''நாங்கள் அப்படியொன்றும் வசதியில்லை!''
ஒரு நாயகன் உருவான கதை |
''நாம தள்ளுவண்டில பொரிகடலை வித்து அன்னாடம் கஞ்சி குடிக்கிற குடும்பம் சார். சின்னாளப்பட்டியைத் தாண்டுனா... திண்டுக்கல்லு, கொடைரோடு, மதுரைன்னு இம்புட்டுதேன் நமக்குத் தெரியும். எங்கே எம்.ஜி.ஆர். படம் போட்டாலும், போய்ப் பார்த்திருவேன். தியேட்டர் வாசல்ல கடலை விக்கிற நான், எம்புள்ளையும் ஒரு சினிமாவுல நடிப்பான்னு கனாக்கூடக் கண்டதில்ல. இந்தா... நடிச்சுப்புட்டான். எந்த டி.வி-யைப் போட்டாலும் இவன் மூஞ்சிதான் மாத்தி மாத்தி வருது. வீட்லயே உக்கார்ந்து பார்த்துக்கிட்டே இருக்கணும்னுதான் ஆசை. ஆனா, பொரி வித்தாத்தானே நமக்குப் பொழப்பு!''
சின்னாளப்பட்டி லட்சுமி தியேட்டர் வாசலில் பொரிகடலைக்குப் பொட்டலம் போட்டபடி பேசுகிறார் சுப்பிரமணி. 'அங்காடித் தெரு' ஹீரோ மகேஷின் அப்பா
பின்புறச் சுவரில் திண்டுக்கல் தியேட்டரில் ஓடும் 'அங்காடித் தெரு' படத்துக்கான போஸ்டர்கள். ''இன்னும் நம்ம தியேட்டருக்கு அங்காடித் தெரு வரலை. வரட்டும்... எத்தனை படங்களுக்குக் கடலை வித்திருக்கேன். என் மகன் படத்துக்குச் சந்தோஷமா விப்பேன்ல'' என்கிறார் சுப்பிரமணி பெருமிதமாக.
அருகிலேயே புன்னகைத்து நிற்கும் மகேஷின் நண்பர்கள் தங்களின் செல்போன் கேமராவால் புகைப்படம் எடுக்க, 'என்னடா மாப்ள இது' எனக் கூச்சத்தில் நெளிகிறார் ஹீரோ. மகேஷின் உண்மைப் பெயர் மோகன். அம்மாபெயரான மகேஷ்வரியைச் சுருக்கி சினிமாவுக்காக மகேஷ் ஆக்கியது வசந்தபாலன்.''ஊர்ல இருந்தா மோகனும் யாவாரத்துக்கு என்கூட வருவான். இப்போ சினிமாக்காரன் ஆயிட்டான். இனிமே அவனே வர்றேன்னாலும் முடியாது இல்ல. இப்பமே, 'உன் மகன் ஹீரோவாயிட்டான். நீ எதுக்கு இன்னமும் பொரி விக்கிறே?'ன்னு கேக்குறாங்க''- சிரிக்கிற சுப்பிரமணி தன் கையில் எம்.ஜி.ஆர். பெயரைப் பச்சை குத்தி இருக்கிறார்.
சின்னச் சிரிப்புடன் தொடர்கிறார் மகேஷ், ''பத்தாங்கிளாஸ் வரைக்கும் சின்னாளப்பட்டில படிச்சேன். அதுக்குப் பிறகு மயிலாடுதுறையில ஹாஸ்டல். நான் வாலிபால் பிளேயர். அதனால விளையாடுறதுக்காக வட மாநிலங்களுக்குக் கூட்டிட்டுப் போவாங்க. மத்தபடி நான் வேற எந்த வெளியூரும் போனது இல்லை. ஆனா, ஏற்கெனவே ஒரு படத்துல நடிச்சிருக்கேன்.''
''என்ன படம்?'' என்கிறேன் ஆச்சர்யமாக.
''அதான், 'ஆட்டோகிராஃப்' படத்துல ஸ்கூல் போர்ஷன் ஒண்ணு வரும்ல... அது சின்னாளப்பட்டி தேவாங்கர் ஸ்கூல்லதான் எடுத்தாங்க. நான் அப்போ எட்டாங்கிளாஸ். படத்துல ஸ்கூல் படிச்சு முடியும்போது எல்லாரும் ஒண்ணா நின்னு குரூப் போட்டோ எடுப்பாங்கல்ல... அந்த போட்டோவுல நானும் இருக்கேன்''- சிரிக்கிறார் கூச்சமாக.
''இந்தப் படம் வர்றதுக்கு முன்னாடி சின்னாளப்பட்டில நம்மளை யாருக்கும் தெரியாதுண்ணே. பொரிகடலை விக்கிறவரோட பையனை எத்தனை பேருக்குத் தெரியப்போகுது? ஆனா, இப்போ தெரிஞ்சவங்க, தெரியாதவங்க எல்லாரும் என்னைப் பார்த்துச் சிரிக்கிறாங்க. படம் ரிலீஸானதும் எப்பவும்போல நான் சைக்கிள்ல வந்துட்டு இருந்தேன். 'என்ன சைக்கிள்ல?'ன்னாங்க. 'சரி'ன்னு ஒரு பைக்கைக் கடன் வாங்கி ஓட்டிட்டுப் போனா, 'என்ன பைக்குல?'ங்குறாங்க. அன்னிக்கு ஒரு டி.வி-ல பேட்டி எடுத்தாங்க. வரிசையா ரெண்டு பொண்ணுங்க போன் பண்ணி 'ஐ லவ் யூ'ங்குறாங்க. எனக்குப் படபடன்னு பதறிப்போச்சு. இத்தனை வருஷத்துல, 'நீ ஸ்மார்ட்டா இருக்கே, நல்லா இருக்கே'ன்னு ஒருத்திகூடச் சொன்னது இல்ல. இப்ப யாருன்னே தெரியாத புள்ளைக போன் பண்ணி, ஐ லவ் யூ சொல்லுதுங்க. 'உனக்கு வாழ்வுடா மாப்ள'னு ஓட்டுறாங்க பசங்க. எனக்குத்தான் பயமாக்கெடக்கு'' என்கிற மகேஷ், ப்ளஸ் டூ பரீட்சை எழுதுவதற்கு முன்பே நடிக்க வந்துவிட்டார்.
அம்மா மகேஷ்வரிக்கு வீட்டில் கட்டில், நாற்காலிகள் பின்னுவதுதான் வேலை. மகனைப்பற்றிப் பேச ஆரம்பித்தாலே மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் முகத்தில். ''டி.வி-ல இவன் பாட்டு வந்துட்டா, போட்டது போட்ட மாதிரி வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிருவேன். 'என்னமா நடிக்கிறான் இந்த மோகன் பய'ன்னு சுத்திஉள்ளவங்க ஆயிரம் தடவை சொன்னாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம்போல இருக்கு. ஆனா, இதுவரைக்கும் படத்துல இவனை அடிக்கிற இடத்தை மட்டும் பார்க்கலை. தியேட்டர்ல பார்த்தப்பவும், டி.வி-ல போடும்போதும் கண்ணை மூடிக்குவேன். அடிக்கிறதையும் அழுவுறதையும் பார்த்தா மனசு தாங்காது. ஒரே ஒரு ஆம்பளைப்புள்ளையைப் பெத்துவெச்சிருக்கோம்!'' என்கிற மகேஷ்வரி, சிவாஜி ரசிகை. மகேஷின் தங்கை சுகன்யா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். தமிழின் பெஞ்ச்மார்க் சினிமா ஒன்றில் நடித்த ஹீரோவின் வீடு, தமிழ்நாட்டின் எளிமையான வர்க்கத்தின் எல்லா அடையாளங்களுடனும் இருக்கிறது.
முதலாளிகளின் உழைப்புச் சுரண்டலை வெளிக்கொண்டு வந்தது மட்டுமல்ல... ஓர் உதிரித் தொழிலாளியின் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்றிவைத்திருப்பதும் 'அங்காடித் தெரு'வின் வெற்றியே!. நன்றி விகடன்
2 comments:
Nice wrk. expecting more from the team...
fantastic performance by mahesh and anjali. i wish and expect to give a such a movie in feature and they both are nice pair
Post a Comment