உலுக்கும் டெலிபோன் டேப் -பவர் நீரா ராடியா

07 May 2010 ·


''முதல்வரின் டெல்லி விசிட் ரொம்ப சூப்பரா போச்சு. தலைவர் சொன்னது எல்லாத்தையும் சோனியாம்மா ஏத்துக்கிட்டாங்க. இனி கனிதான் டெல்லிக்கு ராணி...'' - இப்படியெல்லாம் உற்சாக பலத்துடன் இருந்த தி.மு.க. மேலிட தலைவர்கள், கடந்த புதன் இரவு வெளியாகத் தொடங்கிய தொலைபேசி டேப் செய்திகளைக் கண்டு ஆடித்தான் போனார்கள்.. நீரா ராடியா என்கிற பலம்வாய்ந்த 'லாபியிஸ்ட்' பெண்மணி அடுத்தடுத்து சில பிரபலங்களுடன் பேசிய தொலைபேசிப் பேச்சின் சில பகுதிகள் என்று சொல்லி, அந்த டேப் விவரங்கள் செய்தியாகப் படிக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி முடிந்த கையோடு... தி.மு.க. தரப்பிலிருந்து யாருக்கு என்ன பதவி என்று மத்திய அரசோடு பேரங்கள் தொடங்கிய சமயத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் தொலைபேசி உரையாடல்கள் அவை.'மறுபடி தொலைதொடர்புத் துறை கிடைக்குமா?' என்று ஆ.ராசாவுடனும்... 'அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகிய மூன்று குடும்பங்களுக்கும் மந்திரி பதவி வாங்கித் தருவதில் கருணாநிதி படும் சிரமங்கள்' குறித்து கனிமொழியுடனும் நீரா ராடியா பேசியதாக விவரங்கள் அந்த டேப் தொகுப்பில் இருந்தன.

ஆ.ராசாவுக்கு தொலை தொடர்புத் துறை கிடைத்தால் தயாநிதி மாறன் எப்படி எடுத்துக் கொள்வார் என்பது பற்றியும், டி.ஆர்.பாலுவின் மன ஓட்டங்கள் பற்றியும் இந்த நீரா ராடியாவுடன் ஆ.ராசாவும், கனிமொழியும் எதற்காக இத்தனை நம்பிக்கை வைத்து பேசவேண்டும் என்ற கேள்வியும் குழப்பமும் இயல்பாகவே இதனால் எழத்தான் செய்தது. மத்திய அமைச்சரவையின் முக்கிய இலாகாக்களை ஒதுக்கும் விஷயங்கள் குறித்து அப்படியரு அதிகாரத் தொனி மிக்க வார்த்தைகளில் அந்த 'லாபியிஸ்ட்' பெண்மணி பேசுவதாகச் சொன்னது டேப் தொகுப்பு!

விவகாரம் அதுமட்டுமல்ல.... தொலைதொடர்புத் துறையின் சார்பாக அதற்கு முன்பும் அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் இந்த நீரா ராடியாவும் பல மணி நேரங்கள் பேசிய தொலைபேசி உரையாடல்களின் தொகுப்பு, வருமான வரித்துறைக்கென்றே உள்ள இன்டெலிஜென்ஸ் பிரிவின் வசம் இருப்பதாகவும் அடுத்தடுத்து வெளியாகத் தொடங்கிவிட்டன தகவல்கள். வருமான வரித் துறை டேப் செய்திருந்த இந்த உரையாடல்களை, சி.பி.ஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அளித்து உதவும்படி டெபுடி ஐ.ஜி-யான வினித் அகர்வால் வைத்த வேண்டுகோள் கடிதம் என்று ஒரு நகலும்.... 'ஆமாம்... நிறைய விவகாரங்களை இது தொடர்பாக டேப் செய்திருக்கிறோம். உரியமுறையில் கேட்டு எங்களிடம் பெற்றுக் கொள்ளுங்கள். அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக உங்கள் வசம் ஏதேனும் தகவல் வைத்திருந்தால், அதை எங்கள் விசாரணைக்கு நீங்களும் கொடுத்து உதவுங்கள்' என்று வருமான வரித்துறையின் இணை இயக்குநர் ஆஷிஷ் அப்ரால் என்பவர் பதில் எழுதியாக ஒரு நகலும் இப்போது டெல்லியில் கசிந்து... பெரும் புயலைக் கிளப்பத் தொடங்கியிருக்கிறது.

இந்தக் கடிதப் பரிமாற்றங்கள் 2009 வருடம் நவம்பர் மாதத்தில் நடந்ததாக அந்த நகல்களில் உள்ள தேதி குறிப்பிடுகிறது.

அதாவது, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து புயலடிக்கத் தொடங்கிய சமயத்திலிருந்தே, அது தொடர்பான ரகசிய விசாரணைகளில் வருமான வரித் துறைக்கென்று உள்ள இன்டெலிஜென்ஸ் பிரிவு இறங்கிவிட்டதாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வருமான வரி அதிகாரி அளித்த பதில் கடிதத்திலேயே இந்த 'லாபியிஸ்ட்' பெண்மணி நீரா நாடியா பற்றி அதிர்ச்சியும் பிரமிப்பும் கலந்த தகவல்கள் அடுக்கப்பட்டுள்ளன.

வைஷ்ணவி கார்ப்பரேட் கன்ஸல்டன்ட், நோயஸிஸ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் சர்வீஸ், விட்காம் மற்றும் நியூகாம் கன்சல்டன்ஸி என்று பல்வேறு நிறுவனங்களின் முக்கிய அச்சாணியாக இயங்கும் இந்த பெண்மணியின் தொலைபேசி உரையாடல்களை, மத்திய உள்துறை செயலாளரின் அனுமதி பெற்றே டேப் செய்து வந்ததாகக் கூறுகிறது வருமானவரி கடித நகல். விமானப் போக்குவரத்து மற்றும் பல துறைகளில் உள்ள பிரமாண்ட நிறுவனங்களுக்கு 'ஆலோசகராக' செயல்படும் நீரா ராடியாவின் நிறுவனங்கள், தொலை தொடர்புத் துறை தொடர்பான நிறுவனங்களுடன் இறுக்கமான நட்பில் இருப்பதையும் கடித நகல் கூறுகிறது. 'தொலைதொடர்புத் துறை தொடர்பான லைசென்ஸ்கள் பெற்றுக் கொடுப்பதில் இந்தப் பெண்மணிக்கு முக்கியப் பங்கு இருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். கூடவே, முக்கிய மீடியாக்களையும் தன் கட்டுப்பாட்டில் இவர் வைத்திருக்கிறார். தொலைபேசி லைசென்ஸ் தொடர்பான சில நிறுவனங்களின் முதலீட்டை இந்தியாவுக்குள் படிப்படியாகக் கொண்டு வரும்படி இவர் அறிவுறுத்தும் சில தொலைபேசி உரையாடல்களும் எங்களிடம் உள்ளது. இல்லையென்றால், லைசென்ஸ் பெற்றதன் மூலம் கொள்ளை லாபம் பெற்றது தெரிந்துவிடும் என்றும் இவர் அறிவுரை கூறுகிறார்' என்று சொல்லும் அந்த வருமான வரி கடிதம்...

'தொலைதொடர்பு அமைச்சருடன் நேரடியாகவே இவர் பேசிய உரையாடல்களை நாங்கள் வைத்துள்ளோம். டெலிகாம் லைசென்ஸை குறிப்பிட்ட நிறுவனங்களுக்குப் பெற்றுத் தருவதில் தனக்குள்ள முக்கியப் பங்கு குறித்து இந்த நீரா ராடியா பெருமையோடு மத்திய அமைச்சரிடம் பகிர்ந்துகொள்கிறார்' என்று கூறுகிறது. இது விவகாரமாக நீரா ராடியா தொடர்புகொண்டிருந்த மற்ற முக்கிய நபர் பற்றிய தகவல்களும் தங்களிடம் உள்ளதாகக் கூறுகிறது அந்தக் கடித நகல்.

மத்திய அமைச்சர் பதவியில் ஆ.ராசாவை தொடர்ந்து நீடிக்கச் செய்வதற்காகமுதல்வர் கருணாநிதி காய்களை நகர்த்தி வரும் நிலையில், அடுத்தடுத்து ராசாவின் பதவிக்கு வெடி வைக்கும் விதமாகவே கடித நகல், டேப் விவகாரம் என்று பரவுவது எப்படி என்பதுதான் இப்போது டெல்லியில் மிக சுவாரஸ்யமான விவாதம். அந்தக் கட்சிக்குள்ளேயே இருக்கும் ஒரு சிலரை நோக்கி கைகள் நீள்வதையும் காண முடிகிறது.

''தொலைதொடர்பு தொடர்பான ரகசிய புலனாய்வு ஆவணங்கள் பகிரங்கமாக வெளியானது மத்திய அரசுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்!'' என்று ஒரு தரப்பினர் சொல்லிக் கொண்டிருக்க... ''தொடர்ந்து பிரஷர் கொடுத்து வரும் தி.மு.க-வை பின்வாங்கச் செய்வதற்கு இந்த விவகாரமெல்லாம் உதவும். அந்த வகையில் காங்கிரஸ் அரசுக்கு இதில் நிம்மதிதான்!'' என்று சொல்லி கண் சிமிட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

நமக்கும் அந்த ஆவண நகல்களில் சில கிடைத்தன. 'டாப் சீக்ரெட்', 'கான்ஃபிடன்ஷியல்' என குறியிடப்பட்ட அவையெல்லாம் யாரோ ஒரு உயர் அதிகாரிக்கு விசாரணை டீம் கொடுத்த தகவல் சுருக்கம் போலவே இருக்கிறது. அவை ஒரிஜினலான ஆவணங்கள்தானா... அதை வைத்து சி.பி.ஐ. தனதுவிசாரணையை மேற்கொண்டு எப்படி கொண்டு செல்லும் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க... 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தோடு இன்னும் ஏராளமான பல பகீர் விவரங்களையும் அதில் காண முடிகிறது.

நீரா ராடியாவை மையம் கொண்டு மொரீஷியஸ், ஆப்பிரிக்கா, கினியா என்று எல்லை தாண்டி நடந்திருக்கும் பரிவர்த்தனைகள் குறித்து ஒட்டுக் கேட்டதாக அந்த ஆவணங்கள் கூறுகின்றன.

''இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற, மரியாதைக்குரிய ஒரு வடநாட்டுத் தொழிலதிபர், எக்காரணம் கொண்டும் தொலைதொடர்புத் துறைக்கு தயாநிதி மாறன் மீண்டும் அமைச்சராகிவிடக் கூடாது என்று நீரா ராடியாவிடம் கேட்டுக் கொள்ளும் உரையாடல் கிடைத்துள்ளது. அதையும் மீறி தயாநிதி மாறன் வந்துவிட்டால், தொலைதொடர்புத் துறையில் தான் செய்து வரும் பிசினஸ்களிலிருந்து வெளியேறிவிடப் போவதாகவும் தொழிலதிபர், நீரா ராடியாவிடம் கூறுகிறார்.

ஆ.ராசாவுக்கு குறிப்பிட்ட பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் பெருந்தலைகளை பிரெயின்வாஷ் செய்யும் வேலையில் இந்தியாவின் பிரபல சேனல் முகங்கள் இருவர் செயல்பட்டனர். நீரா ராடியா மற்றும் அரசியல் பெண் வி.ஐ.பி. ஒருவருக்காகவே இவர்கள் இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளை நடத்தினர். தமிழகத்தைச் சேர்ந்த பவர்ஃபுல் பெண்மணி ஒருவருக்கு நீரா ராடியா மிக நெருக்கமானவர் போலவே போன் பேச்சுகளில் தொனிக்கிறது!'' என்று கூறும் இந்த ஆவணங்கள், 'ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் சர்ச்சைப் புயலில் சிக்கிய ஸ்வான் டெலிகாமையும் இதில் தொடர்புபடுத்துகின்றன.

''ஜார்கண்ட் மாநிலத்தில் டாடாவின் சுரங்க உரிமத்தை நீட்டிக்க நீரா ராடியா அப்போதைய ஜார்கண்ட் முதல்வர் மதுகோடாவுடன் பேசிய உரையாடலில் மதுகோடா 180 கோடி ரூபாய் கேட்டது தெரிய வந்துள்ளது. அதே உரிமத்தை ஜார்கண்ட் ஆளுநரிடம் நீட்டித்து வாங்கியுள்ளார் இந்த 'சேவைக்காக' ஒரு கோடி ரூபாய் நீராவுக்கு வழங்கப்பட்டுள்ளது!'' என்று வேறு மாநில விவகாரங்களையும் இந்த 'டாப் சீக்ரெட்' ஆவண நகல்களில் காண முடிகிறது. மதுகோடா தொடர்பான ரெய்டுகளுக்கு இந்த 'டாப் சீக்ரெட்' ஆவணமும் ஒரு காரணமா என்பது தெரியவில்லை!

தொலைதொடர்புத் துறையின் 'கிங்'களில் ஒருவரான சுனில் மிட்டல்கூட நீராவின் 'சேவை'யை நாடினார் என்று தொலைபேசி மூலம் ஒட்டுக் கேட்டுச் சொல்கிறது இந்த ஆவணம். இந்த ரேஞ்சில் படிக்கப் படிக்க தலை சுற்ற செய்யும் தகவல்கள் கொண்ட ஆவணங்களில் தொழில் அதிபர்களுக்கும், மிகப் பெரிய அதிகாரிகளும், அரசியலின் உச்ச பதவிகளில் இருப்பவர்களுக்கும் இடையே எத்தனை 'சாலிட்'டான பேரங்களும், புரிந்துகொள்ளல்களும் இருக்க முடியும் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மூன்று புள்ளிகளையும் இணைத்து வைக்கும் வேலையில் நீரா ராடியா போன்ற இன்னும் எத்தனை மெகா 'லாபியிஸ்ட்'கள் தரகு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ என்று யோசிக்கும்போது பயங்கரமாகத் தலை சுற்றுகிறது.

''குறிப்பிட்ட அந்த டேப் உரையாடல்களில் இருப்பது மத்திய அமைச்சர் ஆ.ராசா அல்லது ராஜ்யசபா எம்.பி-யான கனிமொழி ஆகியோரின் குரல்தானா என்பதற்கு என்ன ஆதாரம்? தி.மு.க-வை ஒழித்துக் கட்டுவதற்கு டெல்லியில் நடக்கும் பயங்கரமான சதிவலையின் அங்கம்தான் இதெல்லாம்!'' என்று மறுக்கும் தி.மு.க. தலைவர்கள்,

''அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல்... தலைவரின் குடும்பத்துக்குள் பதவிப் போட்டி ஏற்பட்டதாகச் சொல்லி, அதை வைத்து ஒருத்தர் இன்னொருத்தரைப் பற்றி பேசிக்கொண்டதாக விவகாரத்தை நாடறியப் பரப்பினால், அதை வைத்து குடும்பத்துக்குள் மறுபடி குழப்பம் வரும் என்பதும் எங்கள் எதிரிகளின் திட்டம்!'' என்று கூறுகிறார்கள் இந்த தி.மு.க. தலைகள்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites