பஜாஜ் ஆட்டோ லிமிடெட் -வரலாறு

11 May 2010 ·


ஜாஜ் என்றாலே இப்போதுள்ள தலைமுறைக்கு உடனே நினைவுக்கு வருவது பல்ஸர் பைக்குகளும் ஆட்டோவும்தான். ஆனால், பஜாஜ் நிறுவனத்தின் சரித்திரம் நீண்டது. ஜமன்லால் பஜாஜ்தான் இதன் நிறுவனர். மகாத்மா காந்தியின் நெருங்கிய சீடரான இவரை, 'தனது ஐந்தாவது பிள்ளை' என்று பூரிப்போடு காந்திஜி குறிப்பிட்டுள்ளார்.

1945-ம் ஆண்டில் ஜமன்லால் பஜாஜ், 'பாட்ச் ராஜ் டிரேடிங் கம்பெனி' என்ற பெயரில்தான் தற்போதைய பஜாஜ் நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது, இரு சக்கர வாகனங்களையும், மூன்று சக்கர வாகனங்களையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யும் ஒரு சிறிய நிறுவனமாக இருந்தது.

நம் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, அதாவது 1948-ம் ஆண்டுக்குப் பிறகு, பஜாஜ் நிறுவனத்துக்கு வாகனங்கள் தயாரிக்க லைசென்ஸ் வழங்கியது அரசு. ஆனால், 11 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சொந்தமாக வாகனங்கள் தயாரிக்கத் துவங்கியது பஜாஜ்.

அதாவது, 1960-ம் ஆண்டு, ராகுல் பஜாஜ் இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது, 'பியாஜியோ' எனும் இத்தாலிய நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து 'வெஸ்பா' என்ற ஸ்கூட்டரைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியது பஜாஜ். வெஸ்பா ஸ்கூட்டர்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்துவிட்டு வந்த ராகுல் பஜாஜ், 1968-ம் ஆண்டில் புனேயில் உள்ள பஜாஜ் தொழிற்சாலையை விரிவுபடுத்தினார். இந்த ஆண்டு மட்டும் சுமார் 7.2 கோடி வர்த்தகம் செய்து, பெரிய நிறுவனமாக உருவெடுத்தது பஜாஜ். 1970-ம் ஆண்டு இந்தத் தொழிற்சாலையில் மொத்தம் 1 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்தனர். 1971-ம் ஆண்டில் முன் பக்கம் இன்ஜின் பொருத்திய ஆட்டோ அறிமுகமானது. பிரித்விராஜனின் வீரியமிக்க குதிரையின் பெயர் 'சேட்டக்' என்பதால், அதை நினைவுபடுத்தும் வகையில், 1972-ம் ஆண்டில் 'பஜாஜ் சேட்டக்' என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தினார்கள். 1976-ம் ஆண்டில் 'பஜாஜ் சூப்பர்' என்ற மேலும் ஒரு புதிய ஸ்கூட்டர் அறிமுகமாகியது. இந்தச் சமயத்தில், பெட்ரோலியப் பொருட்களின் தட்டுப்பாடு கடுமையானதால், கார் வைத்திருந்தவர்களும் இருசக்கர வாகனங்களுக்கு மாற வேண்டிய நிர்பந்தம் உருவானது.

அதனால், நம் நாட்டில் இரு சக்கர வாகனத் தயாரிப்பாளர்களுக்கு செல்வாக்கு கூடியது. இந்தக் காலகட்டத்தில், ஸ்கூட்டர் வாங்க முன் பணம் செலுத்தி 10 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. பிரீமியம் தொகை கொடுத்து ஸ்கூட்டர் வாங்கியவர்களும் உண்டு. ஆனால், அமெரிக்க டாலராகக் கொடுத்து ஸ்கூட்டர் கேட்டவர்களுக்கு உடனே கிடைத்தது.

1976-ல் பின் பக்கம் இன்ஜின் பொருத்திய ஆட்டோவை அறிமுகப்படுத்தியது பஜாஜ். 1977-ம் ஆண்டுடன் பியாஜியோவுடன் ஒப்பந்தம் முடிந்து போனதால், 'வெஸ்பா பெயரிட்ட வாகனங்களை பஜாஜ் விற்பனை செய்யக் கூடாது' என வழக்கு தொடர்ந்தது பியாஜியோ நிறுவனம். அதனால், பஜாஜின் ஏற்றுமதி வர்த்தகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

1980-க்குப் பிறகு, வெளிநாட்டு வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்தன. அப்போது பஜாஜிடம் இருந்த ஒரே பலம், இந்தியாவெங்கும் இருந்த சக்தி வாய்ந்த டீலர் நெட்வொர்க் மட்டுமே! 1981-ம் ஆண்டு 'பஜாஜ் எம்-50' என்ற வாகனத்தை அறிமுகம் செய்தது.

இந்த மாடல் அறிமுகமான பின்புதான் 100 சிசி பைக்குகள் அறிமுகமாகின. இதற்கிடையில் பியாஜியோ நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த எல்.எம்.எல் நிறுவனத்துடன் இணைந்து 'எல்.எம்.எல் வெஸ்பா என்வி 150' என்ற ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. அதனால், பஜாஜ் ஸ்கூட்டர்களின் விற்பனை வெகுவாகப் பாதித்தது.

1985-ம் ஆண்டில் மட்டும் சுமார் 60,000 பஜாஜ் எம்-50 வாகனங்கள் விற்பனையாகின. இந்த வாகனங்களை மிகவும் சிரமப்பட்டுத்தான் தயாரிக்க முடிந்தது. பஜாஜின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிவைச் சந்தித்துக் கொண்டு இருந்த வேளையில், ஜப்பானிய கவாஸாகி நிறுவனத்துடன் இணைந்து 'கேபி 100' ( 'கேபி'- கவாஸாகி - பஜாஜ்) என்ற பைக்கைத் தயாரித்தது. இந்த ஆண்டில் எம்-50 வாகனத்தை மேம்படுத்தி எம்-80 என்ற புதிய மாடலையும் அறிமுகம் செய்ய... விற்பனை சூடு பிடிக்கத் துவங்கியது.

1990-ம் ஆண்டு 'சன்னி' என்ற சிறிய ஸ்கூட்டரெட்டையும் அறிமுகம் செய்தது. பின்பு, 1991-ம் ஆண்டு 'கேபி 4 எஸ் சாம்பியன்' என்ற முதல் 4 ஸ்ட்ரோக் பைக்கை அறிமுகம் செய்தது பஜாஜ். இந்த பைக்கும் மக்களின் வரவேற்பைப் பெற்றது.

1993-ம் ஆண்டு மீண்டும் பியாஜியோவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது பஜாஜ். ஆனால், அது வெற்றி பெறவில்லை. இந்த ஆண்டு 'பஜாஜ் ஸ்ரைட்' (Stride) எனும் ஸ்கூட்டர் அறிமுகமானது. அந்தச் சமயத்தில், ஜப்பான் நிறுவனங்களுடன் உள்ள கூட்டணி மட்டும் இல்லாமல் மேற்கொண்டு என்ன செய்வது என யோசித்தது பஜாஜ்.

ஏற்றுமதி வர்த்தகத்தை வேறுவிதமாகக் கையாண்டது. அதாவது, மேற்கத்திய நாடுகள் தவிர்த்து அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவு, கிழக்காசிய நாடுகளுக்கும் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது. இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு பஜாஜ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உரம் சேர்த்தது.

1994-ம் ஆண்டு விலை குறைவான கார் தயாரிக்கும் திட்டமும் பஜாஜிடம் இருந்தது. ஆனால், இந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு ஜப்பானைச் சேர்ந்த 'டோக்கியோ ஆர் அண்டு டி' என்ற ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது. இந்த நிறுவனத்தின் உதவியுடன் தனது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையை மேம்படுத்தியது பஜாஜ்.

இந்தச் சமயத்தில், 'உலகின் நான்காவது பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பாளர்' என்ற இடத்தில் இருந்தது அது. இந்த ஆண்டில் 'பஜாஜ் கிளாஸிக்' என்ற ஸ்கூட்டரும், 1995-ல் 'சூப்பர் எக்ஸ்எல்' என்ற ஸ்கூட்டரையும், 1996-ல் 'கேபி 100' என்ற பைக்கையும், 'ரேவ்' என்ற ஸ்டெப் த்ரூ பைக்கையும் அறிமுகம் செய்தது. 1997-ம் ஆண்டில் 'கேபி பாக்ஸர்' பைக்கையும், டீசல் ஆட்டோவையும் அறிமுகம் செய்தது.

1998-ம் ஆண்டில் தனது மூன்றாவது தொழிற்சாலையை நவீன தொழில்நுட்பத்துடன் புனேயில் துவக்கியது பஜாஜ். காலிபர், ப்ரவ்லர், ஸ்பிரிட் ஸ்கூட்டரெட், லெஜன்ட் எனும் 4 ஸ்ட்ரோக் ஸ்கூட்டர் ஆகியவற்றை இங்கு தயாரித்து அறிமுகம் செய்தது.

இந்த ஆண்டில் இத்தாலியைச் சேர்ந்த 'கஜீவா' நிறுவனத்துடன் இணைந்து, மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் தயாரிக்கத் திட்டமிட்டு, புரோட்டோ டைப் வாகனங்களைக் காண்பித்தது. ஆனால், இந்த வாகனங்கள் எவையும் விற்பனைக்கு வரவில்லை.

இந்தச் சமயத்தில் பஜாஜின் ஒரே போட்டியாளராக விளங்கியது ஹீரோ ஹோண்டா நிறுவனம்தான். 1999-ம் ஆண்டில் இத்தாலிய பியாஜியோ நிறுவனத்தையும், 2000-ஆவது ஆண்டில் மாருதியின் பங்குகளையும் வாங்க முயற்சித்தது. ஆனால், இந்த இரண்டுமே கைகூடவில்லை. இந்த ஆண்டில் பஜாஜ், 'சஃபையர்' எனும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

சத்தமில்லாமல், ரகசியமாக தனது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையின் சொந்த முயற்சியில் ஒரு பைக்கை உருவாக்கி வந்தது பஜாஜ். அந்த பைக்கை 2001-ம் ஆண்டு 150 சிசி மற்றும் 180 சிசி இன்ஜின்களுடன் 'பல்ஸர்' என்ற பெயர் சூட்டி இந்திய பைக் மார்க்கெட்டில் புதிய அத்தியாயத்துக்கு வித்திட்டது.

'பல்ஸர்' என்ற நாமகரணம்தான் பஜாஜின் விறுவிறு வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது என்றால் அது மிகை இல்லை. ஸ்கூட்டர் விற்பனையில் ஆரம்பித்து பின்பு தயாரிப்பில் இறங்கிய பஜாஜ் நிறுவனம், 'இனி ஸ்கூட்டர் தயாரிப்பது இல்லை' என்று அறிவித்து இருக்கிறது. பஜாஜின் 'விண்ட்' என்ற பைக், இந்தியாவில் தயாராகி 'கவாஸாகி' என்ற பெயரில் உலகம் முழுவதும் ஏற்றுமதி ஆனது.

தற்போது, ஆஸ்திரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற 'கேடிஎம்' என்ற பைக் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவுக்கென ஸ்பெஷல் பைக் தயாரிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

பஜாஜ் - கேடிஎம் கூட்டணி வளர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், இனி உருவாகும் பஜாஜ் பைக்குகள் ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன், இந்தியாவில் உள்ள ஜப்பானிய தொழில்நுட்பம் கொண்ட பைக்குகளுக்குப் போட்டியாக இருப்பதுடன், விலையும் மிகக் குறைவாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்!

2007-ம் ஆண்டு ஆஸ்திரியாவைச் சேர்ந்த புகழ் பெற்ற பைக் நிறுவனமான கேடிம் நிறுவனத்தின் 14.5 சதவிகித பங்குகளை வாங்கியது பஜாஜ். 2008-ம் ஆண்டில் இந்தப் பங்குகள் விகிதம் 25 சதவிகிதமாக உயர்ந்து, 2009-ல் 31.72 சதவிகிதமாக அதிகரித்துள்ளது!

கவாஸாகி ஸ்போர்ட்ஸ் பைக்குகளையும், கேடிஎம் ஸ்போர்ட்ஸ் பைக்குகளையும் பஜாஜ் தனது ப்ரோ பைக்கிங் ஷோரூம் மூலம் அறிமுகம் செய்யத் திட்டம் வைத்திருப்பதாகத் தெரிகிறது. 'இதன் முன்னோட்டத்துக்காகத்தான் நின்ஜா 250, பஜாஜின் ப்ரோ பைக்கிங் ஷோரூமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது' என்கிறார்கள்

விகடன்

2 comments:

வஜ்ரா said...
May 11, 2010 at 1:47 AM  

//
'வெஸ்பா' என்ற ஸ்கூட்டரைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியது பஜாஜ்.
//

வெஸ்பாவை பஜாஜ் தயாரிக்கவில்லை. பியாஜ்ஜியோவிடமிருந்து ரீபேட்ஜ் செய்து விற்றது.

பஜாஜ் தயாரித்து விற்ற ஸ்கூட்டர் சேதக் (chetak). மகாராஜா பிருத்வி ராஜ் சௌஹானின் குதிரையின் பெயர்.

எம்.எம்.அப்துல்லா said...
May 11, 2010 at 7:12 AM  

// மகாத்மா காந்தியின் நெருங்கிய சீடரான இவரை, 'தனது ஐந்தாவது பிள்ளை' என்று பூரிப்போடு காந்திஜி குறிப்பிட்டுள்ளார்.

//

அதென்னவோ தெரியவில்லை...எளிமையை போதித்த,எளிமையாய் வாழ்ந்த காந்திஜி சீடர்களாகவும்,நெருங்கிய நண்பர்களாகவும் வைத்திருந்தது பெரும் தொழில் அதிபர்களையும், நேரு போன்ற செல்வச் சீமான்களையும்தான். அவர் இறந்ததுகூட பிர்லாவின் வீட்டில்தானே!!

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites