ஆபாசத்தின் எல்லை எது?-போலீஸுக்குப் போன புகார்

10 May 2010 ·


'எழுத்தாளர் லீனா மணிமேகலை ஆபாசக் கருத்து களை புத்தகங்களிலும் இணையதளத்திலும் எழுதி வருகிறார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்!'' என சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந் திரனிடம் கடந்த வாரம் 'இந்து மக்கள் கட்சி' அமைப்புச் செயலாளர் கண்ணன் புகார் கொடுக்க... அதை சட்டப் பிரிவின் பார்வைக்கு அனுப்பி இருக்கிறார் ராஜேந்திரன். இலக்கிய வட்டாரத்தில் இந்த விவகாரம் விவாதக் கனலை சூடாக்கி இருக்கிறது.

புகார் கொடுத்த கண்ணன் என்ன சொல்கிறார்?

''ஆபாசப் புத்தகங்கள் விற்பது சட்டப்படி தவறு. இலக்கியவாதி என்கிற போர்வையில் உடலுறவு நிகழ்வுகளையும், அந்தரங்க உறுப்புகளையும்பற்றி லீனா மணிமேகலை எழுது வதும் ஆபாசம்தான். 'உலகின் அழகிய முதல் பெண்' என்கிற புத்தகத்திலும், இணையதளத்திலும் அவர் எழுதியிருக்கும் ஆபாசக் குப்பைகள் கொஞ்சநஞ்சமல்ல. புணர்ச்சி, விந்து, முலை, யோனி என அவர் எழுதி இருப்பதை எப்படி எழுத்துச் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ள முடியும்? புத்தகங்களை விற்பதற்காகவும், பப்ளிசிட்டிக்காகவும் கலாசாரத்தை சீரழிக்கும் லீனா மீது சட்டப்பிரிவுகள் 292, 293-ன் படியும், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67-ன் படியும் போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்!'' என்றார் கண்ணன்.

லீனா மணிமேகலையின் பதில்?

''இலக்கியத்துக்கும் இந்து மக்கள் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? என் எழுத்துகளைப்பற்றிப் பேச இவர்கள் யார்? இது பெரியார் பிறந்த மண் என்பதே இவர்களுக்கு மறந்துபோய்விட்டது. 'இதைத்தான் எழுத வேண்டும்' என்று என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. பெண் களுக்கு நிகழும் பாலியல் அத்துமீறல்களைப் பற்றி குரல் கொடுக்க எவருக்கும் உரிமை உண்டு. எந்தக்

கலாசாரக் காவலர்களாலும் இதையெல்லாம் தடுக்க முடியாது. இது தனியரு படைப்பாளியாக எனக்கு மட்டும் வந்திருக்கும் பிரச்னை கிடையாது. ஒட்டுமொத்தப் படைப்பாளர்களையும் சீண்டிப்பார்க்கும் வேலை இது. ஒரு சட்டத்துக்குள் இருந்துகொண்டு வாழச் சொல்லும் இவர்களின் அடக்குமுறை என்னி டம் எடுபடாது. பெண்ணிய வேதனைகளைப் பிரதிபலிக்கும் என் எழுத்துகள் தொடர்ந்து இதே வீச்சோடுதான் இருக்கும். இந்து மக்கள் கட்சி இனியும் இத்தகைய பிரச்னைகளை வளர்த்தால், தமிழகமே கொந்தளிக்கும்!'' என்கிறார்.

சரி... இந்த விவகாரத்தில் படைப்பாளர்களின் பார்வை என்ன?

நீல பத்மனாபன், சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த படைப்பாளர்:


''உடல் உறுப்புகளின் பெயர்களைக் குறிப்பிட்டு எழுதுவதை தவறு சொல்ல முடியாது. ஆனால், அந்தச் சொற்களின் பயன்பாடு வேண்டுமென்றே திணிக்கப் பட்டால், அது பெண்மையை இழிவுபடுத்தும் விஷயமாகவே இருக்கும். எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்பு உண்டு. இந்து புராணங்களிலேயே நாகரிகமாகவும் மறைமுகமாகவும் பாலியல் விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதேவேளை, இந்த விஷயத்தை சட்டரீதியாக அணுகுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. போலீஸ் அதிகாரிகளுக்கு இலக்கிய ஆராய்ச்சி நடத்துவதற்கான அனுபவமோ, நேரமோ இருக்குமா என்பதும் சந்தேகமே. அதனால், சர்ச்சைக்குரிய படைப்பு குறித்து வெளிப் படையான விவாதங்கள் நடத்தித் தெளிவு பெற வேண்டும் என்பதே என் கோரிக்கை!''


சாரு நிவேதிதா, எழுத்தாளர்:

''எழுத்துக்கும் பேச்சுக்கும் தடை போட இது ஒன்றும் ஆப்கான் மண் அல்ல. விபூதி பூசவும் தொழுகை நடத்தவும் எப்படி உரிமை இருக்கிறதோ அதுபோலத்தான் எழுதவும் உரிமை இருக்கிறது. பாலியல், அந்தரங்கம் குறித்த படைப்புகளை ஓர் ஆண் எழுதி இருந்தால் இந்த அளவு பிரச்னையாக வெடித்திருக்காது. யோனி, முலை எனக் குறிப்பிட்டு எழுதுவதால் பாலுணர்வு தூண்டப்படுகிறது என்பதெல்லாம் சுத்த கப்ஸா. இதை தடுக்க இந்து மக்கள் கட்சி என்ன இலக்கிய போலீஸா? சமீபத்தில் பார்த்த ஒரு தமிழ்ப் படத்தில் க்ரூப் செக்ஸை மிஞ்சக்கூடிய அளவுக்கு ஆபாசமான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. ஆபாசத்துக்கு எதிரானவர்கள் சினிமாவையும் சின்னத் திரையையும் விட்டுவிட்டு எழுத்தாளர்கள் மீது பாய்வது எந்த விதத்தில் நியாயம்? லீனாவின் தோழராக என்னை எண்ண வேண்டாம். எழுத்துச் சுதந்திரத்தின் மீது கொடூரக் கரங்கள் பாயக் கூடாது என்பதே என் வேண்டுகோள்!''


வசந்தி ஸ்டான்லி, தி.மு.க. ராஜ்யசபா எம்.பி:

''ஆண்டாளின் நாச்சியார் திருமொழியிலேயே, 'என் தட முலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப்படில்...' என்கிற வரிகள் எல்லாம் உண்டு. சங்க கால இலக் கியங்களில் தலைவனின் பிரிவு தொடங்கி, ஊடல், கூடல் விஷயங்களை சாலச்சிறந்த வரிகளால் சொல்லி இருப்பார்கள். நம் மனக் கருத்தை அதே அதிர்வுகளுடன் படைப்பாக்குவதுதான் எழுத்துச் சுதந்திரம். ஆனால், சலசலப்பு உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே பெண் உறுப்புகளின் பெயர்களை யாரேனும் எழுதினாலோ, அந்தரங்க செய்கைகள் - உணர்வுகள் குறித்து அதிகபட்சமான வார்த்தைகளில் குறிப்பிட்டாலோ... அது தவறுதான். எழுத்தில் முற்போக்குத்தனம் கொடிகட்டிப் பறக்கும் இந்தக் காலத்தில் 'அதை இதை எழுதக் கூடாது' என்பதெல் லாம் அடக்குமுறையின் இன்னோர் அங்கம்தான்!''


மதுமிதா, திரைப்பட இயக்குநர்:

''எழுதுவதற்கு சுதந்திரம் இருக்கிறது. அதற்காக எதையும் எழுதிக் குவிக்கலாம் என்பது சரியாகிவிடுமா? அமெரிக்காவில் திரைப்படங்கள் போலவே புத்தகங்களையும் வயதுவாரியாக வகுத்துக்கொண்டு படிக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் அப்படியான வரையறைகள் கிடையாது. அதனால் அந்தரங்கம் குறித்த எழுத்துகள் குழந்தைகளின் பார்வைக்கும் சென்றுவிட வாய்ப்பு இருக்கிறது. சமூகத்தின் மீது நமக்கு இருக்கும் பொறுப்போடு நாகரிகத்துடன் நம் படைப்புகளைக் கொண்டுபோய் சேர்ப்பதுதான் நியாயம் என்பது என் கருத்து!''


அப்துல்லா, வலைப்பதிவாளர்:

''பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தால், அதைப் படிக்கும் ஆய்வாளர் தவறு செய்தவன் மேல் நடவடிக்கை எடுப்பாரா... இல்லை 'புகாரில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் இவ்வளவு ஆபாசமாக இருக்கிறதே' எனச் சொல்லி அந்தப் பெண் மீதே நடவடிக்கை எடுப்பாரா? லீனாவின் எழுத்துகளை காலம் காலமாக அடக்கப்பட்ட பெண் வர்க்கத்தின் கூக்குரல் - உரிமைக் குரல் - போர்க் குரலாகத்தான் கருதத் தோன்றுகிறது. அதேநேரத்தில், யோனி, முலை போன்ற வார்த்தைகளை அடிக்கடி தன் கவிதைகளில் அவர் இடம்பெறச் செய்வது கவனத்தை ஈர்க்கும் உத்தியாகவே எண்ணத் தோன்றுகிறது!''


தமிழச்சி, வலைப்பதிவாளர், ஃபிரான்ஸ்:

''இளைய சமூகத்தினரை தவறான திசைக்குக் கொண்டுசெல்லக் கூடாது என்கிற கவனத்தினாலேயே லீனாவின் எழுத்துகளை நான் விமர்சிக்கிறேன். இணையத்தில் பாலியல் கருத்துகள் குறித்து வெளியிட்ட அறிக்கைகளை வெகுஜன ஊடகத்தில் வெளியிட லீனாவுக்கு தைரியம் இருக்கிறதா? வக்கிரமான ஒரு ஆண்மகனைப் பற்றி விவரிக்கும் அதிர்ச்சிகரமான வார்த்தைகள் கொண்ட கவிதையில், கார்ல் மார்க்ஸ், லெனின் ஆகிய தலைவர்களின் பெயர்களை அந்த ஆண்மகன் உச்சரிப் பதுபோல் கூறியிருப்பதேகூட அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்துகிறது! இதேபோன்ற ஒரு கவிதையில் இதே லீனா, தமிழகத்தின் மதிப்பிற்குரிய தலைவர் எவருடைய பெயரையேனும் போகிற போக்கில் பயன்படுத்த முடியுமா? எதிர்வாதங்கள் கிளம்பும்போதெல்லாம், 'ஆணாதிக்கம்... பெண்ணியப் படைப்பாளிகளை முடக்கும் முயற்சி' என்று லீனா அறிக்கைவிடுகிறார். வெறும் பாலியல் சுதந்திரம்தான் பெண் விடுதலைக்கு முதன்மையானது எனும் கருத்தை முன்வைத்தால், அது எவ்வளவு அபத்தமானதாக இருக்கும்? 'இருபாலுமை என்பது என் தேர்வு உரிமை' என்பதும், '100 ஆசை நாயகர்களை வைத்துக்கொள்வேன்' என்பதும்தான் பெண்ணிய உரிமையா? சமூகத்தில் விபசாரம் செய் வோர் உருவாக்கப்பட இலக்கியங்கள் காரணமாகும் நிலை வந்தால், அந்த சமூகம் உருப்படுமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும்.''


சி.திலகவதி, வழக்கறிஞர்:

''சமீப காலமாக பிரபலமான பெண் கவிஞர்கள்கூட பாலுறுப்புப் பெயர்களை பகிரங்கமாகப் பயன்படுத்து கிறார்கள். சினிமாவுக்கு எப்படி தணிக்கை இருக்கிறதோ... அதேபோல் எழுத்துக்கும் தணிக்கை ஏற்படுத்த வேண்டும் என்கிற போராட்டங்கள் எதிர்காலத்தில் தீவிரமாகும். அத்தகைய போராட்டங்களுக்கான காரண கர்த்தாக்களில் லீனாவும் இருப்பார்!''


'மண்மொழி' இ.ராசேந்திர சோழன், மூத்த படைப் பாளர்:

''உயிர் உறுப்புகளின் பெயர்களைப் பயன்படுத் துவது மரபு மீறல் ஆகாது. கண், காது, மூக்குபோல அவையும் உடல் உறுப்புகள்தானே. சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டவும், தனிப்பட்ட வேதனைகளை இறக்கிவைக்கவும் யாரும் எத்தகைய வார்த்தைகளையும், பாணிகளையும் பின்பற்றலாம். ஆனால், தனிப்பட்ட பப்ளிசிட்டிக்காக ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவது சம்பந்தப்பட்ட படைப்பாளருக்கே இழுக்கை ஏற்படுத்தும். அதேவேளை, இத்தகைய விஷயங்களை மிகப் பெரிய அபாயங்களாகச் சித்திரித்து பொது நல வழக்குப் போடுவதும், புகார் கொடுப்பதும் பப்ளிசிட்டிக்கான வேலைகள்தான்!''


எம்.கோபால், உதவி இயக்குநர்:

''பாலியல் கொடுமைகளை பொட்டில் அடித்தாற்போல் புரிய வைப்பதற்காக எழுதப்படும் எழுத்துகளை யாரும் அடக்கக் கூடாது. ஆனால், பலருடைய கவனத்தையும் திருப்ப வேண்டும் என்கிற சுய ஆதாயத்துக்காக, ஒரு 'ஷாக் வேல்யூ' கருதியே ஆபாச வார்த்தைகளையும் நிகழ்வுகளையும் பதிப்புக்குக் கொண்டு வருவது வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண் இனத்தின் வேதனையை மட்டுமல்ல... ஒடுக்கப்படும் வேறு யாருடைய உணர்வுகளையும் இன்னும் மிக அழுத்தமாக பிரதிபலிக்கவும், புரிய வைக்கவும் தமிழில் வலுவான வார்த்தைகளும், பாணிகளும் இருக்கின்றன. அதைவிடுத்து, அந்தரங்கத்தை வைத்தே அந்த அவலத்தைச் சொன்னால்தான் நிஜமான பாதிப்பைப் புரியவைக்க முடியும் என்பது பொய்! அத்தகைய படைப்புகளைக் கண்டுகொள்ளாமல் தவிர்ப்பதுதான் நல்லது. அதுபற்றி விவாதம் நடத்தினால் அதையும் மிகப்பெரிய விளம்பரமாகவே சம்பந்தப்பட்டவர்கள் எடுத்துக் கொள்வார்கள்!'

விகடன் '

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil