலைமை அர்ச்சகர் பிரசாதம் கொடுத்து ஆசீர்வாதம் செய்தது கோவில் விதிமுறை களுக்கு எதிரானது என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தலைமை அர்ச்சகருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது.
அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் அவரை நீக்குவதா? வேண்டாமா? என்பது பற்றி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.
இந்த தகவலை தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்



Ontario Time


0 comments:
Post a Comment