எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு உள்ள நூலகம் மற்றும் புத்தகக் கடைகளைத் தேடுபவன் நான். புத்தகக் கடைகளைப் பொதுவாக மக்கள் அதிகம் கவனம்கொள்வதே இல்லை. அது தங்களுக்குத் தொடர்பு இல்லாத ஒன்று என்ற எண்ணம் படித்தவர்களிடம்கூட உள்ளது. புத்தகக் கடைகள் எங்கே இருக்கின்றன என்று விசாரிக்கும்போது, பலரும் பள்ளி, கல்லூரிப் பாடப் புத்தகக் கடைகளையே காட்டுகிறார்கள். இலக்கியம், கலை, அறிவியல், தத்துவம், சமூகவியல் என்று அறிவுத் துறை சார்ந்த புத்தகங்களை விற்கும் கடைகள் அவர்கள் நினைவுக்கு வருவதே இல்லை. சில வேளைகளில் உள்ளூர் நண்பர்களுடன் தேடி அலைந்து புத்தகக் கடைகளைக் கண்டுபிடித்துவிடு வேன். அப்போது, இப்படி ஒரு கடை இருப்பது இப்போதுதான் தெரிய வருகிறது என்று உள்ளூர் நண்பர் வியப்பார். இவ்வளவுக்கும் அவர் அதே ஊரில் பிறந்து வளர்ந்தவர் என்பதுதான் இதன் முரண். ஒரு நகரின் மக்கள் தொகைக்கும் அங்கு உள்ள புத்தகக் கடைகளின் எண்ணிக்கைக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் மிகப் பெரிய இடைவெளி இருப்பதைக் கண்கூடாக உணர முடிகிறது. எல்லா ஊர்களிலும் புதிது புதிதாக உணவகங்கள், ஜவுளிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், நகைக் கடைகள், அலங்காரப் பொருள் அங்காடிகள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், புத்தகக் கடைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது புத்தக விற்பனை செய்பவர் எப்போதுமே ஏளனமாகவே பார்க்கப்படுகிறார். சாலையோரம் பீடா கடை வைத்திருப்பவரைக்கூட மக்கள் நினைவில் வைத்து இருக்கிறார்கள். நண்பர்களுக்குச் சிபாரிசு செய்கிறார்கள். ஒருநாள் அவரைக் காணவில்லை என்றாலும் அக்கறையாக விசாரிக்கிறார்கள்.ஆனால், அறிவை விருத்தி செய்வதற்குத் துணை செய்யும் புத்தகக் கடைக்காரர்களை எவரும் பாராட்டுவதோ, ஊக்கப்படுத்துவதோ இல்லை. புத்தக விற்பனையாளர்கள் வெறும் வணிகர்கள் அல்ல; மாறாக, படிப்பதில் அக்கறைகொண்டவர்கள். புத்தகங்களை ரசனையோடு நேசிக்கத் தெரிந்தவர்கள் என்பதை மக்கள் இன்று வரை புரிந்துகொள்வதே இல்லை. நேரம் போவதே தெரியாமல் இருப்பதற்கு ஓர் இடத்தைத் தேர்வு செய்யுங்கள் என்றால், உடனே புத்தகக் கடை என்று சொல்லிவிடுவேன். சில நேரம் விமான நிலையங்களில் அடுத்த விமானத்துக்காக ஐந்தாறு மணி நேரம் காத்திருக்கக்கூடும். அவ்வளவு நேரமும் புத்தகக் கடைக்குள்தான் இருப்பேன். புத்தகத்தைப் புரட்டுவதுபோன்ற இன்பம் வேறு எதிலும் இல்லை. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு புத்தகமும் ஒரு பறவை. அது ஒரு கிளையில் வந்து அமர்ந்து இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு வசீகர வண்ணமும் இனிமையான குரலும் இருக்கிறது. அவை ஒன்றாகத் தங்களுக்குள் பாடியபடி இருக்கின்றன. அப்படியானால், அந்த இடம் எப்படி இருக்கும்? எவ்வளவு தூரம் நம் மனதை அது களிப்பூட்டும்? அப்படித்தான் இருக்கிறது புத்தகக் கடையின் உள்ளே இருக்கும்போது. உலகம் பெரியது என்பதைப் புத்தகக் கடையே உணரச் செய்கிறது. எத்தனை எழுத்தாளர்கள், எவ்வளவு தகவல்கள், கதைகள், கவிதைகள், சிந்தனைகள், எந்தெந்த நூற்றாண்டிலோ வாழ்ந்து மறைந்தவர்கள் தங்கள் படைப்புகளின் வழியே இன்றும் உயிரோடு இருக்கிறார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு கவிதை வரியை இன்று ஒருவன் படித்து வியக்கிறான். அதைத் திரும்பத் திரும்பத் தனக்குள் சொல்லிக்கொள்கிறான். கொண்டாடுகிறான். எந்த மனிதனிடமும் புத்தகங்கள் பேதம் காட்டுவது இல்லை. சொற்கள் எவ்வளவு தித்திப்பானவை என்பதைப் புத்தகங்களே நமக்கு அறிமுகம் செய்திருக்கின்றன. புத்தகக் கடைகளை அகன்ற விருட்சத்தின் நிழலடிபோலத்தான் பார்க்கிறேன். அதன் குளிர்ச்சியும் தண்மையும் சொல்லில் அடங்காதது. புத்தகக் கடைவைக்கப் போகிறேன் என்று யாராவது சொன்னால், பலர் அதை ஊக்கப்படுத்துவது இல்லை. பிழைக்கத் தெரியாதவன் செய்யும் வேலை என்றே நினைக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஹாரிபாட்டர் நாவல் வெளியாகப்போகிறது என்று இங்கிலாந்து ராணி முதல் நாட்டின் கடைசிப் பிரஜை வரை இரவே வரிசையில் நின்று புத்தகம் வாங்கக் காத்துக்கிடக்கிறார்கள். மாநகரங்களில் உள்ள சில புத்தகக் கடைகள் வருடத்துக்கு 50 கோடி சம்பாதிப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. ஏன் இந்த முரண்? தமிழ்ப் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் குறைந்துவிட்டது என்பதைத்தானே இவை காட்டுகின்றன! தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ள புத்தகக் கடைகள் என்று ஒன்றுகூட நம்மிடையே இல்லை. கேரளாவில் கோயில்கள்தோறும் ஒரு புத்தகக் கடை உள்ளது. அதிகமான புத்தகங்கள் அங்குதான் விற்பனை ஆகின்றன. தமிழகக் கோயில்கள் ஒன்றில்கூட அப்படிப் பொதுவான புத்தகங்கள் விற்கும் கடைகளை நான் கண்டதே இல்லை. பேருந்து நிலையங்கள் அத்தனையிலும் புதிதாக புத்தகக் கடைகள் துவங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு ஒரு நல்ல திட்டத்தைக் கொண்டுவந்தது. ஆனால், அதைப் புத்தக விற்பனையாளர்கள் இன்று வரை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவே இல்லை. புத்தகக் கடைகள் ஒன்றுகூட இல்லாத ஊர்கள் தமிழகத்தில் நிறைய உள்ளன. ஆஸ்திரேலியாவில் பூங்காவில் செயல்படும் ஒரு புத்தகக் கடை உள்ளது. அது மாலை நேரத்தில் மட்டுமே திறக்கப்படுகிறது. பூங்காவுக்கு வரும் சிறார்களும் பெரியவர்களும் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிக்கொண்டு புல்வெளியில் அமர்ந்து படிக்கிறார்கள். தமிழகத்தில் அப்படி எவ்வளவு பூங்காக்கள் உள்ளன... அதில் ஒன்றிலாவது இதுபோன்ற சோதனை முயற்சி செய்துபார்க்கலாம்தானே. புத்தக விற்பனையாளர்களின் தனிமையும் புறக்கணிப்பும் வெளியே பகிர்ந்துகொள்ளப்படாத துக்கம். அதை இன்று வரை ஒரு புத்தக விற்பனையாளர்கூட பகிரங்கமாகச் சொல்லிக்கொண்டது இல்லை. அந்த வலியை நான் அறிந்திருக்கிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்வு இது. எனது நண்பர்களில் ஒருவருக்குப் புத்தகம் படிப்பதில் தீவிர ஆர்வம் இருந்தது. ஏதாவது தொழில் செய்யலாம் என்றதும் அவர் ஒரு புத்தகக் கடையை நடத்தலாம் என்று முடிவு செய்து, வாடகைக்கு ஒரு கடை எடுத்து ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்து புத்தகங்களை வாங்கிவைத்தார். அவரும் மனைவியும் இணைந்து கடையைக் கவனித்துக்கொள்வது என்று திட்டம். கடை திறப்பு விழா அன்று 100 பேருக்கும் மேலாக வந்திருந்தார்கள். அதன் மறுநாளில் இருந்து இரண்டு மாதங்கள் தினம் ஒரு ஆள் கடைக்கு வருவதேகூட பெரிய விஷயமாக இருந்தது. காலை ஒன்பதரை மணிக்கு கடையைத் திறந்துவைத்துவிட்டு இரண்டு மணி வரை நண்பர் கடையில் இருப்பார். அதன் பிறகு அவரது மனைவி கடைக்கு வருவார். அவர் இரவு எட்டு மணி வரை புத்தகக் கடையில் இருப்பார். இப்படி அவர்கள் ஒரு வருஷம் கடையை நடத்தினார்கள். ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு புத்தகங்கள்கூட விற்கவில்லை. நண்பரின் மனைவி மிகவும் மனக்கஷ்டம் கொண்டார். என்ன வேலை இது... ஏன் இதைச் செய்கிறோம் என்று புலம்பிக்கொண்டே இருந்தார். தனிமையும் விரக்தியும் அவரைக் கவ்விக்கொண்டன. புத்தகக் கடையில் சுழலும் காற்றாடி அவரின் மனவெறுமையைச் சொல்வது போலவே இருந்தது. புத்தகங்களை வாங்கக்கூட வேண்டாம். சும்மா வந்து பார்க்கக்கூட மக்களுக்கு ஏன் விருப்பமே இல்லை என்று அவர்கள் வருத்தப்பட்டார்கள். பின்பு ஒருநாள் மாலை இருவரும் கடையில் உட்கார்ந்து தங்களைச் சுற்றி உள்ள புத்தகங்களை ஒரு முறை திரும்பிப் பார்த்தார்கள். எவ்வளவு புகழ்பெற்ற எழுத்தாளர்கள், உயர்வான சிந்தனையாளர்கள், இலக்கியவாதிகள், ஆனால் யாரையும் மக்கள் விரும்பவே இல்லை. ஒயின் ஷாப்பில் தள்ளுமுள்ளு நடக்கிறது. தள்ளுவண்டிக் கடைகளைக்கூடத் தேடிப் போய் மக்கள் வாங்குகிறார்கள். ஆனால், புத்தகங்களுக்கு உலகில் மதிப்பே இல்லை என்று விரக்தி அடைந்து, தன் கடையில் உள்ள புத்தகங்கள் அத்தனையும் அள்ளி ஒரு பெரிய அட்டைப் பெட்டியில் போட்டு அதை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று சாலையோரம் வைத்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார்கள். இரவெல்லாம் கணவன் - மனைவி இருவரும் வாய்விட்டு அழுதிருக்கிறார்கள். ஆறுதல் சொல்ல எவரும் இல்லை. ஒரு வாரம் கடைப் பக்கமே போகவில்லை. கடையைக் காலி செய்து சாவியை ஒப்படைக்க ஒரு நாள் நண்பர் போனபோது, தான் வைத்துவிட்டுப் போன பெட்டியில் பாதிப் புத்தகங்கள் அப்படியே இருந்தன என்றும், ஓசியில் எடுத்துப் போங்கள் என்று சொன்னால்கூட மக்கள் புத்தகங்களைக் கொண்டுபோக விரும்பவில்லை என்றும் சாலையில் நின்று கண்ணீர்விட்டு இருக்கிறார். அதன் பிறகு அவர் வாசிப்பதையே நிறுத்திவிட்டார். அவரது ரசனை அப்படியே மாறிப்போய்விட்டது. படிப்பு ஏன் மனிதனைக் கைவிடுகிறது? படித்தவர்கள் தன்னை ஆதரிப்பார்கள் என்று நம்பிய மனிதன் ஏன் ஏமாற்றப்படுகிறான்? புத்தகக் கடை நடத்தித் தோற்றவர்களின் துயரம், ஏன் ஒருபோதும் பொதுவெளியில் எவரையும் குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுத்துவது இல்லை? யூதப் படுகொலைபற்றிய திரைப்படங்களில் ஆகச் சிறந்ததாகக் கொண்டாடப்படுவது இத்தாலியப் படமான 'Life is Beautiful'. கெய்டோ என்ற இத்தாலிய யூத இளைஞனின் கதை. கெய்டோவுக்கு ஒரேயரு கனவு. அது வாழ்நாளில் ஒரு புத்தகக் கடையைத் துவங்கி நடத்த வேண்டும் என்பது. அதற்காகப் பணம் சம்பாதிக்கப் பகுதி நேர ஊழியனாக ஓர் உணவகத்தில் வேலை செய்கிறான். ஒருநாள் உள்ளூரில் ஆசிரியையாக வேலை செய்யும் டோராவைக் காண்கிறான். அவள் அழகில் மயங்கி, அவளைக் காதலிக்கத் துவங்குகிறான். டோராவுக்கு முன்னதாகத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருக்கிறது. அவளைத் திருமணம் செய்துகொள்ள இருப்பவன் ஒரு ராணுவ அதிகாரி. ஆனால், அவள் கெய்டோவை விரும்புகிறாள். கெய்டோ, வெறும் ஆள். அதிலும் புத்தகக் கடை வைக்க நினைக்கும் உதவாக்கரை என்று டோராவின் குடும்பம் அவனை வெறுக்கிறது. குடும்பத்தை மீறித் தனது காதலியை அடைகிறான் கெய்டோ. புத்தகக் கடை நடத்த முயற்சிப்பவன் வாழ்நாளில் வெற்றி பெறவே முடியாது என்கிறாள் டோராவின் தாய். வாழ்ந்து காட்டுகிறேன் பாருங்கள் என்று தான் விரும்பியபடி ஒரு புத்தகக் கடை நடத்தத் துவங்கி, தனது மனைவி, மகனுடன் அழகான வாழ்க்கையைத் துவக்குகிறான் கெய்டோ. விதி விளையாடத் துவங்குகிறது. ஹிட்லரின் யூத வெறுப்பு காரணமாக இத்தாலியில் உள்ள யூதர் கள் கைது செய்யப்பட்டு, சிறை முகாமுக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள். கெய்டோ ஒரு யூதன் என்பதால், அவன் தன் மகனுடன் ஒரு முகாமில் அடைக்கப்படுகிறான். தன் மகனுக்கு சிறைக் கொடுமையோ, சாவதற்காகத் தாங்கள் கொண்டுவரப்பட்ட விஷயமோ தெரியக் கூடாது என்பதற்காக, இது மொத்தமாக ஒரு விளையாட்டு, இதில் வென்றால் மிகப் பெரிய பரிசு கிடைக்கும் என்று பையனை நம்பவைக்கிறான் கெய்டோ. முடிவில், கெய்டோ நாஜிக்களால் சுட்டுக் கொல்லப்படுகிறான். மகன் அப்போதும் மாபெரும் போட்டி ஒன்றில் தான் வென்றுவிட்டதாகவே நினைக்கிறான். அவன் வளர்ந்து பெரியவனாகி உண்மையை உணரும்போது, தனது தகப்பன் தன் மீதுகொண்ட நேசத்தை, சாவின் முன்னால்கூட அப்பாவின் பரிகாசத்தை உணர்ந்து பெருமிதம்கொள்கிறான். யூதப் பிரச்னையைவிட பெரிய பிரச்னையாக புத்தகக் கடை நடத்த ஆசைப்படுகின்றவன் என்பதால், கெய்டோ அடையும் அவமானம் மனதில் நிற்கிறது. உலகம் எங்கும் புத்தகம் படிப்பவர்கள், அதை விற்பனை செய்பவர்கள் புரிந்துகொள்ளப்படுவதே இல்லையோ என்று தோன்றுகிறது. புத்தகங்கள் நிறையக் கற்றுத்தருகின்றன. குறிப்பாக, அமைதியை, சகிப்புத்தன்மையை, காத்திருத்தலை. எல்லாப் பிரச்னைகளுக்கும் அப்பால் மனிதர்களை நேசிக்க புத்தகங்களே கற்றுத்தருகின்றன. அதுதான் பெரும்பான்மையான புத்தக வாசகர்கள், விற்பனையாளர்கள் மௌனமாக இருப்பதற்குக் காரணம்போலும். புத்தகக் கடைகளை வாசகர்களின் சந்திப்பு வெளியாக, கலாசார மையமாக, அறிவியகத்தின் துவக்கத் தளமாக உருமாற்றலாம். உலகெங்கும் புத்தகக் கடைகள் கலாசார மேம்பாட்டுக்கு உதவியிருக்கின்றன. அதைச் சாத்தியமாக்குவது நமது அக்கறையில்தான் இருக்கிறது! பார்வை வெளிச்சம்! உலகின் மிகப் பழமையான புத்தகக் கடை மொராவியன் புக் ஷாப். அமெரிக்காவில் உள்ள இந்தப் புத்தகக் கடை 1745-ம் ஆண்டு துவக்கப்பட்டது. மொராவியா தேவாலயத்தால் துவக்கப்பட்ட இந்தப் புத்தகக் கடை தலைமுறைகளைக் கடந்து இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது நன்றி விகடன்
ஒவ்வொரு புத்தகமும் ஒரு பறவை! -சிறிது வெளிச்சம்!
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
1 comments:
aathavan,
romba nalla visayatha solirukinga.. naanum book padika aarambichu 2 years thaan aagathu. ipo lam enaku book irundha bore adipathu illai.. ungaluku therincha nalla bookshop list onnu anupalame..\
Post a Comment