Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

கொண்டாட்டத்தைத் தடுத்த மழை-ICG ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்களாவன..

18 May 2010 · 0 comments


கொண்டாட்டத்தைத் தடுத்த மழை...

மே 18, 2009... இந்நாளில் தான் 'விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டுவிட்டனர்; போர் முடிவுக்கு வந்தது,' என இலங்கை அரசு அதிகாரப்பூர்மாக அறிவித்தது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான உயிர்ப் பலிகளுக்கு உள்ளான 37 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்தது என ஊடகச் செய்திகள் புள்ளிவிவரங்களை வெளியிட்டன.

கொண்டாட்டத்தைத் தடுத்த மழை...

இதோ போர் முடிந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், புலிகளை வீழ்த்திவிட்டதாக வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது, இலங்கை அரசு. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஆனால், தற்போது இலங்கையில் பல்வேறு பகுதிகளில் மழை விடாமல் கொட்டிக் கொண்டிருக்கிறது. பெருவெள்ளம் காரணமாக, வெற்றிக் கொண்டாட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்திருப்பதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. சிறப்பு ராணுவ அணிவகுப்பு மற்றும் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி முதலிய நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.

போர்க்குற்றங்களும் சர்வதேச விசாரணையின் தேவையும்...

இலங்கையில் போர் நடந்து முடிந்து ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளச் சூழலில், அந்தப் போர் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது, அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச நெருக்கடிக் குழு (ICG - International Crisis Group).

அந்த ஆய்வறிக்கையில், இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களைப் பற்றியும் அந்நாட்டு அரசு நேர்மையான முறையில் ஒரு விசாரணையை நடத்த தயாராக இல்லாத நிலையில், அங்கு நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஒரு சர்வதேச விசாரணையை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையரும், முன்னாள் கனடா உச்ச நீதிமன்ற நீதிபதியுமான லூயிஸ் ஆர்பர் (Louise Arbour) தான் ICG அமைப்பின் தலைவர். அவர் தலைமையில் இயங்கும் குழுவே இந்த ஆய்வினை மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது என்பதால் உலக அளவில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

ICG ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்களாவன:

இலங்கையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த போரின் கடைசி 5 மாத காலத்தில் மட்டும் குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

இலங்கை அரசும், விடுதலைப்புலிகள் இயக்கமும் போர் தொடர்பான சர்வதேச சட்டங்களை மீறியுள்ளன. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது, அவர்கள் அனுபவித்த மிகுதியான துயரங்கள் முதலியவற்றைப் பார்க்கும்போது, இதற்கு உரிய ஒரு பதில் தரப்படவேண்டும்.

பல ஆண்டுகளாக சர்வதேச மனித நேய சட்டங்களை மீறியிருந்தாலும், போரின் இறுதி மாதங்களில் தான் இந்த மீறல்கள் அதிகளவில் நடந்துள்ளன. அந்த மீறல்களின் தன்மை மிகவும் ஆபத்தானவையாக இருந்திருக்கிறது.

இலங்கையின் ராணுவம் மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே சர்வதேச சட்டத்தை மீறி, பொதுமக்களைத் தாக்குவது, மருத்துவமனைகளைத் தாக்குவது, மனித நேய நடவடிக்கைகள் நடக்கும் இடங்களை தாக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டன என்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

நோ ஃபயர் சோன் (No Fire Zone) எனப்படும் மக்களைப் பாதுகாக்கக் கூடியதும், தாக்குதல்கள் தவிர்க்கப்படும் பகுதி என்று இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மீதே ராணுவம் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பதற்கான சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதை வைத்துப் பார்க்கும்போது, இந்தப் போர்க் குற்றங்கள் இலங்கை பாதுகாப்புப் படைகளில் இருக்கும் குறிப்பிட்ட சில தனி நபர்களால் இழைக்கப்பட்டன என்று நம்புவதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன.

நோ ஃபயர் சோன்பகுதிகளில் கனரக குண்டு தாக்குதலை இலங்கை ராணுவம் நடத்துவதற்கு, விடுதலைப்புலிகளே தூண்டினர் என்று கருதுவதற்கும் இடமில்லை. விடுதலைப்புலிகள் இந்த இலக்குகளுக்கு மிக நெருக்கமாக இருந்ததாலும், அந்த இலக்குகளுக்குள்ளேயே அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இருந்ததாலும், அவர்கள் இந்தக் கனரக குண்டுத் தாக்குதல்களைத் தூண்டியிருப்பார்கள் எனக் கருத முடியவில்லை.

தாக்குதல்கள் தவிர்க்கப்படும் பகுதிகளுக்கு சேல்லுமாறு பொதுமக்களுக்கு உத்தரவிட்டதே இலங்கை அரசுதான். மக்கள் இருந்த இடமும் அரசுக்குத்தான் தெரியும். அப்பகுதியில் இருக்கும் மக்கள் சிவிலியன்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும். அரசுக்கு ஐ.நா. அலுவலர்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளிடம் இருந்து தகவல்களும் வந்துகொண்டிருந்தன. அத்துடன், செயற்கைக்கோள் படங்களும் அரசிடமே இருந்தன.

எனவே, அப்பகுதிகள் நேரில் பார்க்கக் கூடியதாகவும் இருந்திருக்கிறது. ஆனால், பல மாதங்களாகவே தொடர்ந்து சிவிலியன்கள் மீது குண்டுவீசித் தாக்குதல்களை நடத்துகிறீர்கள் என்று பலமுறை குற்றம்சாட்டியும் கூட, இலங்கைப் படையினர் தொடர்ந்து அதே பாணியில் தாக்குதல்களை நடத்திவிட்டு, 'சிவிலியன்கள் தாக்கப்படவில்லை,' என்று கூறி வந்தனர்.

அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட இத்தகைய சம்பவங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளின் நடத்தை விசாரிக்கப்பட வேண்டும்.

இந்தத் தாக்குதல்களுக்கு ஆளான மக்களுக்கு உணவும் மருந்துகளும் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னைகள், மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள், மனித நேய நடவடிக்கைகள் நடந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்றவை மனித குலத்துக்கு எதிராக குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தனி நபர்களே பொறுப்பா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.

இந்தப் போர்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து 'இன்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப்' கருத்து கேட்டதற்கு, இலங்கை அரசு பதிலளிக்க மறுத்துவிட்டது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தினரும் போர்ப் பகுதியிலிருந்து தப்பி வெளியேற முயன்ற பொதுமக்களை தடுத்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதால், அவர்களும் சர்வதேச சட்டங்களை மீறியிருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

இவ்வாறு இலங்கையில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்ததையும், ஆயிரக் கணக்கான பொதுமக்களை ராணுவம் கொன்று குவித்ததையும் ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ள இன்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப், மனித இனத்துக்கு எதிரான இந்த நிகழ்வுகளில் சர்வதேச நாடுகள் அக்கறை கொள்ளாதிருந்ததையும் கண்டிப்புடன் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இலங்கையில் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் நடந்துகொண்டிருந்தபோது, சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகள் மெளனம் காத்திருத்தன என்றும், மாறாக - மனிதத்தைக் கொன்றதப் பொருட்படுத்தாமல், விடுதலைப்புலிகளை தோற்கடிக்கப்பட்டதற்காக இலங்கை அரசுக்கு பல்வேறு நாடுகள் வாழ்த்து தெரிவித்தன என்று குறை கூறியிருக்கிறது அந்த ஆய்வறிக்கை.

ராணுவத்தின் உரிமை மீறலை விசாரிக்கிறது இலங்கை அரசு?!

இலங்கை ராணுவத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட அமைப்புகள் உரிமை மீறல் புகார்களை அடுக்கி வந்துகொண்டிருந்த நிலையில், இப்போது செவிசாய்த்திருக்கிறது இலங்கை அரசு.

ராணுவத்தினரின் உரிமை மீறல் புகார்கள் குறித்து விசாரிக்க 8 பேர் கொண்ட கமிஷன் ஒன்று அமைக்கபப்ட்டுள்ளதாக இலங்கை அரசு திங்கட்கிழமை அறிவித்தது. சித்தரஞ்சன் டிசில்வா தலைமையிலான இந்த கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபக்சேயின் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த விசாரணை கமிஷனில் சந்திரபால் சண்முகம், மனோகரி ராமநாதன் ஆகிய இரு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2009-ம் ஆண்டு மே மாதம் வரையிலான 7 ஆண்டு கால கட்டத்தில் நடைபெற்ற உரிமை மீறல்கள் குறித்து இந்த கமிஷன் விசாரிக்கும். இந்தக் கால கட்டத்தில் கற்றுக்கொண்ட பாடம், அதுபோன்ற தவறுகள் மேற்கொண்டு நடைபெறாமல் தடுத்து நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்து இந்த விசாரணை கமிஷன் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூரிகைத் துயரங்கள்!

14 May 2010 · 0 comments

தூரிகைத் துயரங்கள்!

கவிதைக்குக் கருவாய்... ஓவியத் துக்கு உயிராய் ஆனதைத் தவிர, ஈழத்தால் எது வாய்த்தது? முள்ளிவாய்க்கால் கொடூரங்களை உலகம் அறியாமல் துடைக்க இலங்கை அரசாங்கம் எவ்வளவுதான் முயன்றாலும், படைப்பாளிகளுக்குத் தடை போட முடியுமா? ஈழத்தின் போர் முகங்களை முழுமையாகப் பதிவு செய்திருக்கிறார் ஓவியர் புகழேந்தி.

25 ஆண்டுகளாகத் தூரிகையைக் கையில் ஆயுதமாக ஏற்றிருக்கும் ஓவியர், ஈழ மக்களின் அவலங்கள் குறித்துதான் அதிக ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.

''ரத்தக் கண்ணீர் வடித்த மக்களது அவலங்களை இதுவரை வரைந்த எனது தூரிகை, இப்போது அந்தக் கொடுமைக்கு எதிராகக் கிளர்ந்த புலிகளின் போராட்டத்தையும் வரைந்திருக்கிறது. இந்த 80 ஓவியங்களையும் மொத்தமாகப் பார்க்கும்போது, ஈழப் போராட்டத்துக்கு யாரும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்றே தோன்றுகிறது. மக்கள் அவலம் தொட ரும் வரை போராட்டம் தொடரும். அதுவரை எனது தூரிகைக்கும் ஓய்வுஇல்லை'' என்கிறார்.

ஏற்கனவே, ஈழக் காடுகளுக்குப் போய் புலி ஓவிய ஆர்வலர்களுக்கு வரைகலைப் பயிற்சி அளித்துத் திரும்பியவர் புகழேந்தி. ''என்னை ஓவியனாகத்தான் ஈழத்துக்குத் தெரியும். என் ஓவியங்களின் மூலம் எல்லோரும் ஈழத்தைப் பாருங்கள்'' என்கிறார் வேதனையுடன்!

-Vikatan

சுஜாதா-25- "சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்"

13 May 2010 · 1 comments

சுஜாதா-25- "சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்"


சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்...

ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.

நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு 'நைலான் ரதங்கள்'!


முதல் சிறுகதை 1958-ல் 'சிவாஜி' பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. 'கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்' என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை 'இடது ஓரத்தில்' 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு!

பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதாபெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்!

இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த் தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!

20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிஇருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!

சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் 'எந்திரன்'. கமலுக்காக எுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!

ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகை களில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்!

தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற 'வாஸ்விக்' விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வ ளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை!

சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை!

சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங் கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன!

கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை!

ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது!

உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடுமுயற்சி செய்தவர்!

புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண் பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது!

ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!

1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது!

சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. 'கடவுள் வந்திருந்தார்' நாடகம் பரபரப்பு பெற்றது!

இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, 'அம்மாவைப் பார்த்துக்கோ' என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது!

அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை!

பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்!

பங்களா வீடு, பென்ஸ் கார் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை சுஜாதா. தன் மூத்த மகன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் சுஜாதாவின் வருத்தமாக இருந்தது!

கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை!

சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா. செம கி ஜோக் அது

-vikatan

பாரதியார் - 25

09 May 2010 · 0 comments


தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்!

சுப்பிரமணியன் - பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிக ளுக்கு அர்த்தம் தந்த அண்ணன்!

எட்டயபுரம், பிறந்த ஊர். சென்னை, வாழ வந்த ஊர். புதுச்சேரி, 13 ஆண்டுகள் பதுங்கி இருந்த ஊர். மூன்று வீடுகளும் இன்று நினைவுச் சின்னங்கள்!

சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பாலபாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றியவர். வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளன்!

எட்டயபுரம் ஜமீனைவிட்டு விலகியதும் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக இரண்டு மாதங்கள் பணியாற்றினார். அன்று அவருக்கு 17  ரூபாய் மாதச் சம்பளம். இன்றும் அந்தப் பள்ளி, 'பாரதியார் பணியாற்றிய பெருமையுடைத்து!'

ஏழு வயதிலேயே பாடல்கள் புனையும் ஆற்றல் பெற்றார். 11 வயதில் போட்டிவைத்து பாரதி என்று பட்டம் கொடுத்தார்கள். பாரதி என்றால் சரஸ்வதி

இளசை சுப்பிரமணியம் என்று ஆரம்ப காலத்தில் எழுத ஆரம்பித்த இவர், வேதாந்தி, நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன், சாவித்திரி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்!

14 அரை வயதில் ஏழு வயது செல்லம்மாவை மணந்துகொண் டார். இந்தத் தம்பதியருக்கு தங்கம்மாள், சகுந்தலா என்று இரண்டு மகள்கள்!

காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன்முதலாகத் தமிழுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். உலக விநோதங்கள், பட்டணத்துச் செய்திகள், ரஸத்திரட்டு, தராசு ஆகிய தலைப் புக்களில் நடைச் சித்திரங்களாகத் தொடர் கட்டுரைகள் எழுதினார்!

முதன்முதலாக அரசியல் கார்ட்டூன்களைப் பயன்படுத்தியவரும் பாரதியே. 'சித்ராவளி' என்ற பெயரில் கார்ட்டூன் இதழ் நடத்த அவர் எடுத்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை!

பாரதிக்கு பத்திரிகை குரு 'தி இந்து' ஜி.சுப்பிரமணிய ஐயர். அரசியல் ஆசான், திலகர். ஆன்மிக வழிகாட்டி, அரவிந்தர். பெண்ணியம் போதித்தவர், நிவேதிதா தேவி!

தனிமையிரக்கம் என்பது பாரதி பாடிய முதல் பாடலாகவும், 'பாரத சமுதாயம் வாழ்கவே' என்பது கடைசிப் பாடலாகவும் சொல்லப்படுகிறது. 'ஸ்வதேச கீதங்கள்' இவரது முதல் புத்தகம்!

மணியாச்சி சந்திப்பில் கலெக்டர் ஆஷ் கொலை செய்யப்பட்ட நிகழ்வின்போது பாரதியின் மீதும் சந்தேக ரேகை விழுந்தது. வழக்கில் இவரும் விசாரிக்கப்பட்டார்!

பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்றவைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு சிரமப்படு வார்கள் என்பதை உணர்ந்து 'பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா' என்ற பாட்டை அன்றுதான் எழுதினார் பாரதி. மனைவியைத் திட்டுவதையும் நிறுத்தினாராம்!

அந்தக் காலத்தில் ஆசாரத்துக்கு விரோதமானது எதுவோ அனைத்தையும் செய்தார். 'என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்' என்று சொன்னவர்!

லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகிய மூன்று தெய்வங்களின் படங்களும் வைத்திருப்பார். கிருஷ்ணர் படத்துக்குக் கீழே பிச்சுவா கத்தி இருக்கும். அதில் பெரிய பொட்டும் இருக்கும். தினமும் இதை வணங்கிய பிறகுதான் வழக்கமான வேலைகள் தொடங்கும்!

கனகலிங்கம், நாகலிங்கம் ஆகிய இருவருக்கும் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொடுத்து பூணூல் அணிவித்தார். பாரதி பூணூல் அணிய மாட்டார். 'பூணூலை எடுத்துவிட்டவர்' என்று போலீஸ் கொடுத்த விளம்பரம் சொல்கிறது!

கறுப்பு கோட், தலைப்பாகைதான் அவரது அடையாளம். வேட்டி, சட்டையில் அழுக்கு இருந்தாலும் பார்க்க மாட்டார். கிழிசல் இருந்தாலும் கவலை இல்லை. ஆனால், சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச் சொருகிவைத்திருப்பார்!

''மிஸ்டர் காந்தி! கடற்கரையில் நாளை பேசுகிறேன். நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்'' என்று இவர் சொன்னபோது, ''கூட்டத்தை மறுநாளுக்கு மாற்ற முடியுமா?'' என்று கேட்டார் காந்தி. ''அது முடியாது. ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி'' என்று சொல்லிவிட்டு வெளியேறிய பாரதி யைப் பார்த்துக்கொண்டே இருந் தார் காந்தி. ''இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்'' என்று அரு கில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டார் காந்தி!

தன்னுடைய எழுத்துக்களை 40 தொகுதிகளாகப் பிரித்து புத்தகங்கள் வெளியிடத் திட்ட மிட்டார். ஆளுக்கு 100 ரூபாய் அனுப்பக் கோரிக்கைவைத்தார். யாரும் பணம் அனுப்பவில்லை!

எப்போதும் மனைவி செல்லம்மாளின் தோளில் கையைப் போட்டுத்தான் சாலை யில் அழைத்துச் செல்வார். 'பைத்தியங்கள் உலவப் போகின் றன' என்று ஊரார் கிண்டலடிக்க, இவர் பாடியதுதான், 'நிமிர்ந்த நன்னடை... நேர்கொண்ட பார்வை' பாட்டு!

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும். போலீஸ் விசாரணையின்போது, 'நீங்கள் லண்டனில் படித்தவரா? உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே?' என்று ஆச்சர்யப்பட்டாராம் அதிகாரி!

தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பு குறித்துப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இவர் எழுதி அனுப்பிய கவிதைதான், 'செந்தமிழ் நாடெனும்போதினிலே' அதற்கு அன்று 100 ரூபாய் சன்மானம் கிடைத்தது!

விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவி இவருக்கு ஒரு ஆல மர இலையைக் கொடுத்திருந்தார். இமயமலையில் இருந்து எடுத்து வந்ததாம் அது. தான் மரணிக்கும் வரையில் அந்த இலையைப் பொக்கிஷமாக வைத்திருந் தார் பாரதி!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர் கொடுக்க... அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டவர் 'கோயில் யானை' என்ற கட்டுரையைக் கொடுத்தார்!

'ஆப்கன் மன்னன் அமா னுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப் போகணும்' என்று சொல்லிவிட்டுப் படுத்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்தது. அவரது உடல் புதைக்கப்பட்ட இடம், சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடு. அன்றைய தினம் இருந்தவர்கள் 20-க்கும் குறைவானவர்களே


நன்றி விகடன்

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites