பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் சிலபல செயல்களைத் தினமும் செய்ய வேண்டி இருக்கிறது. தேர்வுகளுக்குப் படிப்பது, அலுவலகப் பணிகளை முடிப்பது, வீட்டுப் பரணை ஒழிப்பது போன்ற வழக்கமான வேலைகளாக இருந்தாலும் சரி, காதலிக்குக் கடிதம் எழுதுவது, பால்ய கால நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவது, மனைவியின் கால்களை அமுக்கிவிடுவது போன்ற 'ஸ்பெஷல் அசைன்மென்ட்'களாக இருந்தாலும் அவற்றை ஆரம்பிக்க மலையளவு தயக்கம் நம்மைத் தடுக்கும். அந்த மாதிரியான சூழ்நிலைகளில் 'நாலு நிமிஷ வேஷம்' கொள்கையை அமல்படுத்திப் பாருங்கள். அதாவது, தயக்கம் தடுத்துவைத்திருக்கும் எந்த ஒரு செயலையும் நாலே நாலு நிமிடங்கள் மட்டும் செய்யலாம் என்றுமுயன்றுபாருங்கள். நாலு நிமிடங்களுக்குப் பின் அதைத் தொடர்ந்து செய்யப் பிடிக்காவிட்டால், விட்டுவிடலாம் என்று தாஜா செய்து உங்கள் மனதை அதற்குத் தயார்ப்படுத்துங்கள். பெரும்பாலானவர்கள் ஒரு செயலை நாலு நிமிடங்கள் செய்யத் தொடங்கிவிட்டால், அதன் பிறகு அதை நிறுத்துவது இல்லையாம். ஒரே ஒரு முறை தள்ளிவிட்டால், அந்த விசையைப் பற்றிக்கொண்டே ஓடிக்கொண்டு இருக்கும் பெண்டுலம்போல. முதல் நாலு நிமிடங்களைக் கடத்திவிட்டால், ஆறு, ஏழு, எட்டாவது நிமிடங்கள் கடப்பதே தெரியாமல் கடந்துவிடும்.
பி.கு: ஒரு நிமிடம் கூடுதலாகத் தாங்குபவர்களைத்தான் ஹீரோ/ஹீரோயின் என்பார்கள்!
இதுபோல 60 க்யூட் டிப்ஸ் தருகிறார் ஜெஃப் டேவிட்ஸன். சின்னச் சோம்பல்கள் காரணமாக நாம் உதாசீனப்படுத்தும் சில சம்பவங்கள்தான் பெரிய பெரிய வருத்தங்களை பின்னர் ஏற்படுத்தும். அந்த சின்னச் சோம்பல்களை எதிர் கொண்டு வெற்றிபெறும் தந்திரங்கள்தான் 'The 60 Second Self Starter' புத்தகம் முழுக்க. அவற்றில் இருந்து சில தந்திரங்கள் மட்டும்...
விமானந்தாங்கி கப்பல்களின் மேல்தளத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதிவேக ஜெட் விமானங்கள் ஒலி வேகத்தில் வந்து தளம் தொட்டு சொற்ப தூரத்தில் மொத்த வேகமும் இழந்து கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். எத்தனைதான் பயிற்சி பெற்ற, அனுபவம் நிரம்பிய பைலட் கையாண்டாலும், அத்தனை வேகத்தில் கப்பல் மீது விமானம் இறங்கும்போது ஓடுதளத்தில் இருக்கும் சின்னக் காகிதச் சுருள் அல்லது ஆயில் கறைகூட அந்த விமானத்தை நிலைகுலையச் செய்துவிடலாம். இதனாலேயே கப்பலின் கேப்டனாக இருந்தாலும், சுற்றுப்புறத்தை ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறையும் ஒவ்வொரு விமானம் தளம் இறங்குவதற்கும் முன்னரும் சுத்தப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இது விமானந்தாங்கி கப்பல்களில் கடைப்பிடிக்கப்படும் கட்டாய விதி.கிட்டத்தட்ட நமது மேஜையும் அதேபோன்ற ஒரு விமானந்தாங்கி தளம்தான். நமது தினசரி அலுவல்களின் தீவிரத்தை, வேகத்தை, அதற்கு நாம் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை நமது மேஜையும் தீர்மானிக்கும். முந்தைய நாள் குப்பைகள், கடந்த மாத நினைவூட்டல் கடிதங்கள், நினைவில் நிற்காத குறிப்புக் காகிதங்கள் - ஃபைல்கள் போன்றவை உங்கள் மேஜையை அடைத்துக்கொண்டு இருந்தால், அன்றைய தினம் நீங்கள் கிளப்ப வேண்டிய ஜெட் விமானத்தை அந்தக் குப்பைக் கூளங்களுக்குள் எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? சடசடவென முடிவெடுத்து முடித்த காரியங்களின் குப்பைகளைக் கடாசிவிடுங்கள். முடிக்க வேண்டிய காரியங்களின் குறிப்புகள் மட்டுமே உங்கள் முன் இருந்தால், மலைஅளவு நிம்மதியை உணர்வீர்கள். மலையளவு குப்பை குவிந்துகிடந்தால், உலகளவு அழுத்தத்தை உணர்வீர்கள். உங்கள் ஜெட் விமானம் சீறிப் பாய வாழ்த்துக்கள்!
பி.கு: நாம் பழகும் சில பழக்கங்கள்தான், பிறகு நம்மை வடிவமைக்கின்றன!
சின்ன வயதில் பாட்டிகள் நமக்கு புவ்வா ஊட்ட, குளிக்கவைக்க நம்மை எப்படியெல்லாம் தாஜா செய்திருப்பார்கள். 'நீ இப்போ இந்த கீரைச் சாதத்தைச் சாப்பிட்டாதான், உனக்கு கடலை மிட்டாய் வாங்கிக் கொடுப்பேன்', 'ரெண்டே ரெண்டு மாத்திரை. அவ்வளவுதான்... உனக்கு சிவப்பு கலர் பலூன் வாங்கித் தாரேன்', 'மாவு மில்லுக்குப் போயி கோதுமையை அரைச்சுட்டு வந்தா, ஒரு மணி நேரம் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டிக்கோ' - இப்படி அப்படி தாஜா செய்து தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் சாதித்துக்கொள்வது பாட்டிகள் பழக்கம். அந்தப் பாட்டி பழக்கத்தை இப்போது நாம் செயல்படுத்தினால் என்ன?
அதாவது, நமக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலைச் செய்து முடித்ததும், ரொம்பவே பிடித்தமான ஒரு செயலைச் செய்துகொள்ளலாம் என்று திட்டமிட்டுச் செயல்படுவது. உதாரணமாக, செமஸ்டர் தேர்வுகளுக்குப் படித்து முடித்ததும் டி.வி.டி-யில் ஜாக்கிசான் படம் பார்க்கலாம், அசைன்மென்ட் எழுதி முடித்ததும் காதலன்/காதலிக்கு எஸ்.எம்.எஸ்ஸலாம், இரவுக்குள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டால், நைட் ஷோ சினிமாவுக்குச் செல்லலாம், இந்த மாத டார்கெட்டை முதல் 25 நாட்களிலேயே எட்டிவிட்டால், கொடைக்கானலுக்கோ, ஊட்டிக்கோ ஒரு ட்ரிப் அடிக்கலாம் என அவரவருக்குப் பிடித்த பின்விளைவுகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அந்தப் பிடித்த இரண்டாம் பாதியை எட்டுவதற்காக, முனைந்து முன்பாதியை முடித்துவிடுவீர்கள். ஆனால், விதிக்கப்பட்ட செயலைச் செய்து முடித்த பிறகுதான், விருப்பப்பட்ட செயலை முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
பி.கு: எந்தக் கடின வேலையும், என்றோ ஒருநாள் செய்ய மறுத்த சுலப வேலைதான்!
எந்த ஒரு காரியத்துக்கும் டெட்லைன் விதித்துச் செயல்படுங்கள். காலையில் குளிக்கச் செல்வது, தினசரி அரட்டை நேரம், ஷாப்பிங் மணித் துளிகள், புராஜெக்ட் வேலைகள் என எந்த வேலையானாலும், மனசுக்குள் சின்ன காலக்கெடு நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அந்தக் காலக்கெடுவைத் தாண்டிவிட்டால், நீங்கள் பயப்படும் ஒரு அபாராதம் விதித்துக்கொள்ளுங்கள். 'டெட்லைன்' என்பதற்கு அர்த்தம் என்ன? அந்தக் கோட்டைத் தாண்டிவிட்டால், மரணம் நிச்சயம். அந்த 'மரண பயத்துடன்' எந்த ஒரு காரியத்தையும் செய்து பழகுங்கள். ரஜினி படத்தை முதல் ஷோவில் அமர்ந்து பார்க்க முண்டியடிக்கும் அதே ஆர்வத்தை 'டெட்லைன்' சங்கதிகளிலும் காட்டுங்கள்!
பி.கு: இந்த நொடிதான் என்றுமே வாழ்க்கையில் மிக முக்கியமானது!
-vikatan
0 comments:
Post a Comment