பாலிதீன் பை சாம்பாரில் ஒளிந்திருக்கும் பயங்கரம் !

11 May 2010 ·

பாலிதீன் பை சாம்பாரில் ஒளிந்திருக்கும் பயங்கரம் !

'எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக்கடா'

- இப்படித்தான் பாடியிருப்பார் பாரதி இப்போது நம்முடன் வாழ்ந்திருந்தால்! காய்கறி கடை, பூக்கடை, மளிகைக் கடை, ஜவுளிக்கடை, இறைச்சிக் கடை என எந்தக் கடையிலிருந்து திரும்பினாலும் கையில் தொங்குகின்றன ஆபத்தை ஒளித்து வைத்திருக்கும் அழகான பாலிதீன் பைகள்.

அந்தப் பைகளுக்குள் பதுங்கி இருக்கும் ஆபத்துகள் பற்றி நெடுங்காலமாகவே அறிவியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் அலாரம் அடித்துக் கொண்டிருந்தாலும், இன்னொருபுறம் அதன் பயன்பாட்டை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறோம்'பிளாஸ்டிக் பொருட்களின் தாறுமாறான பயன்பாட்டை மத்திய அரசால் தடை செய்ய முடியாது. மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும்தான் முடிவு செய்யவேண்டும்' என்று மத்திய அரசுகூட சமீபத்தில் கைவிரித்துவிட்டது.

''இந்த விஷயத்தில், பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி யாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையேயான பேரங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் சூழ்ச்சிகள் அடங்கியிருக்கின்றன'' என்று குமுறுகிறார்கள்... விவரமறிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்இப்படி அக்கறையற்ற ஆட்சியாளர்கள் இருப்பதால்... மிக மோசமானதொரு நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது நம்முடைய எதிர்காலமும்... பூமிப்பந்தின் எதிர்காலமும்! இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது... முடிந்த அளவுக்கு நாமே பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வதுதான்.

'அது அவ்வளவு அவசியமானதா...?' என்று யோசிப்பவர்கள்... மேற்கொண்டு படியுங்கள்.

"பயன்படுத்துவதற்கு எளிதானது என்றுதான் பிளாஸ்டிக்கை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஆனால், பயன்படுத்தி குப்பையில் வீசிய பிறகு அந்த பிளாஸ்டிக் என்னவாகிறது என்பது பற்றி யோசிக்க யாருக்கும் நேரமில்லை. விளைவு, பயங்கரவாத பிரச்னைக்கும் மேலாக... உலகையே அச்சுறுத்தும் பிரச்னையாக எழுந்துள்ளது பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் விஷயம்'' என்று சொல்லும் 'பசுமைத் தாயகம்' அமைப்பைச் சேர்ந்த அருள்.

"பிளாஸ்டிக் மற்ற குப்பைகளைப் போல மண்ணில் மட்கக் கூடியது அல்ல; மண்ணில் அது அப்படியே இருப்பதால், மழை நீர் நிலத்தடிக்குள் வடிந்து செல்ல முடியாமல், குறைந்த அளவு மழை பெய்தாலும் 'வெள்ளம்... வெள்ளம்' என்று சென்னை போலவே பல இடங்கள் அலறுகின்றன. ஆடு, மாடுகள் இந்த பிளாஸ்டிக்கை சாப்பிடுவதால், அதன் பாலில் கெமிக்கல் கலந்திருக்கிறது. அந்தப் பாலைத்தான் நாமும் குடித்துக் கொண்டு இருக்கிறோம். உச்சகட்ட கொடுமையாக தாய்ப்பாலிலும் இந்த கெமிக்கல் இருக்கிறது என்பது நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த பிளாஸ்டிக்கை அதிக அளவு பயன்படுத்த ஆரம்பித்து 50 ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்குள் இது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் நிலத்தோடு நின்றுவிடவில்லை. கடல் வாழ் உயிரினங்களான வகை வகையான மீன்கள், சுறா, திமிங்கலம் மற்றும் கடல் தாவரங்களின் இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டுஇருக்கிறது. இந்த கடல்வாழ் உயிர்களை நம்பி பூமியில் இருப்பவர்கள் எத்தனை லட்சம் பேர்..?

நம் சின்னச் சின்ன தேவைகளுக்காக பயன்படுத்தும் இந்தப் பிளாஸ்டிக், இப்படி நம் பூமிக்கு விளைவித்திருக்கும் ஆபத்து மிகப்பெரியது. இதன் பயன்பாட்டை உடனடியாக தடை செய்யவில்லையெனில், இப்போது நாம் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கும் நம் பூமி, ஒரு நாள் முழுவதுமாக முடிந்துவிடும்!'' என்றார் சோகமாக.

ஐந்திணை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் தமிழ்வேங்கை, "சில மாதங்களுக்கு முன் டெல்லியில் பல நூறு மாடுகள் இறந்தன; இறந்த அத்தனை மாடுகளின் வயிற்றிலும் பாலிதீன் பைகள் இருந்தன! கேட்பதற்கே எத்தனை அதிர்ச்சியாக இருக்கிறது? இந்தியாவில் உருவாகும் மருத்துவ - பிளாஸ்டிக் கழிவுகள் மற்ற உலக நாடுகளைவிட அதிகம். நாம் பயன்படுத்தும் ஒரு கேரி பேக், சூரிய ஒளியால் மட்குவதற்கு 300 வருடங்கள் ஆகும் என்றால், தினம் தினம் எத்தனை மீட்டர் அளவுள்ள இந்த விஷக் குப்பையை 'ஜஸ்ட் லைக் தட்' பயன்படுத்துகிறோம்? இதற்கு மாற்றாக சணல் பைகளை பயன்படுத்தலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள், விஞ்ஞானிகள். பல நூறு வருஷங்களாக இந்த சணல் பைகளை பயன்படுத்தும் முன்னோடி சமூகம் நம்முடையது. மீண்டும் அது நம் கைகளுக்கு வரவேண்டும்'' என்று சொன்னார்.

இந்த பிளாஸ்டிக்கால் ஏற்படும் நோய் அபாயங்கள் பற்றி விளக்கினார் சென்னை, மாநகராட்சி மருத்துவர் செல்வராஜ். "நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் பிஸ்பினால்-ஏ (Bisphenol -A) என்ற கெமிக்கல் இருக்கிறது. இதை அதிக அளவில் பயன்படுத்தும்போது ஆண், பெண் இருவருக்கும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. அதனால்தான் இன்று எங்கு பார்த்தாலும் செயற்கை வழி கர்ப்பங்கள் பெருகி வருகின்றன. அதுமட்டுமல்ல, 10, 11 வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்படைந்து விடுகிறார்கள். கேன்சர், ஒபிஸிட்டி, தைராய்டு கோளாறு என பல நோய்களுக்கும் வாசல்படியாக இருக்கிறது இந்த பிளாஸ்டிக் பயன்பாடு. அதனால்தான் மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேஷம், டெல்லி, ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்களில் டூரிஸ்ட் ஸ்பாட்டுகள், மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளார்கள்.

ஆனால், இதெல்லாம் ஏதோ பக்கத்து கிரக செய்தி என நினைத்துக் கொண்டு... பிளாஸ்டிக் கப்பில் டீ குடிக்கிறோம். ஐஸ்கிரீம், தயிர், பால், எண்ணெய், அரிசி, பருப்பு என அனைத்தும் பிளாஸ்டிக் பேக்குகளில் வாங்குகிறோம். இதையெல்லாம்விடக் கொடுமை... சுடசுடச் சாப்பாடு, சாம்பார், சூப் என்று பாலிதீன் பைகளில் பேக் செய்து சாப்பிட்டு, தூக்கி எறிந்து விட்டு வருகிறோம். ஆனால், வயிற்றுக்குள் போன அந்த சாப்பாட்டுடன் கெமிக்கலும் சேர்ந்து போயிருக்கிறது என்பதை வசதியாக மறந்து விடுகிறோம்'' என்று திகில் செய்தி சொன்ன டாக்டர்,

''இதற்கு மேலும் காசு கொடுத்து நோயை வாங்க வேண்டுமா என யோசியுங்கள் - ஒவ்வொரு முறையும் பாலிதீன் பேப்பர்களில் சாப்பிடும் போதும், டீ குடிக்கும் போதும்!'' என்று பொறுப்புடன் எச்சரித்தார்.

முடிவு உங்கள் கையில்!

-vikatan

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil