மதுரை பகீர்- காலனாக வந்த காலாவதி சாப்பாடு!

08 May 2010 ·

மதுரை பகீர்
காலனாக வந்த காலாவதி சாப்பாடு!
சாதம் மிஞ்சினா மாவு... கொழுப்பு மிஞ்சினா குருமா... புரோட்டா மிஞ்சினா கொத்து...

காலாவதி மருந்துப் பொருட்கள் பூகம்பத்தைத் தொடர்ந்து... காலாவதி உணவுப்பொருள் களத்தில் குதித்து, காலனுக்கு அழைப்பு வைத்த கொடுமை நடந்தேறியிருக்கிறது! மதுரை ஹோட் டல் ஒன்றில் பழைய உணவை சாப்பிட்ட ஒரு வாலிபர் வாந்தி பேதி எடுத்து... உயிர் இழந்திருக்கிறார்!

புதுச்சேரியைச் சேர்ந்த இசையமுதன் என்றமாணவர் தீயணைப்புப் பட்டய படிப்பு பயிற்சிக்காக சக மாணவர் களுடன் மதுரை வந்தார். கடந்த 2-ம் தேதி ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள சிவ பார்வதீஸ் என்ற சைவ ஹோட்டலில் அவரும் மற்றும் மூன்று மாணவர்களும் டிஃபன் சாப்பிட்டார்கள். சிறிது நேரத்தில் நான்கு பேருக்கும் வாந்தி, பேதி! அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்களில் இசையமுதன் அன்று மாலையே உயிரிழந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் சாப்பிட்ட உணவுதான் விஷமாக மாறிப்போனது என்று சொல்லி அதிர வைத்துள்ளனர். ஹோட்டலின் உரிமையாளர் சுப்பையா, சப்ளையர் ஜெயசீலன் ஆகியோரை போலீஸார் கைது செய்து இருக்கிறார்கள்இசையமுதனின் இறப்பைத் தொடர்ந்து சுகாதார பிரிவு அதிகாரிகள் மதுரையில் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் ஹோட்டல்களில் ரெய்டு நடத்தி, சுகாதாரமில்லாத வகையில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை அழித்து கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர் (ஏற்கெனவே, வேலூரில் புழு நெளியும் ஹோட்டல் உணவுப் பண்டங்கள் பற்றி விரிவாக நாம் எழுதியிருந்தோம்). மாணவன் இசையமுதனின் மரணத் துக்கு பின்புதான் அதிகாரிகளுக்கு அறிவு வந்ததா? ஹோட்டல்களை ஒட்டுமொத்தமாகக் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இதுபோன்ற கேள்விகள் பல்வேறு தரப்பினரிடையே எழுந்துள்ளது.

ஹோட்டல் தொழிலின் சூட்சுமங்களை அறிந்த சிலர் இதுதொடர்பாக நம்மிடம் பேசியபோது நமக்கு ரத்தம் உறைந்தது. ''ஹோட்டல் தொழில் உபசரிப்புத் துறைமட்டுமல்ல... உடல் ஆரோக்கியத்தோடும் உயிரோடும் நேரடியாகத் தொடர்புடையது. அது மனிதாபிமானத்துடன் நடத்தவேண்டிய ஒரு தொழில். ஆனால், பெரும் பாலான ஹோட்டல்கள் அப்படி நடக்கிறதா? உயர்தர சைவ உணவகங்கள் என்று போர்டு மாட்டிக்கொள்ளும் இவர்கள் இட்லி, தோசை மாவுக்காக நல்ல அரிசியுடன் மூன்றில் இரண்டு பங்கு ரேஷன் அரிசியை கலந்துவிடுகின்றனர். சாதம் மீந்து விட்டால் அதையும் அரிசி மாவுடன் கலந்து அரைத்து விடுகின்றனர். சாதம் விறைப்பாக இருக்க சாதம் வேகும் போதே சுண்ணாம்புக் கற்களை துணியில் கட்டி சாதத்தில் போட்டு விடுகிறார்கள். இதனால், சாதம் பளீர் வெண்மையுடன் இருப்பதோடு விறைப்பாக இருப்பதால் அதிகம் சாப்பிட முடியாது.

ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதற்கென்றே பஜார்களில் மளிகைப் பொருட்கள் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. இவை முழுக்க, முழுக்க கலப்படப் பொருட்களே. பெரும்பாலும் பாலீஷ் செய்யப்பட்ட ஒரு ரூபாய் அரிசியுடன் பொன்னி அரிசி யைக் கலந்து விற்கிறார்கள். உடைபட்ட கழிவுப் பருப்பு மற்றும் கேசரி பருப்பை துவரம் பருப்புடன் கலக் கிறார்கள். மிளகாய் தூள், கொத்தமல்லி தூளுடன் மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக்கிறார்கள். நெய் மற்றும் எண்ணெய் வகைகளுடன் பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலக்கிறார்கள். இவற்றைத்தான் பெரும்பாலான ஹோட்டல்களும் ரோட்டோர கடைகளும் பயன்படுத்துகின்றன.

சைவ ஹோட்டல்களைவிட அசைவ ஹோட்டல்கள் இன்னும் அபாயகரமானவை. பெரும்பாலான அசைவ ஹோட்டல்களில் சமைக் கப்படும் பிரியாணிகளில் பெருமளவு மாட்டுக் கொழுப்பை கலக்கிறார்கள். இவ்வாறு கலக்கும்போது நெய் அல்லது டால்டா பயன்படுத்தத் தேவையில்லை. எண்ணெய்ப் பசையுடன் சுவையும் கூடுதலாக இருக்கும். அதேபோல் கறிக் கடைகளில் மீதமாகும் தோல், வேண்டாத கொழுப்பு உள்ளிட்ட கழிவுப் பொருட்களையும் அசைவ ஹோட் டல்கள் விடுவதில்லை. மொத்தமாக குறைந்த விலைக்கு வாங்கி 'திக்'காக குருமா வைத்து விடுகிறார்கள். மீதி இருக்கும் புரோட்டாக்கள் பல ஹோட்டல்களில் மறுநாள் தக்காளி, வெங்காயம், சால்னா சேர்த்து கொத்து புரோட்டாவாக கமகமக்கிறது...'' என்கிறார்கள்.

மாநகராட்சி சுகாதாரத் துறையும் மாவட்ட வழங்கல் துறையினரும்தான் மேற்கண்ட ஹோட்டல் சுகாதாரக் கேட்டையும் மளிகைப் பொருள் கலப்படங்களையும் கண்காணிக்க வேண்டும். ஆனால், ரோட்டோர கடை யிலிருந்து பெரிய ஹோட்டல்கள் வரை சுகாதார அலுவலர்களுக்கு 'மால்' வெட்டுகின்றன. போதாக்குறைக்கு பிரியாணி பொட்டலங்களும் (இதுவாவது நல்ல சரக்கா?!) அன்பளிப்பாகச் செல்வதால் அதிகாரி களும் இத்தனை நாட்களாக சுகாதாரமற்ற கடைகளை கண்டுகொள்ளவில்லை. மாணவனின் மரணத்தை தொடர்ந்துதான் வேறுவழி இல்லாமல் கடைகளில் அதிகாரிகள் ரெய்டு நடத்தி இருக்கிறார்கள்.

ரயில்வே ஸ்டேஷன் எதிரே பிரியாணி கடை ஒன்றை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அங்கு பிரியாணி கடை நடத்த அனுமதியே பெறவில்லை. மாறாக, பூக்கடை நடத்துவதாக அனுமதி பெற்றிருக்கிறார்கள். இன்னொரு கடையில் மட்டன் பிரியாணி பெயர் போர்டு மாட்டியிருந்த நிலையில் உள்ளே சமைக்கத் தயாராக இருந்த மாட்டு இறைச்சியை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். இன்னொரு டீக்கடையில் மூடைகளில் இருந்த புளியங்கொட்டை தூளையும் முந்திரி தோலையும் கைப்பற்றினார்கள். மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்டுக்குள் அடுப்பு வைத்து எரிக்கவே அனுமதியில்லாத நிலையில் பிளாட்பாரத்திலேயே புரோட்டாவிலிருந்து பிரியாணி வரை சமைக்கப்பட்டு கொண்டிருந்தது. அவற்றை அதிகாரிகள் அப்புறப்படுத்திய அதேவேகத்தில் மீண்டும் கொண்டு வந்துவிட்டார்கள் திருந்தாத ஜென்மங்கள். இவர்களுக்கு அந்தந்த ஏரியாவின் அரசியல் அல்லு சில்லுகளும் பக்க(£) துணை!

மதுரை மாவட்ட கலெக்டர் காமராஜிடம் பேசினோம். ''ஹோட்டல்கள் மட்டுமின்றி இனி தொடர்ந்து பெட்டி கடைகளில் இருந்து சூப்பர் மார்க்கெட்டுகள் வரை சோதனை நடத்தப்படும். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு பகுதிகளில் தினசரி மூன்று வேளையும் உணவை பரிசோதிக்க மாவட்ட சுகாதார அலுவலருக்கும் மாநகராட்சி சுகாதார துறையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது, ஹோட்டல் கடைகளில் கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களும் குடிநீரும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. நாங்கள் நடவடிக்கை எடுக்கும் அதேவேளையில் பொது மக்களும் ரோட்டோரத்தில் சுகாதாரமில்லாத வகையில் இயங்கும் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்...'' என்றார்.

ரெய்டு நடத்திய போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் நம்மிடம், ''சுகாதாரத் துறையினர் மட்டுமில்லாது போலீஸாரே கடைகளில் சோதனை நடத்த முடியும். பஸ் ஸ்டாண்டு சுற்றியுள்ள பகுதிகளில் ரோட்டோர உணவு கடைகளை அப்புறப்படுத்த உத்தர விடப்பட்டுள்ளது. மாணவர் இசையமுதன் இறந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது கெட்டுப்போன திண்பண்டங்களை விற்பனை செய்தது, மரணத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாக இருந்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளோம்...'' என்றார்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil