அப்படி நாங்க என்ன பாவம் செஞ்சோம்? அவருக்கு என்ன பண்ணிட்டோம்?'

21 April 2010 ·கலைஞர் திருப்பி அனுப்ப காரணம் இதுதான்.


.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சாதாரணமாகவே உணர்ச்சிப் பிழம்பு... அதுவும், பிரபாகரனின் தாயார் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டால், என்னமாகப் பொங்குவார்! இதோ பேட்டி என்றதுமே பொங்கிவிட்டார்..!

''தமிழர்களின் உரிமைக்காகப் போராடிய ஒரு மாவீரனின் தாய்க்கு இந்த நிலையா? தமிழகத்தின் தலைநகரில் கால் வைக்கக்கூட விடாமல் அந்தத் தாயைத் தத்தளிக்க வைத்து விட்டார்களே... 80 வயது தாயை விரட்டாத குறையாக வெளியேற்றுகிற அளவுக்கு ஆட்சியாளர்களின் இதயத் தசைகள் இற்றுப் போய்விட்டதா? ஆறரைக் கோடி தமிழர்களுக்கு இதைவிட வேறென்ன அவமானம் இருக்க முடியும்?'' என கொந்தளித்தவரிடம் நம் கேள்விகளை அடுக்கினோம்.

''விமான நிலையத்தில் என்னதான் நடந்தது?''

''பார்வதி அம்மாள் சென்னைக்கு வருவது தெரிந்து, நானும் நெடுமாறன் ஐயாவும் விமான நிலையம் சென்றோம். பெரிதான வரவேற்பு கொடுத்தால் 'புலி

கோஷம்' என்று அர்த்தம் கற்பித்து சட்ட சிக்கல்களை உண்டாக்க கலைஞர் அரசு தயங்காது என்பதால், நாங்கள் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தோம். இதற்கிடையில், தமிழக போலீஸை விமான நிலையத்தில் திடீரென குவித்து வைத்திருந்தனர். நாங்கள் பார்வையாளருக்கான பாதைக்குப் போனபோதே போலீஸ் மறித்தது. எங்களின் பாஸை காண்பித்து போலீஸிடம் பேசினோமே தவிர, அந்த இடத்தைத் தாண்டி

எங்களை போகவிடவில்லை. கூடவே, போலீஸ் எங்கள் மீது திட்டமிட்டு பலாத்காரத்தைப் பாய்ச்சியது. எனது பிடரியைப் பிடித்தும் கைகளை இழுத்தும் அராஜகம் செய்தனர். உடனே, கலைஞரின் ஏவலுக்காகப் பாய்ச்சல் காட்டிய போலீஸை கண்டித்து நானும் நெடுமாறன் ஐயாவும் அந்த இடத்திலேயே உட்கார்ந்துவிட்டோம். சூழ்ந்து நின்ற போலீஸாரிடம், 'இது உங்களுக்கு நியாயமாகப்படுகிறதா?' எனக் கேட்டேன். அப்போது ஒரு போலீஸ் அதிகாரி, 'நாங்க என்ன சார், பண்ண முடியும்?' என வருத்தத்தோடு சொன்னார். இந்த விஷயத்தில் போலீஸ் மீது எனக்கு வருத்தமில்லை. அவர்கள் யாருடைய இயக்குதல்படி அராஜகத்தை அரங்கேற்றினார்கள் என்பது தெரிந்ததுதானே!''

''பார்வதி அம்மாள் சென்னைக்கு வருவது நள்ளிரவு வரை தெரியாது என முதல்வர் சட்டமன்றத்தில் சொல்லி இருக்கிறாரே?''

''அவர் சென்னை வருவது மத்திய உளவுத்துறை மூலமாக சொல்லப்பட்டு, அன்று மாலையே கலைஞருக்கு தெரியும் என்பதுதான் உண்மை. மூலை முடுக்கில் யாரும் தும்மினால்கூட இன்டலிஜென்ஸ் மூலமாகக் கண்டுபிடித்துவிடும் கலைஞருக்கு, பார்வதி அம்மாள் வரும் செய்தி தெரியாதென்றால், முதல்வர் பதவிக்கே லாயக்கற்றவர் என்றுதான் அர்த்தம். நள்ளிரவில்தான் பார்வதி அம்மாள் விவகாரம் தெரியுமென்றால், இரவு பத்து மணிக்கே விமான நிலையத்தில் தமிழக போலீஸை குவித்தது ஏனாம்? அவருக்கே தெரியாமல் போலீஸ் வந்து விட்டதா? அவர் சொல்லாமல்தான் போலீஸ் என்னை நெட்டித் தள்ளியதா? புதிய சட்டமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் 'கருணாநிதியை கலந்து ஆலோசிக்காமல் நான் ஏதும் செய்வதில்லை' என பிரதமர் மன்மோகன் சிங் சொன்னாரே... அப்படியிருக்க, கலைஞருக்குத் தெரியாமல் சென்னை விமான நிலைய அதிகாரிகள் இப்படியரு முக்கிய மான முடிவை எடுத்திருப்பார்களா? ஈழத்தில் படுகொலைகள் நிகழ்ந்தபோது ஒரு பக்கம் போருக்கு எதிராகத் தீர்மானம் இயற்றியும், இன்னொரு பக்கம் மத்திய அரசுக்கு உறுதுணையாகவும் இருந்து எப்படி நாடகமாடினாரோ.. அதையெல்லாம் விஞ்சத்தக்க அளவுக்கு இதிலும் கலைஞர் நாடகம் ஆடுகிறார். பிரபாகரனின் தாயார் சென்னைக்கு வருவதை கலைஞர் விரும்பவில்லை என்பதுதான் உண்மை!''

''பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட தற்கு தமிழக அரசோ தமிழக போலீஸோ காரணமாக இருக்க வாய்ப்பில்லை என டாக்டர் ராமதாஸ் சொல்லி இருக்கிறாரே...'

''அப்படியானால், மத்திய அரசுதான் திருப்பி அனுப்பச் சொன்னதா? பார்வதி அம்மாளுக்கு இந்திய அரசுதானே விசா கொடுத்தது? ஆப்பிரிக்க அரசு கொடுக்கவில்லையே... அப்படி விசா கொடுத்தவர்களே எப்படி விரட்டி அடிப்பார்கள்? அந்த அம்மாள் சென்னையில் தங்கி சிகிச்சை பெறுவதில் கலைஞருக்கு ஆட்சேபனை இல்லையென்றால், உடனடியாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடமே பேசி அதற்கு வழி செய்திருக்கலாமே... இந்த விஷயத்தில் ராமதாஸ் என்ன... மத்திய அரசேகூட, 'பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு நாங்கள்தான் காரணம்' என அறிவித்தாலும், ஆச்சர்யமில்லை! இத்தகைய அறிவிப்பை வெளியிடவைக்கும் முயற்சியில் இந்நேரம் கலைஞர் ஈடுபட்டிருப்பார்.''

''பக்கவாதம், மறதி, உடல் சோர்வு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட வியாதிகளால் பார்வதி அம்மாளுக்கு மலேசியாவிலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அங்கே சென்னையில் உள்ள மருத்துவ வசதிகளை சுட்டிக்காட்டி, செல்லும்படி வலியுறுத்தி உள்ளார்கள். அதனால்தான் மலேசியாவில் இருக்கும் ஈழத் தமிழர்கள் சிலர் சிவாஜிலிங்கத்தின் உறவினர்களோடு பேசி, அவரை சென்னைக்கு அனுப்ப முடிவு செய்தார்களாம். பார்வதி அம்மாளைத் தாங்கிய விமானம் சென்னைக்கு வந்திறங்கிய உடனேயே அவரை விமானத்தில் இருந்து கீழே இறக்க விடாதபடி அதிகாரிகள் கெடுபிடி செய்ய... அந்த அம்மாளின் உதவிக்காக உடன் வந்திருந்த விஜயலட்சுமி என்ற பெண், 'எதற்காக அனுமதி மறுக்கிறீர்கள்?' என கேட்டிருக்கிறார். 'பார்வதி அம்மாள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்' என்றார்களாம் விமான நிலைய அதிகாரிகள். அதோடு, அதே விமானத்தில் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பும் முடிவை அவர்கள் சொல்ல... பயணக் களைப்பில் இருந்த அந்த மூதாட்டி, 'செத்த நேரம் ஓய்வு எடுக்கணுமே' என்றாராம். அதற்கும் அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது.

மலேசியாவில் பார்வதி அம்மாளுக்கு வழங்கப்பட்ட விசாவின் காலக்கெடுவும் முடிந்திருந்த நிலையில், அங்கே திரும்பிச் செல்வதும் சாத்தியமற்றதாக... விமான நிலைய அதிகாரிகளிடம், 'புலிகள் இயக்கத்தில் பார்வதி அம்மாள் உறுப்பினராக இல்லை என்பதை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ஏற்கெனவே விசாரித்து விட்டது. அதன்பிறகே அங்கிருந்து வெளியே செல்ல ஆறு மாத விசா கிடைத்தது. இதற்கிடையில், மலேசிய விசாவும் முடிந்துவிட்டது. அதனால், பார்வதி அம்மாள் வேறு எந்த நாட்டுக்குமே போக முடியாது' எனச் சொல்லி மறுபடியும் அனுமதிக்காகப் போராடியிருக்கிறார் விஜய லட்சுமி. அதற்கும் அசைந்து கொடுக்காமல், பார்வதி அம்மாளை நள்ளிரவில் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பியிருக்கின்றனர் விமான நிலைய அதிகாரிகள்.

அவசர கதியில் அவருக்கு ஒரு மாத கால விசாவை வழங்கியுள்ளது மலேசிய அரசு. அங்கு போய் இறங்கியதுமே அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 'ஐயா... ஐயா...' என தன் கணவர் வேலுப்பிள்ளை நினைவாகவே புலம்பிக்கொண்டிருந்தாராம் பார்வதி அம்மாள். 'சென்னைக்கு போகலையா? என்னைஎப்போ சென்னைக்கு அழைச்சுட்டு போகப் போறீங்க?' என கேட்டிருக்கிறார். சென்னை போய் திரும்பி வந்ததே அவருக்கு முழுமையாகப் பதிவாகவில்லையாம். அதை மெதுவாக எடுத்துச் சொன்னபோது, 'எதுக்கு அனுப்பு னாங்க? அப்படி நாங்க என்ன பாவம் செஞ்சோம்? அவருக்கு என்ன பண்ணிட்டோம்?' என கலங்கியிருக்கிறார்.

''பிரபாகரன் தாயாரை சென்னையில் இறங்க வைப்பதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் சொல்லப்படுகிறதே?''

''ஒரே ஒரு சம்பவத்தை இதற்கான பதிலாக சொல்கிறேன். ஈழ ஆர்வலரான தணிசேரன் குடும்ப விழாவில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்கா விலிருந்து சென்னை வந்தார். அப்போது அவரை 'புலிகளின் ஆதரவாளர்' எனச் சொல்லி விமான நிலையத்திலேயே உட்கார வைத்தனர். அப்போது, எம்.பி-யாக இருந்த நான், அப்போதைய உள்துறை அமைச்சரான அத்வானியிடம் உடனடியாகப் பேசி, அந்த ஈழ ஆர்வலர் தமிழகம் வர அனுமதி வாங்கிக் கொடுத்தேன். ஒரு சாதாரண எம்.பி-யால் முடிந்தது ஒரு முதல்வரால் முடியாது என்றால் யார் நம்புவார்கள்?''

''சென்னை வரவிடாமல் பார்வதி அம்மாளை தடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?''

''செம்மொழி மாநாடு நடக்கவிருக்கும் வேளையில் பிரபாகரனின் தாய் சென்னையில் இருந்தால், இலங்கைக் கொடூரங்கள் எல்லாம் மறுபடி கொந் தளிப்போடு நினைவு கூரப்படும்... இதனால் பல சிக்கல்கள் தனக்கு வரும் என நினைத்திருக்கிறார் கலைஞர். மாநாட்டுக்காக பன்னாடுகளிலும் இருந்து தமிழகத்துக்கு வரும் தமிழறிஞர்களும் பெருமக்களும் அவசியம் அந்த அம்மாளை சென்று பார்ப்பார்கள். அதெல்லாம் ஊடகங்களில் வெளியாகும். அத்தனை பேரும் வந்து தன்னைப் பற்றி மட்டுமே பேசி, வாழ்த்த வேண்டும் என்று காத்திருக்கும் கலைஞரால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது.

இதையெல்லாம் எண்ணித்தான் பிரபாகரன் தாயாரை சென்னைக்கு வரவிடாமல் தடுத்திருக்கிறார். பார்வதி அம்மாளை நெடுமாறன் ஐயா வீட்டில் தங்கவைத்து உரிய சிகிச்சைகள் மூலமாக அவரை குணப்படுத்த விரும்பியும், ஈவு இரக்கமற்று அதனை தடுத்திருக்கிறார் கலைஞர்.

தமிழகத்தின் தலையிலேயே மிதிப்பதுபோல் திருப்பதிக்கு வந்து வழிபாடு நடத்திவிட்டுப் போகிறார் ராஜபக்ஷே. அவனுடைய மகன்கள் பெங்களூருவுக்கு வந்து கிரிக்கெட் பார்க்கிறார்கள். பாகிஸ்தான் விளை யாட்டு வீரரான வாசிம் அக்ரமின் மனைவிக்கு உடல்நிலை சீரியஸானபோது, விசா இல்லாமலே அவர் சென்னையில் இறங்கி தங்கவைக்கப்பட்டார். ஆனால், தமிழினத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கு இங்கே விசா இருந்தும் அனுமதி மறுக்கப்படுகிறது.

இத்தகைய இழிநிலைக்கு தமிழினம் ஒருபோதும் ஆளானது கிடையாது. கலைஞர் நிகழ்த்தும் இத்தகைய கொடுமைகளைப் பார்க்கையில் ஷேக்ஸ்பியரின் 'மேக்பத்' நாடகம்தான் நினைவுக்கு வருகிறது. அதில் அரசன் டங்கன் படுகொலைக்குப் பிறகுசீமாட்டி மேக்பத், 'அரேபியாவின் ஆயிரமாயிரம் வாசனை திரவியங்களை ஊற்றிக் கழுவினாலும் என் கையில் உள்ள கறைகள் நீங்காது. என் களங்கம் தீராது' என்பாள்... கலைஞரே, உங்களின் நிலையும் இப்படித்தான்... ஆயிரக்கணக்கான மாநாடு நடத்தினாலும், போதும் போதும் என்கிற அளவுக்கு விருதுகள் வாங்கினாலும் தமிழினத்துக்கு எதிரான உங்கள் பாவங்களை உங்களால் கழுவவே முடியாது!''

அதிர்வில் குலுங்குகிறது கறுப்புத் துண்டு!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil