விளம்பரம் ஒரு பார்வை -உலகின் முதல் விளம்பரம் முதல் -பக்கம் 1

15 May 2010 ·


ப்போது, எப்படி ஆரம்பித்தன விளம்பரங்கள்?

'மனிதன் தனக்குத் தேவையானதை மட்டும் உற்பத்தி செய்தபோது விளம் பரம் தேவைப்படவில்லை. தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்துதபோதுதான் விளம்பரம் பிறந்தது' என்கின்றனர் ஆய்வாளர்கள். முதன்முதலில் பாபிரஸ் இலைகள் மூலம் சுவரில் எழுதி விற்ப னையை மக்களிடம் விளம்பரப்படுத் தியவர்கள் எகிப்தியர் கள். பின்னர், வீடுகளுக்கு முன்சென்று கூவுவது, முச்சந்தியில் நின்று கத்துவது என்று விளம்பரம் படிப்படியாக வளர்ந்தது.

அப்போது படித்தவர் களின் எண்ணிக்கை சொற்பமாக இருந்ததால் வியாபாரிகள் தங்கள் பொருட்களை ஓவிய மாக வரைந்து விளம் பரங்கள் செய்தார்கள். அச்சு இயந்திரங்கள் தோன்றியபோது, விளம்பரங்கள் வேறு வடிவம் பெற்றன. 17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் பத்திரிகைகளில் முதல் முறையாக மருந்து, மாத்திரைகள் பற்றிய விளம்பரங்கள் இடம்பிடித்தன.

ஜூன் 1836-ல் பிரெஞ்சுப் பத்திரிகையான La Presse முதன் முதலாக விளம்பரங்களுக்குக் கட்டணம் வசூலித்தது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரும்பாலான வீடுகளில் பெண்கள்தான் முடிவு எடுத்தார்கள். எனவே, பெண்களைக் குறி வைத்தே வீட்டு உபயோகப் பொருட்களை விளம்பரம் செய்தார்கள். 'அதையும் பெண் களைவைத்தே விளம்பரம் செய்யலாமே?' என்று நினைத்தபோதுதான் 'விளம்பர மாடல்கள்' என்றொரு புதிய இனம் உருவானது. ஒரு குளியல் சோப் விளம்பரம்தான் பெண் மாடலைவைத்து எடுக்கப்பட்ட முதல் விளம்பரம். 'நீங்கள் தொட விரும்பும் சருமம்'(The skin you love to touch) என்பதுதான் விளம்பர உலகில் எழுதப்பட்ட முதல் ஸ்லோகன்.

1920-களில் ரேடியோ புழக்கத்துக்கு வந்தவுடன் விளம்பர உலகம் விரிவு அடைந்தது. 1950-களில் டுமான்ட் டெலி விஷன் நெட்வொர்க் என்ற தொலைக் காட்சி நிலையம் முதல் முறையாக விளம் பரங்களை ஒளிபரப்பியது. 1960-களில் என்ன செய்தியோ, அதை மட்டுமே விளம்பரம் என்று சொல்லி வந்தனர். அதற்கடுத்துதான் 'கிரியேட்டிவிட்டி' முக்கிய அம்சம் ஆனது. இன்று எல்லாமே விளம்பரமயம். தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளத் தெரிந்தவர்கள் மட்டுமே விலைபோகிறார்கள். இல்லை என்றால், செல்லாக் காசுதான்!

------------------------------------------------------------------


புள்ளி ராஜாவிற்கு எய்ட்ஸ் வருமா?

வியாபாரத்தைப் பெருக்குவதற்கு மட்டும் அல்ல... மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் விளம்பரங்கள் தேவை. சமூகத்துக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்திய சில விளம்பரங்கள் இவை.1980-களில் 'Just Say No' என்கிற வார்த்தை அமெரிக்காவில் பட்டிதொட்டி எல்லாம் ஒட்டப்பட்டது. அப்போது நிறைய இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருந்தார்கள். 'சக நண்பர்கள் போதைப் பழக்கத்தை அறிமுகப்படுத்தும்போது இந்த மந்திரச் சொல்லை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்' என்று விளம்பரப் படுத்தியதில் பலர் பாதை மாறாமல் தப்பித்தார் கள்.

எய்ட்ஸ் எமனாகப் பரவிய நேரத்தில் மும்பையில் 'பல்பீர் பாஷாவுக்கு எய்ட்ஸ் வருமா?' என்ற விளம் பரம் கலக்கி எடுத்தது. அதுவே, தமிழ்நாட்டில் புள்ளிராஜாவாக அவதாரம் எடுத்தது. அதற்கடுத்துப் பல மாநிலங்களில் பல்பீர் பாஷா பல பெயர் தரித்து விழிப்பு உணர்வு கொடுத்தார்.

இப்போது உலகத்துக்கே ஒட்டுமொத்தமான பிரச்னை... புவி வெப்பமயமாதல். 'மரங்களை வெட்டாதீர்கள். இயற்கையைப் பாதுகாப்போம்' என்று பல நாடுகளும் பல வழிகளில் விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கின்றன. 2050 என்கிற கேள்வியோடு உலக உருண்டை இல்லாமல் வெறும் அச்சை மட்டும் காட்டி அச்சத்தை விளம்பரப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்!

------------------------------------------------------------

நோ ஸ்மோக்கிங்!

டவுளைக்கூட விளம் பரப்படுத்த வேண்டிய சூழலில் ஒரு பொருளுக்கு மட்டும் பெரும்பாலான ஊடகங்கள் விளம்பரம் செய்ய மறுத்து வருகின்றன. அது என்ன தெரியுமா? சிகரெட்!

சிகரெட்டின் தீமைகள் தெரிய வருவதற்கு முன்பு விளம்பரம் செய்ய எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அமெரிக்காவின் லோரி லார்ட் என்கிற புகையிலை கம்பெனிதான் 1789-ல் முதல் சிகரெட் விளம்பரத்தை உலகில் பற்றவைத்தது.

உற்பத்தி மற்றும் போக்குவரத்து வசதிகள் அவ்வளவாகப் பெருகாத காலம் என்பதால், எந்த ஒரு சிகரெட் கம்பெனியும் லோக்கல் பகுதியைத் தாண்டி வளரவில்லை. 1870-ம் ஆண்டு சிகரெட் உற்பத்தி செய்யும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஒரு நாளுக்கு நான்கு மில்லியன் சிகரெட்டுகளை உற்பத்தி செய்தது. 1880-களில் அச்சுத் தொழிலில் வண்ணங்களை உபயோகித்து அச்சடிக்கும் அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால், சிகரெட் லேபிள்களில் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், உள்ளூர் பிரபலங்கள் விளம்பர மாடல்களாக இருந்தார்கள். 1950-களில் சிகரெட் கம்பெனிகள் போட்டியைச் சமாளிக்க சிகரெட் லேபிள்கள் மீது கவனம் ஈர்க்கும் வரிகளை எழுதின.

சிகரெட்டினால் புற்றுநோய் அதிகரிப்பதை உணர்ந்துகொண்ட பத்திரிகைகள், சிகரெட் விளம்பரங்களை வெளியிட மறுத்தன. உடனே, புகையிலை கம்பெனிகள் மருத்துவர்கள், டென்டிஸ்ட்டுகள் ஆகி யோரைவைத்து சிகரெட் நல்லது என்கிற தொனியில் விளம்பரங்களைத் தொடர்ந்து வெளியிட்டன. 1964-ல் யு.எஸ்.சர்ஜன் ஜெனரல் லூதர் டெர்ரி என்பவர் 'புகை பிடித்தலும் ஆரோக்கியமும்' என்ற தலைப்பில் ஓர் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார். சிகரெட் குடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் வரும் என்பது அவரின் ஆய்வு முடிவு. அதன் பின்னர்தான் சிகரெட் விளம்பரங்களில் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற்றன

--------------------------------------------------------------------

உங்கள் உதட்டில் ஒரு தூண்டில்!

'ஷாக்வர்டைஸிங்' தெரியுமா? பார்த்த மாத்திரத்தில் அதிர்ச்சியை அளித்து மக்களிடையே பொருட்களை விளம் பரப்படுத்துவதுதான் ஷாக்வர்டைஸிங். மக்களை மிரளவைத்த விளம்பரங்களில் இங்கே சில...

'மைக்ரோசாஃப்ட்' நிறுவனம் வின்டோஸ் ஜ்ஜீ-யை அறிமுகப்படுத்தியபோது, ஓர் ஆண் ஒரு பெண்ணின் உள்ளாடையைக் கழற்ற முயற்சி செய்து, அதில் தோற்பதுபோல விளம்பரம் செய்தது. 'எங்களின் பாஸ்வேர்டு அவ்வளவு பாதுகாப்பானது' என்பது கான்செப்ட். மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் தன் விளம்பரத்தை வாபஸ் வாங்கிக்கொண்டது.

வர்ஜின் மொபைல் நிறுவனம், குடும்பஸ்தர்களைக் குறிவைத்து பொது இடங்களில் துண்டுச் சீட்டை விநியோகித்தது. வாங்கிப் பார்த்தவர்களுக்கு செம ஷாக். சில சீட்டுகளில் ஆணும் பெண்ணும் முத்தம் இட்டார்கள். சில சீட்டுகளில் ஆணும் ஆணும் முத்தமிட்டார்கள். மதத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கவே, உடனடியாக இந்த விளம்பர உத்தியை நிறுத்தியது வர்ஜின் மொபைல்.

இங்கிலாந்தின் சுகாதாரத் துறை, சிகரெட் மிகவும் கொடியது என்பதை உணர்த்த மீன் பிடிக்கும் தூண்டிலில் மனிதனின் உதடு மாட்டிக்கொண்டதைப்போல விளம்பரப்படுத்தியது. குழந்தைகளையும் பலவீனமான இதயம் கொண்டவர்களையும் பயமுறுத்துகிற மாதிரி இருக்கிறது என்று கிளம்பிய எதிர்ப்பால், குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சிகளுக்கு இடையே இதை ஒளிபரப்புவதை நிறுத்திவைத்தார்கள். இன்னொரு பக்கம் புகை பிடிக்கும் மனிதர்களில் ஐந்தில் மூன்று பேர் பயந்து சிகரெட் பிடிப்பதையே நிறுத்தி விட்டார்கள்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற காபி நிறுவனம் 'ஸ்டெல்லா எஸ்பிரஸ்ஸோ காபி'. காபிக் கொட்டைகளாலேயே ஒரு தேளின் உருவத்தை வரைந்து, அது ஓர் இளம் பெண்ணின் மூக்கில் ஏறுவது போல் விளம்பரம் செய்தார்கள். 'இந்த காபியின் மணம் தேள்கடி போல் விறுவிறுவென்ற உணர்வை ஏற்படுத்தும்' என்று அவர்கள் கூறிய விளக்கத்தைக் கேட்டு பலர் 'ச்ச்சீ' என்று சொன்னாலும், விளம்பரம் என்னவோ செம ஹிட் ஆனது.

-----------------------------------------------------------------------

உலக சாதனை விளம்பரம்!

விளம்பரத்தை சினிமா மாதிரி எடுத்தவர்களின் கதை இது! ஒரு பொருளின் அசைவு அல்லது விளை வின் மூலம் மற்றொரு பொருள் இயக்கப்படுவதற்கு டொமினோஸ் எஃபெக்ட் என்று பெயர். சுருக்கமாகச் சொன்னால் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் டெல்லி கணேஷை கமல் கோலிக் குண்டைப் பயன்படுத்திக் கொல்வாரே... அதுதான் டொமினோஸ் எஃபெக்ட். ஹோண்டா நிறுவனம் 2009-ம் ஆண்டு தன்னுடைய 'அக்கார்ட்' காரைச் சில புதிய வசதிகளோடு மறு வடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தியது. அதைப் புதுமையாக விளம்பரப்படுத்த டொமினோஸ் எஃபெக்ட்டை வைத்து இரண்டு நிமிட விளம்பரம் எடுத்தார்கள். மிகச் சிறிய சக்கரத்தின் சுழற்சியில் ஆரம்பிக்கும் விளம்பரம் நட்டு, போல்டு, பிஸ்டன், ஹாரன் என்று ஸ்பேர் பார்ட்ஸ் மூலம் பயணித்து, கார் ஸ்டார்ட் ஆவதில் முடியும்.

606 டேக்குகள் உழைத்து வெற்றிகரமாக இந்த விளம்பரத்தை எடுத்து முடித்தார்கள். இதற்காக ஹோண்டா செலவழித்த தொகை ஆறரை மில்லியன் டாலர்கள். ஒரே அறைக்குள் 50 தனித் தனிச் செயல்களின் முடிவில் அக்கார்ட் கார் நகருமாறு எடுக்கப்பட்டது இந்த விளம்பரம். 'உங்கள் சொகுசான அக்கார்ட் கார் பயணத்துக்குப் பின்னணியில் எங்களின் ஏகப்பட்ட உழைப்பு இருக்கிறது' என்ற அவர்களின் கான்செஃப்ட் மக்களிடையே செம ஹிட்! அயர்லாந்தின் புகழ்பெற்ற பீர் கம்பெனிக்காக, ஃபுல்சிக் என்ற டென்மார்க் விளம்பர இயக்குநர் தயாரித்த விளம்பரம்தான், இதுவரை எடுக்கப்பட்ட விளம்பரங்களிலேயே காஸ்ட்லியானது. இதற்கான செலவுத்தொகை 20 மில்லியன் டாலர்கள். இதுவும் டொமினோஸ் எஃபெக்ட்படி எடுக்கப்பட்ட விளம் பரம்தான். வடக்கு அர்ஜென்டினாவில் இரூயா என்ற கிராமத்தில் கேமராவையே பார்த்திராத ஆயிரம் கிராமவாசிகளை நடிக்கவைத்தார் ஃபுல்சிக். ஆறாயிரம் டொமினோக்கள், 10 ஆயிரம் புத்தகங்கள், 400 டயர்கள், 75 கண்ணாடிகள், 50 ஃபிரிஜ்கள், 45பீரோக்கள், ஆறு கார்களைவைத்து இந்த விளம் பரத்தை எடுத்தார்கள். இவை தவிர, பூசணிக்காய், பெயின்ட் டப்பா, சூட்கேஸ், எண்ணெய் பேரல் என்று பயன்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியல் இன்னும் நீளம். 'நல்ல விஷயங்கள், அவற்றுக்காகக் காத்திருப்பவர்களுக்கே கிடைக்கிறது' என்பதுதான் கான்செஃப்ட். செலவழித்த தொகையாலும், பயன் படுத்திய பொருட்களாலும் உலக சாதனையாகி விட்டது இந்த விளம்பரம்!

------------------------------------------------------------------

இரண்டு இஞ்ச் வித்தியாசம்!

லக அளவில் விளம்பர மாடல்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

உலகிலேயே அதிகச் சம்பளம் வாங்கும் மாடல், பிரேசிலைச் சேர்ந்த கிஸேல். இவரின் வருட வருமானம் மூன்றரைக் கோடி டாலர்கள். 15 கோடி டாலர் சொத்து வைத்திருக்கும் 26 வயது கிஸேல், உலகப் பணக்காரர்களின் வரிசையில் 16-வது இடத்தில் இருக் கிறார். 10 வருடங்களுக்கு முன் ஹோட்டலில் டிபன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார் கிஸேல். அவரைப் பார்த்ததும் பரசவமான மாடலிங் ஏஜென்ஸி அப்படியே தூக்கி, கேமரா முன் நிறுத்தியது. அப்புறம் எல்லாமே ஏறுமுகம்தான். பணக்காரி ஆனதும் கிஸேல் செய்த முதல் வேலை... ஹோட்டல் ஒன்றை விலைக்கு வாங்கியதுதான்.

வருடத்துக்கு 60 லட்சம் டாலர் சம்பாதிக்கும் ஆட்ரியனா லீமாவும் பிரேசில் தேவதைதான். மாடலிங் தோழி ஒருவருக்கு கம்பெனி கொடுக்க மாடலிங் ஏஜென்சிக்குச் சென்றவர், மாடலாகத் திரும்பி வந்ததற்கு அதிர்ஷ்டம் என்று பெயர். இப்போது ஆட்ரியனா, பிரேசிலின் சூப்பர் மாடல்.

இங்கிலாந்தின் கேட் மாசுக்கு வயது மட்டும் அதிகம். 37 வயது ஆகியும் 'உலகின் செக்ஸியான பெண்கள்' லிஸ்ட்டில் இன்னும் இருக்கிறார். விளையாட்டுப்போட்டிக்காக வெளிநாடு சென்றவரை ஏர்போர்ட்டில் பிடித்து மாடல் ஆக்கியது ஸ்டார்ம் என்கிற மாடல் ஏஜென்சி. டிஸ்கொதேவில் சண்டை, கொகைன் பயன்படுத்தியது என அடிக்கடி தன்னையும் விளம்பரப்படுத்திக்கொள்வார்.

வெளிநாடுகளைப் பொறுத்தவரை மாடலிங் வேறு... சினிமா வேறு. மாடல்கள் பெரும்பாலும் சினிமாவைப் பார்ப்பதோடு சரி. இந்தியாவில் இரண்டுக்கும் இரண்டு இஞ்ச் வித்தியாசம்கூட இருக்காது. இங்கே மாடல்களைவிட நடிகைகள்தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள். டாப் மாடல் என்கிற கிரீடம் போன வருடம் வரை ஐஸ்வர்யா ராயிடம் இருந்தது. இந்த வருடம் அதை அணிந்திருப்பவர் கேத்ரீனா கைஃப். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் தீபிகா படுகோன். இருவரும் விளம்பரங்களின் மூலம் மட்டும் வருடத்துக்கு 10 கோடி வரை பார்க்கிறார்கள்!

------------------------------------------------------------------------

57 ஆயிரம் புகைப்படங்கள்... 3 அணா!

சில விளம்பரத் துளிகள் இங்கே...

சல்மான் ருஷ்டியைத் திருமணம் செய்து, பின்பு விவாகரத்து செய்து பரபரப்புக் கிளப்பிய பத்ம லட்சுமி ஐயரை நினைவிருக்கிறதா? சென்னை பூர்வீகப் பெண்ணான பத்மா, ஐந்து மாதக் கர்ப்ப மாக இருக்கும்போது, அமெரிக்கப் பத்திரிகை ஒன்றுக்கு மேடிட்ட வயிற்றுடன் நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்புக் கிளப்பினார். குழந்தை பிறந்ததும் 'அப்பா பெயரை அப்புறம் அறிவிப்பேன்' என்று பத்மா கொடுத்த ஸ்டேட்மென்ட்... அடுத்த கட்ட அட்வர்டைஸ்மென்ட்!

'57 ஆயிரம் புகைப்படங்கள்... இரண்டு மைல் நீளத்துக்கு இருக்கும். பார்க்கக் கட்டணம் 3 அணா' 1913-ம் ஆண்டில் வெளியான இந்தியாவின் முதல் படமான 'ராஜா ஹரிச்சந்திரா'-வுக்கு தாதா சாகேப் பால்கே வெளியிட்ட விளம்பரம்தான் இது!

'நாடோடி பேசத் துவங்கிவிட்டான்' - ஊமைப் படங்களில் இருந்து பேசும் படங்களுக்குமாறிய போது சார்லி சாப்ளின் வெளியிட்ட விளம்பரம் இது.

தமிழ் சினிமாவின் வித்தியாசமான விளம்பர உத்தியை 'எஜமான்' படத்துக்காக அறிமுகப்படுத் தியது ஏவி.எம். படத்துக்குச் சரியான ஓப்பனிங் கிடைக்காத நிலையில், படம் பார்த்த ஒரு பெண் மணி 'எனக்கு வானவராயர் மாதிரி ஒரு கணவன் கிடைக்கலையே' என எழுதிய கடிதம் ஏவி.எம்-முக்கு வர, அதையே விளம்பரமாக்கிப் படத்தை ஹிட் ஆக்கினார்கள்!

இந்தியாவில் மிகப் பெரிய வெற்றி பெற்ற விளம்பர வாசகம் 'ஒன்லி விமல்'. அது வரை அயல்நாட்டு பாலியஸ்டர் ரகங்களே உயர்வானதாக இருக்க, உள்நாட்டுத் தயாரிப்பில் ஓர் உயர்ரக பாலியஸ்டர் துணியை உருவாக்கிய திருபாய் அம்பானியின் விளம்பர வாசகம் அது. இதனால் விமல் துணி பெரிய வெற்றியுடன் விற்றது. (இதை தன் 'குரு' படத்தில் 'ஒன்லி குரு' என்று மாற்றியிருப்பார் மணிரத்னம்).

ஒவ்வொரு ஜேம்ஸ்பாண்ட் படம் ரிலீஸ் ஆகும்போதும் ஜேம்ஸ் பாண்டுக்கு என்றே ஒரு காரை அறிமுகப்படுத்தும் 'ஆஸ்டன் மார்டின்' கார் நிறுவனம். அதன் பிறகுதான் அது சந்தைக்கே வரும். 'புது ஜேம்ஸ் பாண்ட் யார்?' என்ற பரபரப்புக்கு இணையானது இந்த கார் பற்றிய எதிர்பார்ப்பு!

----------------------------------------------------------------------------

நடு ரோட்டில் பணம்!

சில பச்சக் விளம்பங்கள்...

ஹெய்ன்கென் என்ற குளிர்பானத்துக்கு நெதர்லாந்தில் செய்யப்பட்ட விளம்பரம் இது. சற்று உற்றுப் பார்த்தால் தெரியும். ஒரு கை அப்படியே அந்த குளிர்பான பாட்டிலை அள்ளி எடுக்க முயலும்.

லண்டனில் 'வெஸ்டிபியூல் பஸ்' எனப்படும் பேருந்துகளில் டயர் பகுதிக்கு ரெண்டு பக்கமும் கேமராபோல வரைந்து டயரை லென்ஸாக்கி... செம கற்பனைதான்

அமெரிக்காவில் ஃபோல்ஜர்ஸ் பிராண்ட் காபி மிகப் பிரபலம். அந்த நாட்டில் பூமிக்கு அடியில் நீராவி விநியோகம் நடக்கும். அதில் சில இடங்களில் பாதாள சாக்கடை மூடி வழியாக நீராவி கசிந்துகொண்டு இருந்தது. உடனே, அதைச்சுற்றி காபி கப்பில் இருந்து ஆவி வருவதுபோல வரைந்து, அதைத் தங்கள் விளம் பரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டது.

ஜெர்மனியில் பிரபல கண்ணாடித் தயாரிப்பு நிறுவனம், தங்கள் கண்ணாடி பலமானது என்று காட்ட, நடுவீதியில் கண்ணாடிகளுக்கு இடையே பணக் கட்டுகளை அடுக்கி வைத்துவிட்டது. எந்த செக்யூரிட்டியும் கிடையாது. இரவில் புகுந்த திருடர்கள் எவ்வளவோ முயன்றும் கண்ணாடியைத் தாண்டி அவர்களால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதை ரகசிய கேமராவில் பதிவுசெய்து, டி.வி-யில் வெளியிட்டு ஏகப்பட்ட பப்ளிசிட்டி செய்தது அந்த நிறுவனம்.

vikatan


0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites