பிரபாகரன் தாயாருக்கு மத்திய அரசு நிபந்தனையுடன் அனுமதி : கருணாநிதி தகவல்

10 May 2010 ·

பிரபாகரன் தாயாருக்கு மத்திய அரசு நிபந்தனையுடன் அனுமதி : கருணாநிதி தகவல்
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு மத்திய அரசு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் இன்று விதி 110ன் கீழ் முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி இரவு, பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மலேசியாவிலிருந்து சென்னைக்குச் சகிச்சைக்காக வந்த போது, அவர்கள் சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாக 17.04.2010 அன்று ஊடகங்களில் செய்தி வெளியானது. அதுபற்றி, சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தில் கடந்த 19.04.2010 ஆம் நாளன்று விவாதிக்கப்பட்டது.

நான் அதற்கு பதில் கூறிய போது, பார்வதி அம்மாள் தமிழகத்துக்கு வருவது பற்றி, அவர்களிடமிருந்தோ அவர்களுக்குத் துணைபுரிய விரும்புபவர்களுடமிருந்தோ தமிழக அரசுக்கு எந்தவிதமான கடிதமோ, தகவலோ வரவே இல்லை என்றும், மத்திய அரசுக்கும் பார்வதி அம்மாளுக்கும் இடையே தான் இந்த பயணம் பற்றிய செய்தித் தொடர்பு இருந்திருக்கிறதே தவிர, தமிழக அரசுக்கு இதில் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்றும், அதன் காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள் என்றும், அப்படித் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் கோலாலம்பூருக்கே திரும்பச் சென்று வைத்திய வசதி பெறுவதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது என்றும், அவர்கள் மீண்டும் தமிழகத்தில்தான் வைத்திய வசதி செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அறிவிப்பார்களேயானால், அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தேன்.

30.04.2010 அன்று மின் அஞ்சல் மூலமாகப் பெறப்பட்டுள்ள, பார்வதி அம்மாளின் பெருவிரல் ரேகை பதித்த கடிதத்தில், தனது சிகிச்சைக்காக கோலாம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வர மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமாக ஏற்பாடு செய்து தரும்படி எனக்கொரு கோரிக்கை வந்தது.

எனவே நான் ஏற்கனவே சட்டமன்றப் பேரவையில் அறிவித்ததிற்கிணங்க, பார்வதி அம்மாள் கேட்டுக் கொண்டபடி, மருத்துவச் சிகிச்சைக்குத் தமிழ்நாட்டுக்கு வந்து மருத்துவமனையிலே சிகிச்சை பெறுவதை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மத்திய அரசு ஆராய்ந்து அனுமதியளிக்கலாம் என்று பரிந்துரைக் கடிதம் மத்திய உள்துறைச் செயலாளருக்கு தமிழக அரசால் 01.05.2010 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விவரங்களைத தமிழகச் சட்டப்பேரவையில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 03.05.2010 அன்று தெரிவித்தார். 3, 4 தேதிகளில் டெல்லியில் நான் பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடமும் இந்த பிரச்னை குறித்து தெரிவித்து அவர்களின் உதவியை நாடினேன்.

அதன் தொடர்ச்சியாக நமது சார்பில் அன்றாடம் மத்திய அரசின் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு விரைவிலே ஒரு நல்ல பதில் கிடைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டோம். மத்திய அரசு 07.05.2010 தேதியிட்டு மலேசியா, கோலாலம்பூரிலே உள்ள இந்தியத் தூதுவருக்கும் நகல் நமக்கும் அனுப்பியுள்ள கடிதம் ஒன்று நேற்றையதினம் வந்துள்ளது.

அந்த கடிதத்தில் மனிதாபிமான அடிப்படையில் பார்வதி அம்மாளை சில நிபந்தனைகளின் பேரில் தமிழகத்துக்கு வர அனுமதிக்கலாம் என்று எழுதியிருக்கிறார்கள். நிபந்தனைகளாக, பார்வதி அம்மாளின் தமிழக வருகை மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இருக்க வேண்டும்; அவர் மருத்துவமனையிலேதான் தங்க வேண்டும் தவிர, வேறெங்கும் தங்கக் கூடாது; அரசு மருத்துவமனையிலே அவர் சிகிச்சை பெற விரும்பினால், தமிழக அரசு அதற்குத் தேவையான உதவிகளையெல்லாம் செய்திட வேண்டும்; அவர் எந்த அரசியல் கட்சியினரோடோ, குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு பங்கு வைத்திருப்பவர்களோடு, எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது; பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று அந்தக் கடித்தில் எழுதப்பட்டுள்ளது.

மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகம் பார்வதி அம்மாளோடு தொடர்பு கொண்டு ஆறு மாத காலத்திற்கு "விசா'' வழங்கலாம் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கு எந்தவிதமான குந்தகமும் இல்லாமல் இந்த ஆணை மத்திய அரசினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக இதுபோன்ற நிகழ்வுகளில் முடிவு எடுப்பதற்கு சில காலம் பிடிக்கும் என்றாலும், பார்வதி அம்மாளின் உடல் நிலை கருதி, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு மேல் மலேசியாவில் உள்ள அந்த பார்வதி அம்மாளின் முடிவுக்கிணங்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இந்த அவைக்கும் நாட்டுக்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்

2 comments:

positivenegativesri@gmail.com said...
May 11, 2010 at 9:18 PM  

பார்வதி அம்மா இவர்களின் நிபந்தனைக்கு அடிபணியாது யாழ்ப்பாணம் திரும்பி விட்டார்.புலி பசித்தாலும் புல்லுத்திங்காது என்பதுக்கு இதுதான் சரியான உதாரணம்.இதெல்லாம் பகரவீ தின்னும் கருணாதிக்கெல்லாம் புரியாது

Aathavan said...
May 12, 2010 at 7:28 AM  

சீமான்-துரோகியின் கருணையால் வாழ்வதைவிட எதிரியால் வீழ்த்தப்பட்டு சாவது மேலானது...என்ற தமிழ் வீரத்திற்கு ஏற்ப இந்தியா வர மறுத்த அன்னையே உன் பாதம் தொட்டு வணங்குகின்றேன்” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் சீமான் kaludaiya pathivukku nanri

un

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil