இளமையில் காமம் மிக முக்கியமான தேவையா?

10 May 2010 ·

மனைவி சொல் மந்திரமாவது எப்போது? மதன்-கேள்வி பதில்

டெல்லியில் இருக்கும் சில பதிப்பகங்களின் பெயரில் தமிழகக் கடைகளில் 'ஹாரிபாட்டர்' போன்ற புத்தகங்களை மலிவு விலைக்கு விற்பனை செய்வது குறித்து?

இதுதான் Piracy. கள்ளப் புத்தகங்கள்! கள்ளத்தனமாகச் செய்கிற எதையும் சுலபத்தில் ஒழிக்கவே முடியாது. சினிமா, மது, எலெக்ட்ரானிக் பொருட்கள், எல்லாவற்றிலும் கள்ளத்தனம் புகுந்து கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டுகிறது. நீங்கள் உழைத்து சிரமப்பட்டுச் சம்பாதித்த பணத்தை எவனோ ஒரே நாளில் கொள்ளை அடித்துக்கொண்டு ஓடிவிடுவது போலத்தான் இதுவும். உலகெங்கும் சுறுசுறுப்பாக நடந்துவரும் இந்தக் கொள்ளையின் பின்னணியில் 'பெருந்தலைகள்' இருப்பதால் 'மேலெழுந்த வாரி' நடவடிக்கைகளைத்தான் எடுக்க முடிகிறது!

மனிதப் பிறவியின் மாபெரும் செயல் எது?

மனிதப் பிறவி என்பது இயற்கையின் மாபெரும் செயல்! அதை அடுத்துதான் மனிதப் பிறவி 'மாபெரும்' செயலை எல்லாம் செய்ய முடியும். அது எது என்று நீங்கள் கேட்டால், மனித இனம் முடிவுபெற்ற பிறகுதான் 'சாதனை லிஸ்ட்'டைப் பார்த்துச் சொல்ல முடியும். யார் அப்போது இருந்து இதைச் சொல்லப்போகிறார்களோ?

உங்களுக்கு நீங்களே 'சபாஷ்' போட்டுக்கொண்ட விஷயம் ஏதாவது உண்டா?

அரிதாக, எப்போதாவது போட்டுக்கொண்டது உண்டு. ஆனால், எதற்கு என்றுகூட நினைவில்லை. அநேகமாக, ஏதாவது ரொம்ப அல்ப விஷயமாக இருக்கும்!

மனைவி சொல் மந்திரமாவது எப்போது?

இது என்ன குழந்தைத்தனமான கேள்வி? வாழ்க்கையில் மனைவி பிரவேசித்த உடனேயேதான்!

நிமிர்ந்து நடந்தால் தலைக்கனம் என்கிறார்களே சிலர்?

இயற்கையாகவே நிமிர்ந்து நடக்கப் பழகிக்கொள்வது வேறு. செயற்கையாக 'நிமிர்ந்து' நடப்பது வேறு. 'என்ன, ரொம்ப 'அல்டாப்'பா போறாரு?' என்று சொல்லவைக்கும் அளவுக்கு நடைபோட்டால் அப்படித்தான் சொல்வார்கள். விண்வெளி விஞ்ஞானி ஒருவர் இரவில் நடந்துபோகும்போது, வானத்து நட்சத்திரங்களையே கர்வத்துடன் அண்ணாந்து பார்த்துக்கொண்டுபோய் ஒரு பள்ளத்தில் விழுந்தார். ஓடி வந்து பள்ளத்தில் இருந்து அவரைத் தூக்கிவிட்ட ஒரு சிறுவன் 'வானத்தைப் பாருங்க... வேணாம்னு சொல்லலை. அப்பப்ப கீழேயும் பார்த்துக்குங்க. இங்க ரோடு கொஞ்சம் மோசம்!' என்றான். இது ஈசாப்புக் கதையில் வருகிறது!

மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் இந்தியாவை ஆண்டதால் நமக்கு என்ன லாபம்?

சுருக்கமாக - புதிய கட்டடக் கலை, தந்தூரி அடுப்பு மற்றும் பரோட்டா போன்ற பல உணவு வகைகள், சல்வார்கமீஸ் மற்றும் ஆங்கிலம், கோட்டு, டை, கப் அண்ட் சாசர்!

கடவுளுக்குப் பக்தர்கள் கோயில் கட்டுவது, நடிகைகளுக்கு ரசிகர்கள் கட்டும் ஆலயம் ஒப்பிடுக?

ஒவ்வொருவருக்கு ஒரு கடவுள்! சிலருக்கு, நேரில் பார்க்க முடிந்த கடவுள்கள்தான் நடிகைகள். ஒரு பக்தருடைய கனவில் அம்மன் வந்து 'எனக்கு ஒரு கோயில் கட்டு!' என்று சொல்லலாம். ஒரு ரசிகருடைய கனவில் நடிகை வந்து 'எனக்கு ஒரு கோயில் கட்டு!' என்று சொல்லிஇருக்கலாம்.' அம்மனுக்குக் கோயில் கட்ட பக்தர்கள் நிதி திரட்ட வேண்டியிருக்கும். தனக்காக ஒரு கோயில் என்றால், நடிகையேகூட மொத்தப் பணத்தையும் தரக்கூடும்!

பெரிய ஞானியான கௌதம முனிவருக்கு உண்மை சேவல் - போலி சேவலின் கூவல் ஏன் தெரியவில்லை?

அதற்காக அவர் 24 மணி நேரமும் 'ஞான திருஷ்டி'யிலேயே எல்லாவற்றையும் சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா? ரேடியோ மாதிரி தேவைப்படும்போது மட்டும்தான் முனிவர்கள் 'ஞான திருஷ்டி'யை ட்யூன் பண்ணிக்கொள்வார்களோ என்னவோ!

நம்மைச் சுற்றி நிறைய துரியோதனர்களும் சகுனிகளும் உள்ளனர். எப்படிச் சமாளிப்பது?

தெரியுதுல்லே?! ராமரைப்போல ரொம்ப நல்ல பிள்ளையாக இல்லாமல், கவனமாக கிருஷ்ணரைப்போல சமாளிக்க வேண்டி யதுதான்!

மனிதன் மரணம் அடைந்த பின் எல்லா திசுக்களும் அழிந்துவிடும் என்பதுதானே அறிவியல் உண்மை. பின் எப்படிப் புழுக்கள் உண்டாகி நெளிகின்றன. துர்நாற்றம் வீசுகிறது?

எல்லாத் திசுக்களும் அழிந்த பிறகும் அந்த உயிரற்ற உடல் மிச்சம் இருக்கிறதே. இறந்த பிறகு, உடலில் இருந்த கோடிக்கணக்கான நல்ல பாக்டீரியாக்களும் கெட்ட பாக்டீரியாக்களாக மாறி, வயிற்றில் இருந்தும் சிறு, பெரு குடல் பகுதிகளில் இருந்தும் கிளம்பி ரத்த நாளங்கள் வழியாகப் பயணித்து, உடல் முழுவதும் பரவுகின்றன. இதற்கு Putrefaction(அழுகுதல்) என்று பெயர். சொதசொதவென்று காய், கனிகள் அழுகி துர்நாற்றம் எடுப்பதுபோலத்தான்! கூடவே, பல்லாயிரக்கணக்கான ஈக்கள் பறந்து வந்து உடலை மொய்த்து, லட்சக்கணக்கில் முட்டைகளைப் பொரிக்கின்றன. இந்த முட்டைகளில் இருந்து வெளிவருவதுதான் Maggots என்று அழைக்கப்படும் புழுக்கள். தோலுக்கு அடியிலும் இவை புகுந்துகொண்டு, உடல் முழுவதும் புழுக்களால் ஆன போர்வையாகக் காணப்படும். இது எல்லாம் சில மாதங்களுக்குள் நடந்து முடிந்துவிடும். சுமார் ஓராண்டு கழித்து மிஞ்சுவது க்ளீனான, கச்சிதமான எலும்புக் கூடு மட்டுமே. காயமே இது நிஜமாவே பொய்யடா!

இளமையில் காமம் மிக முக்கியமான தேவையா?

'உங்களுக்கு ஏதாவது தேவையா?' என்று கேட்கிற பணியாள் அல்ல காமம்; அது உங்கள் எஜமானன்! ஆகவே, எச்சரிக்கையாகப் பழக வேண்டும். காமம் என்கிற கருப் பொருளை மையமாகவைத்து அதைச் சுற்றி உருவாக்கப்பட்டதுதான் மனித உடல். அந்த உடலுக்கு உள்ளே ஒவ்வொரு நாளும் பல கோடி விந்தணுக்கள் தொடர்ந்து உற்பத்தியாகிக்கொண்டே இருக்கின்றன. Demand விடப் பல லட்சம் மடங்கு Supply! இளமையில்தான் இதன் உச்சகட்ட சப்ளை. உங்களுடைய பரம்பரையின் அத்தனை DNA வரைபடங்களையும் தன்னிடம் வைத்துக்கொண்டு வெளியே கிளம்பி அடுத்த உயிரினத்தை உற்பத்தி செய்வதற்காக அந்த உயிரணுக்கள் எழுப்பும் ஆவேசக் குரல் உங்களுக்குக் கேட்கிறதா?!

செக்ஸில் மனிதன் ஏன் ஈடுபடத் துடிக்கிறான்? அது ஜோராக இருப்பதால். அடுத்த கேள்வி - அது ஏன் ஜோராக இருக்கிறது? அது ஜோராக இருந்தால்தான் அதில் மனிதன் தொடர்ந்து ஈடுபடுவான். ஆகவேதான், உயிரினங்கள் தோன்றிய கோடிக்கணக்கான ஆண்டுகளாகவே காமத்தைக் கருப் பொருளாகவைத்து இயற்கை தன் வித்தையை நிகழ்த்தி வருகிறது. 'அநேகமாக, உலகில் உள்ள அத்தனை பொருட்களுமே யாராவது ஒருவருக்குக் காம உணர்ச்சியைக் கிளர்ந்தெழவைக்கிற ஒன்றுதான்!' என்றார் புகழ்பெற்ற செக்ஸ் ஆராய்ச்சியாளர் ஆல்ஃபிரட் கின்ஸே. இந்தக் காமம் என்கிற குதிரை ஓடியே தீரும். லகானை ஜாக்கிரதையாகப் பிடித்துக்கொண்டு பயணிப்பது மட்டுமே நம்மால் செய்ய முடியும். மற்றபடி இந்த உணர்வை மறுக்கவோ, மறைக்கவோ, பதுக்கவோ முடியாது!

ஆனானப்பட்ட விசுவாமித்திரர் மேனகையிடம் வழிந்தார். சிவபெருமானின் தவம் பார்வதியின் ஒய்யாரத்தால் கலைந்தது. நகரத்தின் மையத்தில், இளமைத் துடிப்போடு, ஆப்பிளும், திராட்சையும், மசாலா பாலும் சாப்பிட்டுக்கொண்டு, பக்தைகள் புடை சூழ அமர்ந்து காமத்தைக் கட்டுப்படுத்துவது எல்லாம் நடக்கிற காரியமா? பாவம்!

கொசு பேட் (Bat) கொண்டு கொசுவைக் கொன்றிருக்கிறீர்களா?

ஆஹா! வரவர மகேஷ்பூபதி, சானியா மிர்சா அளவுக்கு டென்னிஸ் விளையாட்டையே கற்றுக்கொண்டுவிடுவேன் போலிருக்கு!

நன்றி விகடன்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil