உங்களுக்குள் ஓர் உருளைக்கிழங்கு! மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. என்னவென்று கணிக்க முடிகிறதா? இந்தக் கதையைப் படியுங்கள்! அந்தக் கிராமம் முழுக்க உருளை விவசாயம்தான். உருளைக் கிழங்குகளை அறுவடை செய்ததும் அவற்றின் அளவு, எடைக்கேற்ப வகை பிரித்து, மூட்டைகளில் கட்டி, லாரி ஏற்றி மார்க்கெட்டுக்கு அனுப்புவார்கள். அந்தத் தரம் பிரித்தலுக்கே கிட்டதட்ட ஒருநாள் செலவாகும். ஆனால், ஒரே ஒரு விவசாயி மட்டும் உருளைகளை மெனக்கெட்டு தரம் பிரித்துக்கொண்டு இருக்காமல் மொத்தமாக லாரியில் அள்ளிப்போட்டு மார்க்கெட்டுக்குக் கொண்டுசெல்வார். மற்றவர்களுக்கு ஒருநாள் முன்னதாகவே சரக்குகளைக் காலி செய்துவிட்டு ஹாயாக காலை ஆட்டிக்கொண்டு அமர்ந்துஇருப்பார். இந்த விதி உருளைக்கிழங்குகளுக்கு மட்டுமல்ல; மனிதர்களுக்கும் பொருந்தும். இக்கட்டான சூழல்களை எதிர்கொண்டு சமாளித்து எழுந்து நிற்பவர்களைத்தான் உலகம் வெற்றியாளர்கள் என்கிறது. சின்னச் சிக்கல்களைக்கூட எதிர்கொள்ளப் பயந்து பின்வாங்கிவிடுபவர்கள் பொடி உருளைகளாகத் தேங்கித் தங்கி விடுவார்கள். நீங்கள் செல்லும் பாதை கடினமாக இருக்கலாம், உங்களுக்குச் சாதகமான சூழல்கள் அமையாமல் போகலாம். காயங்களை மட்டுமே எதிர்கொண்டு இருக்கலாம்... ஆனால், அவை எவையும் நிரந்தரமானவை அல்ல. ஒவ்வொரு நாளையும் கழிப்பதே சவாலாக இருந்தால், எந்தச் சவாலும் ஒருநாளுக்கு மேல் உங்களிடம் தாக்குப்பிடிக்காது. உங்கள் பாதை கடினமாக இருக்கிறதே என்று தயங்கி மயங்காதீர்கள். அந்தப் பாதைதான் உங்களை எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க வார்த்தெடுக்கும் வாசல் என்கிறார் ராபர்ட். 'Tough Times Never Last, But Tough People Do!' புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் வாழ்வில் அனுதினமும் நாம் சமாளிக்கவிருக்கும் சவால் சூழல்களுக்கு நம்மைப் பழக்குகிறது! டேட்டிங் செல்லுங்கள்! படித்து முடித்து வேலை கிடைக்காமல் தவிப்பவரா நீங்கள்? 'நான் அன்எம்ப்ளாய்ட்!' என்ற கழிவிரக்கத்தில் தத்தளிக்கிறீர்களா? நீங்கள் வேலை தேடும் முறைகளில் எங்கோ ஏதோ சிக்கல். சிம்பிளாக ஒரு வழி சொல்லவா? நீங்கள் உங்களுக்கு காதலன்/காதலி தேடினால், என்னென்ன தகுதிகளுடன் தேடுவீர்களோ, அப்படி உங்களுக்கு ஒரு வேலை தேடுங்கள். வேலை நேரம், அலுவலக அமைப்பு, சம்பளம், ஊர், வேலை அலுவலகத்திலா... ஊர் சுற்றிக்கொண்டே இருப்பதா என்று நீங்கள் விரும்பும் சங்கதிகள் எல்லாம் எந்த வேலைகளில் இருக்கிறதோ,அவற்றுக்குக் குறிவையுங்கள். இன்றைய பரந்து விரிந்த உலகத்தில் நீங்கள் என்ன தகுதிகள் எதிர்பார்த்தாலும், அந்தத் தகுதிகளுடன் எங்கோ ஒருமூலையில் ஒரு வேலை காத்துக்கொண்டு இருக்கும் உங்களுக்காக. ஓ.கே காதலன்/காதலியை ஃபிக்ஸ் செய்தாயிற்று. அடுத்து? உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களிடம் உங்கள் காதலைத் தெரிவிக்க எப்படியெல்லாம் ரிகர்சல் செய்வீர்கள். அதுபோல, உங்களுக்குப் பிடித்த வேலைக்கு விண்ணப்பிப்பதில் தொடங்கி இன்டர்வியூவில் கலந்துகொள்வது வரை முன் திட்டமிட்டுச் செயல் படுங்கள். இத்தனை காதலுடன் நீங்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும்போது, உங்களின் உடல்மொழியில் தொனிக்கும் அந்த ஆர்வமே உங்கள் 'காதலை' உங்களிடம் சேர்த்துவிடும். என்ன, உடனே 'டேட்டிங்'கை ஆரம்பிக்க வேண்டியதுதானே! விட்டுக்கொடுக்காதே! அப்பா தன் மகனை அழைத்தார். ''மகனே, வாழ்க்கையில் உனக்கென்று ஒரு கொள்கை வைத்துக்கொள். அந்தக்கொள்கையை அடையும் முயற்சிகளை ஒருநாளும் விட்டுக்கொடுக்காதே. உனக்கு மகாத்மா காந்தி யாரென்று தெரியுமா?'' ''தெரியும்!'' ''கபில்தேவ்?'' ''தெரியும்!'' ''ஏ.ஆர்.ரஹ்மான்?'' ''தெரியும்!'' ''இவர்கள் எல்லாருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்று தெரியுமா?'' ''என்ன?'' ''அவர்கள் எந்தச் சமயத்திலும் தாங்கள்கொண்ட கொள்கையில் இருந்து விலகவில்லை. உனக்கு சந்தான கோபாலகிருஷ்ணனைத் தெரியுமா?'' ''தெரியாதே... யார் அவர்?'' ''அவர் பாதியில் விலகிவிட்டார். அதனால்தான் உனக்கு அவரைத் தெரியவில்லை!'' என்றார் அப்பா. இதுதான். இவ்வளவுதான். உலக சமாதானமோ, உலகக் கோப்பையோ, ஆஸ்கர் விருதோ, ஆறிலக்கச் சம்பளமோ, தூத்துக்குடி அவுட்டரில் சொந்தமாக ஒரு வீடோ... எந்தச் சமயத்திலும் உங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்காதீர்கள்! முழுமையாக ஒப்படை! கேதே மில்லர்பற்றி உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். அபாரமான ஓட்டப் பந்தய சாம்பியன். பள்ளி நாட்களில் கேதே கலந்துகொள்ளும் எந்தப் போட்டிகளிலும் அவள்தான் வின்னர். எதிர்காலத்தில் அபாரமான உலக சாதனைகளைப் படைப்பாள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த அவளது 13-வது வயதில் கேதே ஒரு மோசமான விபத்தில் சிக்கினாள். மிக மிக மூர்க்கமான விபத்து. கிட்டத்தட்ட மூளை சிதைந்துவிட்டது. 11 வாரங்கள் கழித்து கண் விழித்த கேதே, அதன் பிறகு மூச்சுவிட, தண்ணீர் குடிக்க, நடக்க, பேச, ஆரம்பம் முதல் பழக வேண்டி இருந்தது. சரசரவென குறைந்த எடை, உடலில் ஒரு துளி உயிரையும் சொற்ப எலும்புகளையுமே மிச்சம் வைத்திருந்தது. ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொள்வதைப்பற்றி கேதே நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றார்கள் மருத்துவர்கள். ஆனால், ஒருநாள் கேதே மீண்டும் ரேஸ் டிராக்குக்கு வந்தாள். துப்பாக்கி வெடித்து மற்றவர்கள் பாதி தூரம் கடந்த பிறகுதான் கேதேவால் எழுந்து நிமிர்ந்து எட்டுவைக்க முடிந்தது. நடுநடுவே பொத்பொத்தென்று கீழே விழுந்து எழுந்ததில் உடலெங்கும் காயங்கள். ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும்போதும் ரத்தம் கசிகிறது. ஆனாலும், விடாமல் ஓடி எல்லைக் கோட்டைத் தாண்டுகிறார் கேதே. 'முதன்முறையாக ரேஸில் கடைசி இடம் பிடித்து வெற்றியை நழுவவிட்டிருக்கிறீர்கள். எப்படி உணர்கிறீர் கள்?'' என்று அவரிடம் கேட்டிருக்கிறார்கள். ''முதல் இடத்தைப் பிடிப்பதுதான் வெற்றி என்று நான் எண்ணவில்லை. இந்த ரேஸை நான் முடிப்பதே எனக்கு வெற்றிதான். முதல் இடமோ, கடைசி இடமோ, நான் என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்தேன். அதற்கு எனக்குக் கிடைத்த வெகுமதி நிச்சயம் எனக்கு மகிழ்ச்சிதான். நமது முழுத்திறமைகளையும் வெளிப்படுத்திய பிறகு விளையும் விளைவுகளுக்கு நிச்சயம் நாம் பொறுப்பாக மாட்டோம்!'' என்றார் கேதே. உங்களிடம் உள்ள அனைத்தையும் நீங்கள் ஒப்படைக்கவிருப்பது எப்போது?'நீங்கள் மட்டும் ஏன் உருளைகளைத் தரம் பிரிப்பது இல்லை?' என்று ஒருநாள் அவரிடம் மற்ற விவசாயிகள் கேட்டுஇருக்கிறார்கள். 'நீங்கள் ஒருநாள் செலவழித்து உருளைகளை தரம் பிரித்து லாரியில் ஏற்றிக்கொண்டு வழுவழு சாலையில் மார்க்கெட்டுக்குச் செல்கிறீர்கள். நான் மொத்தமாக உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். அந்த எட்டு மைல் காட்டுப் பாதையில் லாரி அலுங்கிக் குலுங்கிச் செல்லும்போது, பொடிஉருளைகள் தானாகவே அடியாழத்துக்கு இறங்கிவிடும். நடுவாந்திரமான உருளைகள் நடுவில் சிக்கி நின்றுகொள்ளும். கனமான பெரிய உருளைகள் ஜம்மென்று மேலே தங்கிவிடும். மார்க்கெட்டுக்குச் சென்றதும் அப்படியே அலேக் ஆக அள்ளிக் கொட்ட வேண்டியதுதான் பாக்கி!'' என்றாராம்.
காந்தி,கபில்தேவ்,ரஹ்மான்,-இவர்கள் எல்லாருக்கும் உள்ள ஒற்றுமை
விளம்பரம் ஒரு பார்வை -உலகின் முதல் விளம்பரம் முதல் -பக்கம் 2
அடி வாங்கிச் செத்த டைனோசர்!
மயிலுக்குத் தோகை, தவளைக்கு விரியும் கழுத்துப் பை என ஆண் விலங்குகள் அனைத்துக்கும் தங்களை விளம்பரம் செய்துகொள்ளும் ஸ்டைல் உண்டு. தன்னைச் சரியாக விற்கும் ஆண் மட்டும்தான் பெண்ணின் உறவைப் பெற முடியும். இனத்தையும் பெருக்க முடியும்!சுமார் எட்டுக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, டைனோசர்கள் இனப் பெருக்கக் காலத்தில் தன்னை விளம்பரப்படுத்த, முதுகுப் பகுதியில் இருக்கும் பட்டைகளில் மிக அதிக ரத்தத்தைச் செலுத்தி அவற்றைச் சிவப்பு நிறமாக மாற்றுமாம். அப்படிச் செய்யக் கற்றுக்கொள்ளாத சில ஆண் டைனோசர்கள், பெண் டைனோசர்களிடம் அடி வாங்கியே செத்துப்போயினவாம். மனித இனத்தில் மட்டும்தான் பெண்கள் விளம்பரப் பொருளாக இருக்கிறார்கள்.கிரேக்க காலத்தில் விலை மாதுக்கள் தங்களை விளம் பரப்படுத்த அனுமதி இருந்தது. அம்புக் குறி பொறிக்கப்பட்ட காலணிகளில் சிவப்பு மை பதித்த விலை மாதர்கள் கிரேக்க வீதிகளில் வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருப்பார்களாம். அவர்கள் நகரும்போது செருப்புத் தடத்தின் சிவப்பு மையைப் பார்த்து வாடிக்கையாளர்கள் பின் தொடர்ந்ததாக வரலாறு!
--------------------------------------------------------------------------
நீங்க கோலா ஆளா?
'கோகோ கோலா, பெப்சி' - விளம்பர உலகின் தவிர்க்க இயலாத பாடங்கள். 30 பைசா செலவில் ஒரு பானத்தைத் தயாரித்து ஏழு ரூபாய்க்கு விளம்பரம் செய்து 10 ரூபாய்க்கு விற்கும் விற்பனைத் தந்திரத்தை உலகுக்குக் கற்றுத் தந்தது இந்த கோலாக்கள்தான்.1890-களில் இருந்தே விளம்பரங்கள் மூலமாக மக்களை வசியப் படுத்தும் ஆராய்ச்சியைச் செய்து வருகின்றன கோலா நிறுவனங்கள். இவர்களின் முக்கியமான விளம்பர உத்தி 'பாலின ஈர்ப்பு'! பெண்ணின் உடல் போன்ற வடிவத்திலேயே கோலா பாட்டில்கள் உருவாக்கப் படுகின்றன. ஐரோப்பாவில் விற்கும் கோலா பாட்டில் நீண்டு மெலிந்ததாகவும், இந்திய பாட்டில்கள் அதைவிடக் கொஞ்சம் உயரம் குறைவானதாகவும், சீன கோலா பாட்டில்கள் குட்டையாகவும் இருக்கும்! தவிர, நட்சத்திரங்கள் மீதான கவர்ச்சி, தேசியஉணர்ச்சி போன்றவையும் இவர்களுக்கு விளம்பர ஆயுதங்களே. இந்திய கிரிக்கெட் டீமின் டி-ஷர்ட் கலர் புளூ. உடனே, 'புளூ பெப்சி' வந்தது. சீனாவில் ஒலிம்பிக்... அதனால் 'சிவப்பு கோக்'
--------------------------------------------------------------------------------
மனசே மந்திரம்... உடலே விளம்பரம்தேர்தல் சமயத்தில் தலைமுடியை இரட்டை இலைபோல வெட்டிக்கொள்ளும் தொண்டர்கள் நம் ஊரில் உண்டு. உலகம் முழுக்க உடம்பில் விளம்பரம் செய்து கொள்வது ஒரு வியாபாரம். இவர்களுக்கு Human Billboards என்று பெயர்.
19-ம் நூற்றாண்டில் லண்டனில் விளம்பரப் பலகைகளுக்கு வரி விதிக்க ஆரம்பித்தனர். இட நெருக்கடியும், போட்டியும் சேர்ந்து கொள்ள மாற்றுவழியாக உருவானதுதான் மனித விளம்பரப் பலகைகள். சாண்ட்விச் கடைகள் தங்கள் விளம்பரங்களைச் சிலரின் கழுத்தில் முன்னும் பின்னுமாகத் தொங்க விட்டுச் சுற்றவிட்டன. (பிராண்ட் அம்பாஸடர்?!). இதை எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் 'ஒரு துண்டு மனித இறைச்சி இரண்டு விளம்பரப் பலகைகளுக்கு நடுவே மாட்டியிருக்கிறது' என எழுதினார். இது படிப்படியாக வளர்ந்து, பணம் கொட்டும் பிசினஸ் ஆகிவிட்டது. 2003-ம் ஆண்டு ஜிம் நெல்சன் என்ற 22 வயது இளைஞர், தன் பின் மண்டையை ஒரு இணைய தள நிறுவன விளம்பரத்துக்கு 7,000 டாலருக்காக விற்றார். அடுத்த ஆறு மாதங்களில் இந்த விளம்பரம் மூலமாக 500 புதிய வாடிக்கையாளர்கள் அந்தத் தளத்துக்குக் கிடைத் தனர். 2005-ல் ஆண்ட்ரீவ் ஃபிச்சர் என்பவர் தன் நெற்றியை eBay நிறுவன விளம்பரத்துக்கு விற்றார். அதற்கு அவர் பெற்ற சம்பளம் 37,375 டாலர்!
------------------------------------------------------------------------------------
மின்னலைப் பிடித்து, மேகத்தைச் சமைத்து விளம்பரம் செய்!
விண்ணில் ஏறி விளம்பரம் செய்யும் வித்தை இது. ஸ்கை ரைட்டிங் (Sky writing), ஸ்கை டைப்பிங் (Sky Typing) என்பார்கள்.
ஸ்கை ரைட்டிங் முறையில் சிறிய விமானம் ஒன்றை விண்ணில் செலுத்தி அதன் எக்ஸாஸ்டில் இருந்து சிறப்பு வகையான புகையை வெளிவரச் செய்வார்கள். அழுத் தம் ஊட்டப்பட்ட கன்டெயினரை எக்ஸாஸ்ட்டுடன் இணைத்து அதற்குள் கானோபஸ் 13 என்ற எண்ணெய் அல்லது பாரஃபின் எண்ணெயை அடைத்து, இந்த அடர்த்தியான வெண் புகையை வரவழைப்பார்கள். விமானத்தைக் குறிப்பிட்ட முறையில் பறக்கச் செய்யும் போது வெளிவரும் புகையானது விளம்பர வாசகங்களை வானில் உருவாக்கும். கீழே இருந்து பார்க்க ஜோராக இருக்கும். சில பணக் காரக் காதலர்கள் தங்களின் காதலைக்கூட இப்படிச் சொல் வார்களாம். நியூயார்க்கில் இதற்கு என்றே இயங்கும் ஒரு நிறுவனம் மாதத்துக்குக் கிட்டத்தட்ட 50 ஸ்கை ரைட்டிங் காதல் வாசகங் களை வானில் எழுது கிறது. காற்று குறைவான, மேகங்கள் இல்லாத தெளிவான வானிலை இதற்கு அவசியம்.கிட்டத்தட்ட 10 ஆயிரம் அடி முதல் 17ஆயிரம் அடி உயரத்தில் இந்த ஸ்கை ரைட்டிங் விளம்பரங்கள் எழுதப்படும். ஒரு விமா னம் மூலம் ஆறு எழுத்துக்கள் வரை எழுதலாம். ஓர் எழுத்தை உருவாக்க ஆறேழு விநாடிகள் ஆகும். அதிக எழுத்துக்கள் கொண்ட நீளமான வாசகங்கள் என்றால் ஏழெட்டு விமானங் களைப் பயன்படுத்தி, பல திசை களில் விமானங்களைச் செலுத்தி மிகுந்த திறமையுடன் வாசகங்களை எழுதுவார்கள். அதிகபட்சம் 20 நிமிடங்கள் வரை இந்த எழுத் துக்கள் வானில் இருக்கச் சாத்தி யம் உண்டு. காற்று பலமாக வீசி னால் கலைந்துவிடும். கிட்டத்தட்ட 30 மைல் சுற்றளவில் உள்ளவர்களால் இந்த விளம்பர வாசகங்களைப் படிக்க முடியும். ஸ்கை ரைட்டிங், விமானிகளின் சாகச விளையாட்டு. 1922-ம் ஆண்டு முதல் ஸ்கை ரைட்டிங் என்பது விளம்பரங்களிலும் வந்தது. பெப்ஸியும் ஸ்கை ரைட்டிங் மூலம் விளம்பரம் செய்தது. நம் ஊர் சர்க்கஸ்களில் சர்ச் லைட்டுகள் மூலம் மக்களை ஈர்ப்பதும் ஒரு வகையான வான் வழி விளம்பரம் தான்!
-------------------------------------------------------------------------------
ஒரு படம்... ஒரு பாடம்!
ஒரு படம் அல்லது சில வார்த்தைகள் மூலம் விளம்பரம் செய்வது ரொம்பவே சவாலான விஷயம். அந்தச் சவாலில் சாதித்த சில விளம்பரங்கள்இவை...
புயலில் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கிடக்கும் ஊரில் எதுவும் மிஞ்சவில்லை. நான்கு சக்கரங்கள் மட்டுமே எஞ்சி நிற்கினறன. ஜே.கே. டயர்ஸின் விளம்பரம் இது.
'ஷாரூக்கான் ஒரு நிமிடத்துக்கு 247 ரூபாய் சம்பாதிக்கிறார். அமிதாப் 361 ரூபாய். சச்சின் 1,163 ரூபாய். இந்திரா நூயி (பெப்ஸி நிறுவன அதிகாரி) நிமிடத்துக்கு 2,911 ரூபாய் சம்பாதிக்கிறார்' என்பதோடு அந்த லிஸ்ட் முடிகிறது. கீழே 'பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்காதீர்கள்' என்ற விளம்பர வாசகம்.
டூ மினிட் மேகி நூடுல்ஸின் சமீபத்திய விளம்பரம் இது. 'கடந்த 20 வருடங்களாக நாங்கள் உங்களின் இரண்டு நிமிடங்களை மட்டும்தான் கேட்கிறோம்!' என்கிற ஸ்லோகனுக்குக் கீழே மேகி நூடுல்ஸின் லோகோ. கெஞ்சல் தொனியில் இருக்கும் இந்த விளம்பரம் எக்கச்சக்க ஹிட்.
காரின் ஜன்னல் வழியே பார்த்தால் பச்சைப் பசேல் என்ற நிலம் இருக்கும். அதன் மிரர் வியூவில் (பின்புறம் பார்க்கும் கண்ணாடி) வறண்ட, கரடுமுரடான நிலம் இருக்கும். கண்ணாடியில் 'objects in the mirror are closer than they appear' என்கிற வாசகம் இருக்கும். 'மரத்தைக் காப்பாற்றுங்கள்... உலகத்தைக் காப்பாற்றுங்கள்' என்பது விளம்பர வரிகள்.
v s on என்கிற வார்த்தைக்குக் கீழே 'கண்தானம் செய்யுங்கள்' என்கிற அறிவிப்பு. ஏதாவது புரிகிறதா? vision என்கிற எழுத்தில் இருந்து இரண்டு 'ஐ'யை எடுத்துத் தானம் செய்யச் சொல்கிறார்கள். எவ்வளவு பெரிய விஷயத்தைச் சிம்பிளாகச் சொல்லிவிட்டார்கள்?
பரமபத விளையாட்டில் ஏணிகள் மட்டுமே இருக்கின்றன. பாம்புகள் ஒன்றுகூட இல்லை. அனிமல் பிளானெட் சேனலின் உலக அளவிலான பாம்புகள் பற்றிய ஷோவுக்கான விளம்பரம் இது. (பாம்புகள் எல்லாம் ஷோவுக்குச் சென்றுவிட்டனவாம்!) ஒற்றை மனிதக் காலுக்கு அருகிலேயே ஒரு செயற்கைக் கால். 'காரைப்போல மனிதர்களுக்கு ஒரிஜினல் ஸ்பேர்பார்ட்ஸ் கிடைப்பது இல்லை' என்பது விளம்பர வாசகம். 'குடித்துவிட்டு வண்டி ஓட்டாதீர்கள்' என்கிற பி.எம்.டபிள்யூ காரின் விளம்பரம் இது.
------------------------------------------------------------------------
வாழ்க்கையே ஒரு விளம்பர இடைவேளைதான்!
'நான் என்ன சொன்னேன்... நீ என்ன செஞ்சே?' என்று புலம்பும் கவுண்டரைப்போல ஆகிவிடுகின்றன பல விளம்பரங்களின் நிலைமை. இவர்கள் ஓர் அர்த்தத்தில் விளம்பரம் எடுக்க, மக்கள் அதை வேறு மாதிரி புரிந்துகொள்கின்றனர்.
ஆல் அவுட் கொசு மருந்தை வாங்கி வைத்துவிட்டு அது எம்பி நாக்கை நீட்டிக் கொசுவைப் பிடிக்கும் என்று காத்திருந்தவர்கள் பலர். 1990 வரையிலும் ஆணுறை உபயோகம்பற்றி மக்களுக்கு விளக்க இந்தியாவில் சமூக சேவகர்களே கிடைக்கவில்லை. பீஹார் பகுதிகளில் 'விளக்கியே ஆக வேண்டும்' என்று அரசால் அனுப் பப்பட்டவர்கள் கட்டை விரலில் ஆணுறையை மாட்டிக்கொண்டு 'இப்படி அணிந்துகொண்டால் எய்ட்ஸ் வராது' என்றார்கள். விளைவு, மக்களும் ஆளுக்கு ஒன்றை வாங்கி கட்டை விரலில் மாட்டிக்கொண்டார்கள்!
மின் விளக்குகள் இந்தியாவில் பிரபலமாகாத நிலையில் பிரிட்டன் நிறுவனம் ஒன்று கண்ணாடி பொருத்தப்பட்ட சிம்னி விளக்கு ஒன்றை அறிமுகப்படுத்தியது. 'சாதாரண விளக்கு காற்றில் அணைந்துவிடும். இது புயலில்கூட (ஹரிகேன்) அணையாது' என்று அவர்கள் ஆங்கிலத்தில் விளம்பரம் செய்ய... நாம் அதை இன்னமும் 'ஹரிகேன் லைட்' என்றே அழைக்கிறோம். போட்டோ காப்பியரை ஜெராக்ஸ் என்றும்,
அடிசிவ் பேன்டேஜ் என்பதை பேன்ட் -எய்டு என்றும், பெட்ரோலியம்ஜெல் லியை வாசலின் என்றும், வேக்குவம் க்ளீனரை ஹோவர் என்றும் அழைக்கும் அளவுக்கு விளம்பரங்களின் தாக்கம் மக்களின் மனங்களில் பதியவைக்கப்பட்டுள்ளது.
ரேடியோக்கள் வந்த புதிதில் விளம்பரங்கள் அதிகபட்சம் மூன்று நிமிடங்களில் முடிந்துவிடும். ஆனால் இன்று, 18 நிமிடங்கள் வரை நீள்கின்றன. 'நமது மூளையில் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் மூவாயிரம் மார்க்கெட்டிங் செய்திகள் விளம்பரங்கள் மூலமாக நுழைகின்றன. சராசரியாக ஒருவர் தன் வாழ்நாளில் மூன்று வருடங்கள் விளம்பரங்கள் பார்ப்பதிலேயே செலவழிக்கிறார்' என்கிறார் பிரபல விளம்பர விமர்சகர் கல்லே லாசன்!
--------------------------------------------------------------------------
கார் வாங்கினால்தான் கெளரவமா?
விளம்பரங்கள் பல நூற்றாண்டு காலமாக இருந்தாலும், தொழில் புரட்சிக்குப் பின்னர்தான் இத்தனை முன்னேற்றம். தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பிறகு இந்த முன்னேற்றம் பல மடங்கு அதிகரித்தது.
இந்தியாவில் டி.வி. விளம்பரங் களைக் கட்டுப்படுத்திக் கண்காணிக்கும் அமைப்பு, அட்வர்டைஸிங் ஸ்டாண்டர்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா. விதிமுறைகளுக்கு எதிராக மற்றும் தவறான, நேர்மையற்ற, ஆபாசமான, சட்டத்துக்குப் புறம்பான, பாதுகாப்பற்ற செயல் முறைகளுக்கு வழிவகுக்கக்கூடிய விளம்பரங்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும் உரிமை இவர்களுக்கு உண்டு. சமீபத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் தொடர்பான விளம்பரங்களின் விதிமுறைகளைக் கடுமையாக்கி உள்ளனர். இதன்படி, குறிப்பிட்ட பொருளைச் சாப்பிட்டால் புத்திக்கூர்மை அதிகரிக்கும், உடல் திறன் அதிகரிக்கும் என்ற விளம்பர வாசகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இந்த வாசகங்களைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கான உணவு மற்றும் பானங்கள் தொடர்பான விளம்பரங்களில் வரும் வாசகங்கள், அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் இருக்க வேண்டும். விளம்பரத்தில் காட்டுவதற்கும் உண்மைக்கும் எவ்வித வித்தியாசமும் இருக்கக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் எல்லாம் ஓ.கே. ஆனால், இவை பின்பற்றப்படுகின்றனவா?
பணத் தேவை இல்லாதபோது, உங்களிடம் 100 ரூபாயை திடீரெனக் கொடுத்து செலவு செய்யச் சொன்னால், அதில் 50 ரூபாயை உங்கள் மனதில் ஓடும் விளம்பரங்களின்படிதான் நீங்கள் செலவு செய்வீர்கள். அதுதான் விளம்பரங்களின் வெற்றி. கறுப்பான பெண்ணை ஆண்களுக்குப் பிடிக்காது, பைக் இல்லாத பையனைப் பெண்களுக்குப் பிடிக்காது, கார் வாங்கினால்தான் குடும்பத்துக்குக் கௌரவம் போன்ற கருத்துக்கள் யாருடைய வெற்றி... யாருடைய தோல்வி?
புத்தக விமர்சனம்-The india way

ஒரு காலத்தில் எதற்கெடுத்தாலும் மேலை நாட்டை மேற்கோள் காட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் இன்று அவர்கள் நம்மை அனைத்துத் துறைகளிலும் பின்பற்றும் நிலைக்கு வளர்ந்திருக்கிறோம், வளர்ந்து கொண்டிருக்கிறோம்... இதன் பின்னணியில் அமெரிக்காவின் வார்ட்டன் ஸ்கூலைச் சேர்ந்த நூலாசிரியர்கள் இந்தியாவில் உள்ள 100 பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ.-க்களிடம் பேட்டிக் கண்டு, அவர்களின் நிறுவனங்களை முழுமையாக ஆராய்ந்து அதன் முடிவுகளை புத்தக வடிவில் தந்திருக்கிறார்கள்.
இந்தியாவில் 3,000 டாலருக்கு காரும், 300 டாலருக்கு கம்ப்யூட்டரும், 30 டாலருக்கு மொபைல் போனும் கிடைப்பது சாத்தியமாகியிருக்கிறது. இதற்குக் காரணம் புதுமைகளைக் கண்டறியும் ஆராய்ச்சிக் கூடமாக இந்தியா மாறிவருவதுதான். இந்தியாவின் மென்பொருள் தொழில் வளர்ச்சி பற்றி நூலாசிரியர்கள் குறிப்பிடும்
போது, ''ஆரம்பத்தில் விலை மலிவு என்பதால் வாடிக்கையாளர்கள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கிறார்கள். அதற்குப்பிறகு அத்தொழிலில் இருக்கும் தகுதி, திறமை கருதி அப்படியே இங்கேயே நிலைத்து விடுகிறார்கள்'' என்கிறார்கள். இதனால்தானோ என்னவோ, நமது மென்பொருள் மற்றும் பி.பீ.ஓ. நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் 'இந்தியாவுக்கு வேலைகளை அனுப்பும் நிறுவனங்களுக்கு அதிகமாக வரி விதிக்கப்படும்' என்கிற அறிவிப்பை கேட்டும் அதிகமாக சலித்துக் கொள்ள வில்லை!
1991-க்கு முன்னும், பின்னும் அரசு அதிகாரிகளின் செயல்பாடு குறித்து புராக்டர் அண்ட் கேம்பிளின் தலைமைப் பொறுப்பிலிருந்த குருசரண்தாஸ் குறிப்பிடும் போது, ''எனது முப்பது ஆண்டுகால பிஸினஸ் வாழ்க்கையில் நான் சம்பந்தப்பட்டத் தொழிலை அறிந்து கொண்ட ஒரு அதிகாரியைக் கூட நான் சந்தித்ததில்லை. இருப்பினும் எனது தொழிலை நசுக்கும் சக்தி அவர்களிடம் இருந்தது'' என்கிறார். எவ்வளவு அப்பட்டமான உண்மை. ஆனால் இன்று நிலைமை மாறிவருகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய தொழில் குழுமங்களான டாடாவும், பிர்லாவும் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியுடன், நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்பட்டன. 1898-ம் ஆண்டில், நாட்டு நலனில் அக்கறை கொண்ட டாடா குழுமத்தின் அப்போதைய தலைவ ரான ஜாம்ஷெட்ஜி டாடா தனது சொத்தில் பாதியை கிட்டத்தட்ட 2 லட்சம் பவுண்ட்டை பெங்களூரில் 'இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்' ஆரம்பிக்கக் கொடுத்தார். இது அமெரிக்காவில் 'கார்னிஜ் மெலன் பல்கலைக்கழகம்' ஆரம்பிக்க ஆண்ட்ரூ கார்னிஜ் கொடுத்த 1 மில்லியன் டாலரை விட அதிகமானதாகும் (அந்த காலகட்ட மதிப்பீட்டின்படி)!. ஆக, இந்திய நிறுவனங்களிடம் தனிநலனிலும் பொதுநலம் மிகுந்திருக்கிறது. தவிர, 'ஜுகாத்' என சொல்லப்படுகிற இருக்கிற வசதி வாய்ப்புகளை மிகவும் திறமையாகப் பயன்படுத்தும் தன்மையும் இந்தியர்களாகிய நமக்குக் கை வந்த கலை.
இந்தியா வழி நிறுவனங்கள் செயல்படும் விதம் மேல்நாட்டு நிறுவனங்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. இவைகளில் முக்கியமானவை...
தங்கள் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை நிர்வகிக்கும் திறன்.
தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் நிர்வாகத்திறமை.
போட்டியிடும் செயல்திறம்.
நிறுவனத்தை நடத்திச் செல்லும் விதம்.
பொதுநலனில் அக்கறை.
அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணி புரிபவர்களை ஒரு பளுவாகவே கருதுகின்றன. மாறாக, இந்திய நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரிபவர்களை ஒரு சொத்தாகக் கருதுகிறார்கள். இன்றைக்கு மென்பொருள்
துறையில் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத் திற்கு தாவிச் செல்பவர்கள் அதிகம் (சராசரியாக 17 சதவிகிதம்). அப்படியிருந்தபோதும் அவர்களுக்கு 6 மாதம் முதல் 9 மாதம் வரை பயிற்சி கொடுக்கப்படுகிறது. காரணம், பயிற்சி கொடுத்த நிறுவனத்தை விட்டு அவர்கள் வேறு நிறுவனத்திற்குச் சென்றாலும் பலன்
மென்பொருள் துறைக்குத்தான் என்கிற ஒரு பரந்துபட்ட கண்ணோட்டம் அத்துறையை நிர்வகிப்பவர்களிடம் இருப்பதுதான்.
அமெரிக்க நிறுவனங்களின் குறிக்கோள், நிறு வனத்தின் பங்குதாரர்களை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பது மட்டும்தான். ஆனால் இந்திய நிறுவனங்கள் பங்குதாரர்களின் நலனுடன் பணிபுரிபவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட்டுவருகின்றன.
இது பற்றி 18 நாடுகளில் 55,000 பேர்கள் வேலை பார்க்கும் ஹெச்.சி.எல்.நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் வினித் நய்யார் தங்களது நிறுவனத்தின் குறிக்கோளாகச் சொல்வது.. 'பணியாளர்கள் முதலில், வாடிக்கை யாளர்கள் பிறகு'. இது சற்று கடினமான ஆனால் மிகவும் தைரியமான ஒரு கொள்கைதான். இதற்கு அவர் கூறும் காரணம், பணியாளர்களை நன்கு கவனித்துக் கொண்டால் அவர்கள் வாடிக்கையாளர்களைக் கண்டிப்பாக நன்கு கவனித்துக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கைதான்!
இந்தியர்களிடம் உள்ள சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்து செல்லும் தன்மையும், நிர்வாகத்தை வழிநடத்தி செல்லும் திறமையும் நிறுவனங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. இதற்கு உதாரணம், 2001-ம் ஆண்டு வார்ட்டன் ஸ்கூலின் 120 ஆண்டுகால வரலாற்றில் எப்போதும் இல்லாத நிகழ்வாக அதன் பட்டமளிப்பு விழாவில் கிட்டத்தட்ட 1,000 எம்.பி.ஏ. மாணவர்களின் மத்தியில் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தலைமையுரை நிகழ்த்தினார். அதன் பின் 2007-ல் லட்சுமி மிட்டல் உரை நிகழ்த்தினார். காரணம், அவர்களின் நிர்வாகத்திறனில் அவர்கள் தலைமை வகித்த நிறுவனங்கள் பெற்ற வெற்றிதான்!
இப்புத்தகத்தின் ஆசிரியர்கள் பேட்டி கண்ட இந்திய தொழில் துறையைச் சேர்ந்த ஜாம்பவான்கள் 100 பேர்கள் பற்றிய குறிப்பும், இந்நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் உள்ளவர்களிடம் கேட்ட கேள்விகளும், அமெரிக்க மற்றும் இந்திய நிறுவனங்களுக்கிடையேயான வித்தியாசங்களும் மட்டுமே புள்ளி விவரங்களுங்களுடன் கிட்டத்தட்ட 120 பக்கங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஆசிரியர்களின் முயற்சியை வெளிப்படுத்தினாலும், படிக்கும் நமக்கு கொஞ்சம் சலிப்புத் தட்டுகிறது.
இப்புத்தகத்தை படித்து முடிக்கும் போது நமக்குத் தோன்றுவது, 'என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்.. ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்..' என்கிற வரிகள்தான். இந்தியாவை உலகம் உற்று நோக்குவதுடன் மட்டுமல்லாமல் பின்பற்றவும் ஆரம்பித்திருக்கிறது என நினைக்கும் போது மனது நிறைகிறது!
நாலு நிமிஷ வேஷம்-பாட்டி பழக்கம் பழகத் தயாரா ?

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் சிலபல செயல்களைத் தினமும் செய்ய வேண்டி இருக்கிறது. தேர்வுகளுக்குப் படிப்பது, அலுவலகப் பணிகளை முடிப்பது, வீட்டுப் பரணை ஒழிப்பது போன்ற வழக்கமான வேலைகளாக இருந்தாலும் சரி, காதலிக்குக் கடிதம் எழுதுவது, பால்ய கால நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவது, மனைவியின் கால்களை அமுக்கிவிடுவது போன்ற 'ஸ்பெஷல் அசைன்மென்ட்'களாக இருந்தாலும் அவற்றை ஆரம்பிக்க மலையளவு தயக்கம் நம்மைத் தடுக்கும். அந்த மாதிரியான சூழ்நிலைகளில் 'நாலு நிமிஷ வேஷம்' கொள்கையை அமல்படுத்திப் பாருங்கள். அதாவது, தயக்கம் தடுத்துவைத்திருக்கும் எந்த ஒரு செயலையும் நாலே நாலு நிமிடங்கள் மட்டும் செய்யலாம் என்றுமுயன்றுபாருங்கள். நாலு நிமிடங்களுக்குப் பின் அதைத் தொடர்ந்து செய்யப் பிடிக்காவிட்டால், விட்டுவிடலாம் என்று தாஜா செய்து உங்கள் மனதை அதற்குத் தயார்ப்படுத்துங்கள். பெரும்பாலானவர்கள் ஒரு செயலை நாலு நிமிடங்கள் செய்யத் தொடங்கிவிட்டால், அதன் பிறகு அதை நிறுத்துவது இல்லையாம். ஒரே ஒரு முறை தள்ளிவிட்டால், அந்த விசையைப் பற்றிக்கொண்டே ஓடிக்கொண்டு இருக்கும் பெண்டுலம்போல. முதல் நாலு நிமிடங்களைக் கடத்திவிட்டால், ஆறு, ஏழு, எட்டாவது நிமிடங்கள் கடப்பதே தெரியாமல் கடந்துவிடும்.
பி.கு: ஒரு நிமிடம் கூடுதலாகத் தாங்குபவர்களைத்தான் ஹீரோ/ஹீரோயின் என்பார்கள்!
இதுபோல 60 க்யூட் டிப்ஸ் தருகிறார் ஜெஃப் டேவிட்ஸன். சின்னச் சோம்பல்கள் காரணமாக நாம் உதாசீனப்படுத்தும் சில சம்பவங்கள்தான் பெரிய பெரிய வருத்தங்களை பின்னர் ஏற்படுத்தும். அந்த சின்னச் சோம்பல்களை எதிர் கொண்டு வெற்றிபெறும் தந்திரங்கள்தான் 'The 60 Second Self Starter' புத்தகம் முழுக்க. அவற்றில் இருந்து சில தந்திரங்கள் மட்டும்...விமானந்தாங்கி கப்பல்களின் மேல்தளத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதிவேக ஜெட் விமானங்கள் ஒலி வேகத்தில் வந்து தளம் தொட்டு சொற்ப தூரத்தில் மொத்த வேகமும் இழந்து கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். எத்தனைதான் பயிற்சி பெற்ற, அனுபவம் நிரம்பிய பைலட் கையாண்டாலும், அத்தனை வேகத்தில் கப்பல் மீது விமானம் இறங்கும்போது ஓடுதளத்தில் இருக்கும் சின்னக் காகிதச் சுருள் அல்லது ஆயில் கறைகூட அந்த விமானத்தை நிலைகுலையச் செய்துவிடலாம். இதனாலேயே கப்பலின் கேப்டனாக இருந்தாலும், சுற்றுப்புறத்தை ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறையும் ஒவ்வொரு விமானம் தளம் இறங்குவதற்கும் முன்னரும் சுத்தப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இது விமானந்தாங்கி கப்பல்களில் கடைப்பிடிக்கப்படும் கட்டாய விதி.கிட்டத்தட்ட நமது மேஜையும் அதேபோன்ற ஒரு விமானந்தாங்கி தளம்தான். நமது தினசரி அலுவல்களின் தீவிரத்தை, வேகத்தை, அதற்கு நாம் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை நமது மேஜையும் தீர்மானிக்கும். முந்தைய நாள் குப்பைகள், கடந்த மாத நினைவூட்டல் கடிதங்கள், நினைவில் நிற்காத குறிப்புக் காகிதங்கள் - ஃபைல்கள் போன்றவை உங்கள் மேஜையை அடைத்துக்கொண்டு இருந்தால், அன்றைய தினம் நீங்கள் கிளப்ப வேண்டிய ஜெட் விமானத்தை அந்தக் குப்பைக் கூளங்களுக்குள் எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? சடசடவென முடிவெடுத்து முடித்த காரியங்களின் குப்பைகளைக் கடாசிவிடுங்கள். முடிக்க வேண்டிய காரியங்களின் குறிப்புகள் மட்டுமே உங்கள் முன் இருந்தால், மலைஅளவு நிம்மதியை உணர்வீர்கள். மலையளவு குப்பை குவிந்துகிடந்தால், உலகளவு அழுத்தத்தை உணர்வீர்கள். உங்கள் ஜெட் விமானம் சீறிப் பாய வாழ்த்துக்கள்!
பி.கு: நாம் பழகும் சில பழக்கங்கள்தான், பிறகு நம்மை வடிவமைக்கின்றன!
சின்ன வயதில் பாட்டிகள் நமக்கு புவ்வா ஊட்ட, குளிக்கவைக்க நம்மை எப்படியெல்லாம் தாஜா செய்திருப்பார்கள். 'நீ இப்போ இந்த கீரைச் சாதத்தைச் சாப்பிட்டாதான், உனக்கு கடலை மிட்டாய் வாங்கிக் கொடுப்பேன்', 'ரெண்டே ரெண்டு மாத்திரை. அவ்வளவுதான்... உனக்கு சிவப்பு கலர் பலூன் வாங்கித் தாரேன்', 'மாவு மில்லுக்குப் போயி கோதுமையை அரைச்சுட்டு வந்தா, ஒரு மணி நேரம் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டிக்கோ' - இப்படி அப்படி தாஜா செய்து தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் சாதித்துக்கொள்வது பாட்டிகள் பழக்கம். அந்தப் பாட்டி பழக்கத்தை இப்போது நாம் செயல்படுத்தினால் என்ன?
அதாவது, நமக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலைச் செய்து முடித்ததும், ரொம்பவே பிடித்தமான ஒரு செயலைச் செய்துகொள்ளலாம் என்று திட்டமிட்டுச் செயல்படுவது. உதாரணமாக, செமஸ்டர் தேர்வுகளுக்குப் படித்து முடித்ததும் டி.வி.டி-யில் ஜாக்கிசான் படம் பார்க்கலாம், அசைன்மென்ட் எழுதி முடித்ததும் காதலன்/காதலிக்கு எஸ்.எம்.எஸ்ஸலாம், இரவுக்குள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டால், நைட் ஷோ சினிமாவுக்குச் செல்லலாம், இந்த மாத டார்கெட்டை முதல் 25 நாட்களிலேயே எட்டிவிட்டால், கொடைக்கானலுக்கோ, ஊட்டிக்கோ ஒரு ட்ரிப் அடிக்கலாம் என அவரவருக்குப் பிடித்த பின்விளைவுகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அந்தப் பிடித்த இரண்டாம் பாதியை எட்டுவதற்காக, முனைந்து முன்பாதியை முடித்துவிடுவீர்கள். ஆனால், விதிக்கப்பட்ட செயலைச் செய்து முடித்த பிறகுதான், விருப்பப்பட்ட செயலை முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
பி.கு: எந்தக் கடின வேலையும், என்றோ ஒருநாள் செய்ய மறுத்த சுலப வேலைதான்!
எந்த ஒரு காரியத்துக்கும் டெட்லைன் விதித்துச் செயல்படுங்கள். காலையில் குளிக்கச் செல்வது, தினசரி அரட்டை நேரம், ஷாப்பிங் மணித் துளிகள், புராஜெக்ட் வேலைகள் என எந்த வேலையானாலும், மனசுக்குள் சின்ன காலக்கெடு நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அந்தக் காலக்கெடுவைத் தாண்டிவிட்டால், நீங்கள் பயப்படும் ஒரு அபாராதம் விதித்துக்கொள்ளுங்கள். 'டெட்லைன்' என்பதற்கு அர்த்தம் என்ன? அந்தக் கோட்டைத் தாண்டிவிட்டால், மரணம் நிச்சயம். அந்த 'மரண பயத்துடன்' எந்த ஒரு காரியத்தையும் செய்து பழகுங்கள். ரஜினி படத்தை முதல் ஷோவில் அமர்ந்து பார்க்க முண்டியடிக்கும் அதே ஆர்வத்தை 'டெட்லைன்' சங்கதிகளிலும் காட்டுங்கள்!
பி.கு: இந்த நொடிதான் என்றுமே வாழ்க்கையில் மிக முக்கியமானது!
-vikatan
உங்களிடம் உள்ளதா துடிப்பும் துள்ளலும்?
உன்னை நீ அறிவாய்! விருந்து வித் வி.ஐ.பி! ஆளுமைத் திறன் என்றதும் தகவல் தொடர்புத் திறன், உடல் மொழி, ஆடை நாகரிகம், தனி மனிதப் பண்புகள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் உணவு அருந்தும் 'டேபிள் மேனரிஸம்' என்பதில் அக்கறை காட்டுகிறோம்? தினமும் மூன்று வேளை உணவருந்தும் பழக்கம்கொண்டவர்கள் நாம். அந்தச் சமயங்களிலும் ஸ்கோர் செய்ய டிப்ஸ் தருகிறார் கோவை காருண்யா பல்கலைக்கழக மேலாண்மைத் துறைப் பேராசிரியர் ஆன்ட்ரூ ஃபிராங்க்ளின் பிரின்ஸ். நிறுவனப் பணிப் பண்பாடு (Corporate Etiquette) 'Knowing is knowledge, Doing is skill' என்பார்கள். அப்படியான ஸ்கில் நிரம்பியவர்களைத்தான் இன்றைய கார்ப்பரேட் உலகம் வரவேற்கிறது. நிறுவனப் பணிப் பண்பாட்டுத் திறன்களை எப்படி வளர்த்துக்கொள்வது என்று கோவை ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனித வளத் துறை இயக்குநர் மற்றும் கார்ப்பரேட் டிரெய்னர் கவிதாசன் வழி சொல்கிறார். செல் போனால் சொல் போச்சு! ஆள் பாதி ஆடை பாதி! "நமது பெர்சனாலிட்டியைப் பிரதிபலிப்பதில் பெரும்பங்கு வகிப்பது, நாம் அணியும் ஆடைகள். நல்ல தரமான ஆடைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். பளீர் நிறங்களைத் தவிர்த்து, மென்மையான நிறங்களையே உடுத்துங்கள். நடக்கும்போதும் நீங்கள் அணிந்திருக்கும் உடை உங்களுக்குச் சௌகரியமாக இருக்கிறதா என்று கவனியுங்கள். நிறைய நகைகள் அணிந்துகொள்ள வேண்டாம். உங்கள் முக அமைப்புக்கு ஏற்ற, ஹேர்ஸ்டைலைத் தேர்ந்தெடுங்கள். பொதுவாக, இன்றைய மாடர்ன் பெண்கள் புரொஃபஷனல் காரணங்களுக்காக நீளமான கூந்தலை விரும்புவது இல்லை. ஆனால், ஒழுங்காகப் பராமரிக்கப்படும் நீளமான கூந்தலும் அழகாக உங்கள் கடமையுணர்ச்சியைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும். இவற்றையெல்லாம்விட முக்கிய விஷயம், பெர்ஃப்யூம் பற்றியது. அழுத்தமான நெடியடிக்கும் வாசனைத் திரவியங்களைத் தொடவே வேண்டாம். நேர்முகத் தேர்வின்போது, மோசமான பெர்ஃப்யூமால் வேலைவாய்ப்பு பறிபோனவர்கள் எல்லாம் உண்டு. சென்ட், பெர்ஃப்யூம் போன்றவற்றைவிட டியோடரன்ட் நல்ல பலனைத் தரும்!" என்று ஃபேஷன் டிப்ஸ் தருகிறார் ஃபேஷன் டிசைனர் தபு. -vikatan
நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, உங்களிடத்தில் என்ன இருக்கிறதோ அவற்றைக்கொண்டு உங்களால் என்ன செய்ய முடியுமோ... அதைச் செய்யுங்கள்!' என்பார் ரூஸ்வெல்ட். ஆளுமைத் திறன் என்ற வார்த்தைக்கு இதுதான் மிகச் சுருக்கமான விளக்கம்!பள்ளி-கல்லூரி மாணவர், வேலை தேடும் யுவதி, முதல் நாள் வேலைக்குச் செல்லும் இளைஞன், இரண்டு வருடக் காதலை வெளிப்படுத்த முனையும் காதலன், புரமோஷனுக்குக் காத்திருக்கும் நடுத்தர வயதினர், தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், பேரன்-பேத்திகளிடம் தனது இமேஜ் வளர்க்க விரும்பும் தாத்தா- பாட்டி என எல்லோருக்கும் எங்கேயும் எப்போதும் ஆளுமைத் திறன் தேவை! கிட்டத்தட்ட நமது 95 சதவிகிதச் செயல்கள் நம் பழக்கவழக்கங்களை மட்டுமே அடிப்படையாகக்கொண்டவை. நம் பழக்க வழக்கங்களைத் தன்னிலை உணர்ந்த செயல்கள் (Automatic Conditioned Response)என்பார்கள். பழக்கவழக்கங்கள் என்பது வேறு, திறன்கள் என்பது வேறு. பழக்கம் பிறப்பில் இருந்தே வருவது. உதாரணமாக... இடது கைப் பழக்கம். திறன்கள் நாமாக வளர்த்துக்கொள்வது. ஓவியம் வரையைக் கற்றுக் கொள்வது."ஆளுமை மேம்பாட்டின் வளர்ச்சியில் ஒரு சிறு பகுதிதான் மென்திறன்கள் எனப்படும் சாஃப்ட் ஸ்கில்ஸ். மற்றவர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்வது, சீரான உடைகளைத் தேர்வு செய்து அணிவது, உணவு அருந்தும் விதம், மற்றவர்களையும் தன்னைப்போல நினைக்கும் எம்பதி (Empathy) போன்ற மென்திறன்களை வளர்த்துக் கொண்டாலே நம் ஆளுமை சீர் பெற்றுவிடும். உங்கள் நேர்முகத் தேர்வின் வெற்றி 53% உங்கள் உடல் மொழியாலும், 40% நீங்கள் பேசும் முறையாலும், குரலில் தொனிக்கும் ஆர்வம் ஆகியவையாலும், 7% மட்டுமே பேசும் வார்த்தைகளாலும் தீர்மானிக்கப்படுகிறது என்கிறது ஓர் ஆய்வு. நீங்கள் இருக்கையில் அமரும் முறையை வைத்தே, நீங்கள் அந்த வேலைக்குத் தகுதியானவர்தானா என்பதைத் தேர்வு நடத்துபவரால் தீர்மானித்து விட முடியும்!" என்கிறார் மனித வள நிபுணரும், பர்சனாலிட்டி டெவலப்மென்ட், கேம்பஸ் இன்டர்வியூ தொடர்பான பயிற்சி வகுப்புகளில் அடிக்கடி இளைஞர்களைச் சந்தித்து வரும் ராமன்.
வார்த்தைகளுக்கு வேலை இல்லாத இடங்களில் அல்லது பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காத சமயங்களில், உங்கள் எண்ணங்களை மற்றவர்களுக்குப் புரியவைக்க உடல் மொழிதான் சிறந்த வழி.
நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் முன் கண்ணாடி முன் நின்று பயிற்சி எடுப்பது நல்லது.
மீண்டும் மீண்டும் ஒரே செய்கையை வெளிப்படுத்த வேண்டாம். அது பார்ப்பவர்களுக்கு 'போர்' அடிக்கும்.
உங்கள் உடல் மொழி ரொம்பவும் இயற்கையாக இருக்கட்டும். ஒத்திகை செய்ததை வெளிப்படுத்துவதுபோல இருக்க வேண்டாம்.
எதிரே இருப்பவரின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.அவர் கள் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.
உடல் மொழியைப் பொறுத்த வரையில் உங்கள் மனதில் என்ன இருக்கிறதோ, அது உங்கள் அசை விலும் தெரியும். ஆகவே, நேர்மை யாக இருங்கள்.
அமர்ந்திருக்கிறீர்களோ அல்லது நின்றிருக்கிறீர்களோ, உங்களின் உடல் மொழி ரிலாக்ஸ்டாக இருக்கட்டும். சட்டைப் பொத்தான்களுடன் விளையாடுவது, இடுப்பில் கைவைத்து நிற்பது போன்ற கோமாளித்தனங்கள் வேண்டாம்!
ஐ-கான்டாக்ட், கைகுலுக்கல்கள், குரல் ஏற்ற இறக்கங்கள், இவையெல்லாம் மிகச் சரியாகக் கையாளப்பட வேண்டும்.
உணவு மேஜை மீது தட்டு, கரண்டி போன்றவற்றால் ஒலி எழுப்பாதீர்கள். அது அநாகரிகமான பழக்கம்.
வாய் நிறையச் சாப்பாட்டுடன் பேசாதீர்கள். ஒன்று, பேசிவிட்டுச் சாப்பிடுங்கள். அல்லது, சாப்பிட்டவுடன் பேசுங்கள்.
உங்கள் உதடுகளை மூடிக்கொண்டு உணவை மெல்லுங்கள்.
சாப்பாட்டை அள்ளி வாயில் கொட்டிக்கொள்ளாதீர்கள். கொஞ்சமாக, நிதானமாகச் சாப்பிடுங்கள்.
சாப்பிட்டவுடன் கைகளில் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களை நக்குவது, பல்லிடுக்கில் நோண்டுவது போன்றவை அருகில் இருக்கும் யாருக்கும் அருவருப்பை ஏற்படுத்தும்.
யாரேனும் சாப்பிடும் முன் நீங்கள் சாப்பிடாதீர்கள். நீங்கள் ஏற்பாடு செய்த விருந்தென்றால், உங்கள் விருந்தினர் சாப்பிடத் துவங்கும் வரை நீங்கள் ஆரம்பிக்காதீர்கள். நீங்கள்தான் விருந்தாளி என்றால், அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் இருந்து சிக்னல் வரும் வரை சாப்பிட வேண்டாம்.
விருந்துகளில் பெண்களுடன் சாப்பிட நேரும்போது, ஆண்கள் அவர்களுக்கு முதலில் பரிமாற வேண்டும்.
அடிக்கடி மற்றவர்களின் சாப்பாட்டுத் தட்டையோ அல்லது டேபிளையோ கவனிக்காதீர்கள். அது உங்கள் மீது ஒரு கீழ்த்தரமான எண்ணத்தை ஏற்படுத்திவிடும்.
ஒரே சமயத்தில் நிறைய உணவை உங்கள் தட்டில் கொட்டிக்கொள்ளக் கூடாது. கட்டாயப்படுத்திச் சாப்பிட வைத்தால் 'ஸாரி' என்று மென்மையாகத் தவிர்த்துவிடுங்கள்.
முன் பின் அறிமுகம் இல்லாத இடங்களில் கரண்டி, முள் கரண்டி, கத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தத் தெரியாமல் அல்லல்பட வேண்டாம்.
வெற்றி நோக்கிய உங்கள் பயணம், எவ்வளவு மெதுவானதாக இருந்தாலும், ஏதோ ஒரு முன்னேற்றம் அதில் இருக்க வேண்டும். ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் சேரும்போது, ஒருவர் குமாஸ்தாவாகச் சேர்வது அவரது தவறு கிடையாது. ஆனால், அவர் குமாஸ்தாவாகவே ஓய்வு பெற்றால், அது நிச்சயம் அவருடைய தவறுதான்.
நீங்கள் எவ்வளவு ஜாலி பேர்வழியாக இருந்தாலும், உங்கள் வேலையில் யாரும் உங்களைக் கேள்வி எழுப்பவோ, குறை கூறவோ முடியாதவராக இருங்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால், உங்கள் வேலை பாதிக்கப்பட்டால், அது ஒரு திறமையான ஊழியருக்கு அழகு அல்ல.
சக ஊழியர்களோடு ஈகோ பிரச்னை இருந்தாலும், அவற்றால் உங்கள் வேலை பாதிக்கப்படாமல் இருந்தால், நிர்வாகத்துக்கும் உங்கள் மேல் நம்பிக்கை ஏற்படும்.
அலுவலகத்தில் சிறியவரோ, பெரியவரோ, நமக்குத் தெரியாத விஷயத்தை யார் கூறினாலும், ஆர்வத்தோடு அதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு பொறுப்பான பதவியில் இருந்தால், அந்தப் பதவிக்கான மரியாதை உங்கள் செயல்களிலும் பிரதிபலிக்க வேண்டும்.
புதியவர்களை வழிநடத்துங்கள். யார் நன்றாக வேலை செய்தாலும், மனம் திறந்து பாராட்டுங்கள். பாராட்டு, உங்களை மற்றவர்கள் மேல் கனிவும், அக்கறையும் உள்ளவராகக் காட்டும்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் சிரித்த முகத்தோடு இருங்கள். கண் பார்த்துப் பேசுங்கள். அலுவலக நேரம் போக மற்ற நேரங்களில் நீங்கள் எல்லோருக்கும் நல்ல நண்பன்தான் என்று உங்கள் செயல்களில் காட்டுங்கள்.
எல்லாவற்றையும்விட முக்கியமானது, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அலுவலக கிசுகிசு (gossip) பேசாதீர்கள். அது, உங்களது கேரக்டரையே சிதைக்கக்கூடிய பழக்கம். உங்களை நம்பிக்கைக்குரியவராக அந்தக் குணம் என்றுமே அடையாளம் காட்டாது.
"இன்று உலகத்தை உங்களுடன் இணைக்கும் முக்கியமான மீடியம் செல்போன். உலகத்துக்கு உங்களைப்பற்றிய 'பிராண்ட் இமேஜ்' ஏற்படுத்துவதில் செல்போனுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. ஆனால், நம்மவர்கள் மிக மோசமாகப் போங்கு வாங்குவது செல்போன் நாகரிகம் இல்லாமல்தான். பெரும்பாலான சமயங்களில் உங்கள் தோற்றம், திறமை குறித்து அறியாதவர்கள் உங்களுடனான ஒற்றைத் தொலைபேசி உரையாடல் மூலம், உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டியிருக்கலாம். எனவே, உங்கள் தொலைபேசி நாகரிகத்துக்கு அதிகபட்ச முக்கியத்துவம் கொடுங்கள்!" என்கிறார் ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாளர் பிரபு.
கல்லூரி முடிந்து இன்டர்வியூ அல்லது வர்த்தகம் தொடர்பான அழைப்புகளுக்குக் காத்திருப்பவராக இருந்தாலோ, உங்கள் காலர் ட்யூன் தேர்வில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களுடன் 'ஹலோ' சொல்வதற்கு முன்னரே, உங்கள் காலர் டோன்தான் உங்களைப்பற்றிய ஒரு இமேஜ் ஏற்படுத்தும். 'வாடி வாடி நாட்டுக்கட்டை', 'தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா' என்று அல்லுசில்லு டோன்கள் உங்களுக்கு 'தரை டிக்கெட்' என்ற பட்டத்தை வழங்கிவிடும்!
காலர் டோன் விஷயத்தில் பெண்களும் அதீதக் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் காதலன் அல்லது கணவனுக்குப் பிடிக்குமே என்று 'கலாபக் காதலா!' என்று ஒலிக்கவிட்டிருப்பீர்கள். ஆனால், உங்களை அழைக்கும் அத்தனை ஆண்களும், நீங்கள் அழைப்பை ஏற்கும் வரை தான்தான் உங்கள் கலாபக் காதலன் என்ற கற்பனையில் திளைத்துக்கொண்டு இருக்கலாம். உஷார்!
நீங்கள் ஒருவரைத் தொடர்பு கொள்ளும்போது, உங்கள் அழைப்பு 'கால் வெயிட்டிங்'கில் இருந்தால், உடனே இணைப்பைத் துண்டியுங்கள். எதிர் முனையில் அவர் ஏதேனும் முக்கியமான தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருந்தால், உங்கள் அழைப்பு ஏற்படுத்தும் 'பீப் பீப்' ஒலி நிச்சயம் உங்கள் மீது ஒரு வெறுப்பை உண்டாக்கும்!
கால் வெயிட்டிங் வந்தாலோ அல்லது உங்கள் அழைப்பு அட்டென்ட் செய்யப்படவில்லை என்றாலோ, உடனே மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டே இருக்காதீர்கள். 'நான் இன்னார். இன்ன விஷயம் தொடர்பாகப் பேச விரும்புகிறேன்!' என்ற ஒரு வரி மெசேஜ் அனுப்பிக் காத்திருங்கள்.
பொது இடங்களில் ஸ்பீக்கர் போனில் பேசுவது, லவுட்ஸ்பீக்கரில் பாட்டு கேட்பது போன்றவை இங்கிதமான பழக்கமல்ல.
மருத்துவமனை, கோயில்கள், துக்க நிகழ்வுகள் போன்ற இடங்களில் தவறாமல் மொபைலை சைலன்ட் மோடுக்கு மாற்றுங்கள். அவசியமான அழைப்பென்றாலும், மெதுவாகப் பேசி, பிறகு அழைப்பதாகக் கூறுங்கள்.
எதிர்முனையில் பேசுபவர் எந்தச் சூழ்நிலையில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு பேச ஆரம்பியுங்கள்.
அச்சுப்பிச்சு அலறல் ரிங்டோன்களை வைத்து, சுற்றியிருப்பவர்களைத் திகிலூட்டாதீர்கள்.
அலுவலகத்துக்கு என ஒலி குறைந்த புரொஃபைல்களை ஃபிக்ஸ் செய்துகொள்வதன் மூலம், உங்களுக்கு வரும் அழைப்புகள் மற்றவர் கவனத்தைக் கலைக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
24X7 தொடர்புக்குத்தான் அலைபேசிகள். ஆனால், 24X7 ம் அழைத்துக்கொண்டே இருந்தால், அவை அலர்ஜி பேசிகளாகிவிடும் என்பதை மறக்காதீர்கள்!
ஒல்லி ப்ளஸ் உயரமான உடல்வாகுகொண்டவர்கள் நீளவாக்கில் கோடுகள் போட்ட உடைகளைத் தவிர்த்து, அகலவாக்கில் கோடுகள் உள்ள உடைகளை உடுத்தலாம். ஃபுல் ஸ்லீவ் உடைகள், கான்ட்ராஸ்ட் நிறங்கள் இவர்களுக்கு அழகாகப் பொருந்தும். ஸ்லீவ்லெஸ் உடைகளைத் தவிர்ப்பது நலம். காட்டன் உடைகள் இவர்களுக்குக் கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும்.
கொஞ்சம் குள்ளமாக, ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் ஒரே நிறத்திலான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இவர்களுக்குப் பெரும்பாலும், கழுத்துப் பகுதி அழகாக இருக்கும் என்பதால், அதை எடுப்பாகக் காட்டும் காலர் நெக் வகை உடைகளை அணியலாம்.
உயரமான, சற்றே குண்டான உடல்வாகுகொண்ட பெண்கள், அடர்த்தியான நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரே விதமான பேட்டர்ன் உள்ள உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவது, உடலைக் கொஞ்சம் ஸ்லிம்மாகக் காட்டும். டைட் ஃபிட்டிங் உடைகள், காலர், ஃப்ரில் போன்றவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது.
குள்ளமான, குண்டான உடல்வாகு உடையவர்கள் பெரிய டிசைன்கள், ஸ்லீவ்லெஸ், ஃபுல்ஸ்லீவ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒரே நிறத்திலான உடைகள், நீளவாக்கில் கோடு போட்ட டிசைன்கள் இவர்களுக்கு நன்றாக இருக்கும்.
மாடர்ன் தோற்றம் தரும் என்றாலும், அலுவலகம், கல்லூரி போன்றவற்றுக்கு இறுக்கமான உடைகள் அணிந்து செல்வது, மரியாதைக்குரியவர் என்ற இமேஜை உங்களுக்குத் தராமல் போகலாம். அதனால், இந்த விஷயத்தில் கவனம் தேவை
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)

