பஜாஜ் என்றாலே இப்போதுள்ள தலைமுறைக்கு உடனே நினைவுக்கு வருவது பல்ஸர் பைக்குகளும் ஆட்டோவும்தான். ஆனால், பஜாஜ் நிறுவனத்தின் சரித்திரம் நீண்டது. ஜமன்லால் பஜாஜ்தான் இதன் நிறுவனர். மகாத்மா காந்தியின் நெருங்கிய சீடரான இவரை, 'தனது ஐந்தாவது பிள்ளை' என்று பூரிப்போடு காந்திஜி குறிப்பிட்டுள்ளார். 1945-ம் ஆண்டில் ஜமன்லால் பஜாஜ், 'பாட்ச் ராஜ் டிரேடிங் கம்பெனி' என்ற பெயரில்தான் தற்போதைய பஜாஜ் நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது, இரு சக்கர வாகனங்களையும், மூன்று சக்கர வாகனங்களையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யும் ஒரு சிறிய நிறுவனமாக இருந்தது. நம் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, அதாவது 1948-ம் ஆண்டுக்குப் பிறகு, பஜாஜ் நிறுவனத்துக்கு வாகனங்கள் தயாரிக்க லைசென்ஸ் வழங்கியது அரசு. ஆனால், 11 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சொந்தமாக வாகனங்கள் தயாரிக்கத் துவங்கியது பஜாஜ். அதாவது, 1960-ம் ஆண்டு, ராகுல் பஜாஜ் இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது, 'பியாஜியோ' எனும் இத்தாலிய நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து 'வெஸ்பா' என்ற ஸ்கூட்டரைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியது பஜாஜ். வெஸ்பா ஸ்கூட்டர்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்துவிட்டு வந்த ராகுல் பஜாஜ், 1968-ம் ஆண்டில் புனேயில் உள்ள பஜாஜ் தொழிற்சாலையை விரிவுபடுத்தினார். இந்த ஆண்டு மட்டும் சுமார் 7.2 கோடி வர்த்தகம் செய்து, பெரிய நிறுவனமாக உருவெடுத்தது பஜாஜ். 1970-ம் ஆண்டு இந்தத் தொழிற்சாலையில் மொத்தம் 1 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்தனர். 1971-ம் ஆண்டில் முன் பக்கம் இன்ஜின் பொருத்திய ஆட்டோ அறிமுகமானது. பிரித்விராஜனின் வீரியமிக்க குதிரையின் பெயர் 'சேட்டக்' என்பதால், அதை நினைவுபடுத்தும் வகையில், 1972-ம் ஆண்டில் 'பஜாஜ் சேட்டக்' என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தினார்கள். 1976-ம் ஆண்டில் 'பஜாஜ் சூப்பர்' என்ற மேலும் ஒரு புதிய ஸ்கூட்டர் அறிமுகமாகியது. இந்தச் சமயத்தில், பெட்ரோலியப் பொருட்களின் தட்டுப்பாடு கடுமையானதால், கார் வைத்திருந்தவர்களும் இருசக்கர வாகனங்களுக்கு மாற வேண்டிய நிர்பந்தம் உருவானது. அதனால், நம் நாட்டில் இரு சக்கர வாகனத் தயாரிப்பாளர்களுக்கு செல்வாக்கு கூடியது. இந்தக் காலகட்டத்தில், ஸ்கூட்டர் வாங்க முன் பணம் செலுத்தி 10 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. பிரீமியம் தொகை கொடுத்து ஸ்கூட்டர் வாங்கியவர்களும் உண்டு. ஆனால், அமெரிக்க டாலராகக் கொடுத்து ஸ்கூட்டர் கேட்டவர்களுக்கு உடனே கிடைத்தது. 1976-ல் பின் பக்கம் இன்ஜின் பொருத்திய ஆட்டோவை அறிமுகப்படுத்தியது பஜாஜ். 1977-ம் ஆண்டுடன் பியாஜியோவுடன் ஒப்பந்தம் முடிந்து போனதால், 'வெஸ்பா பெயரிட்ட வாகனங்களை பஜாஜ் விற்பனை செய்யக் கூடாது' என வழக்கு தொடர்ந்தது பியாஜியோ நிறுவனம். அதனால், பஜாஜின் ஏற்றுமதி வர்த்தகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. 1980-க்குப் பிறகு, வெளிநாட்டு வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்தன. அப்போது பஜாஜிடம் இருந்த ஒரே பலம், இந்தியாவெங்கும் இருந்த சக்தி வாய்ந்த டீலர் நெட்வொர்க் மட்டுமே! 1981-ம் ஆண்டு 'பஜாஜ் எம்-50' என்ற வாகனத்தை அறிமுகம் செய்தது. இந்த மாடல் அறிமுகமான பின்புதான் 100 சிசி பைக்குகள் அறிமுகமாகின. இதற்கிடையில் பியாஜியோ நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த எல்.எம்.எல் நிறுவனத்துடன் இணைந்து 'எல்.எம்.எல் வெஸ்பா என்வி 150' என்ற ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. அதனால், பஜாஜ் ஸ்கூட்டர்களின் விற்பனை வெகுவாகப் பாதித்தது. 1985-ம் ஆண்டில் மட்டும் சுமார் 60,000 பஜாஜ் எம்-50 வாகனங்கள் விற்பனையாகின. இந்த வாகனங்களை மிகவும் சிரமப்பட்டுத்தான் தயாரிக்க முடிந்தது. பஜாஜின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிவைச் சந்தித்துக் கொண்டு இருந்த வேளையில், ஜப்பானிய கவாஸாகி நிறுவனத்துடன் இணைந்து 'கேபி 100' ( 'கேபி'- கவாஸாகி - பஜாஜ்) என்ற பைக்கைத் தயாரித்தது. இந்த ஆண்டில் எம்-50 வாகனத்தை மேம்படுத்தி எம்-80 என்ற புதிய மாடலையும் அறிமுகம் செய்ய... விற்பனை சூடு பிடிக்கத் துவங்கியது. 1990-ம் ஆண்டு 'சன்னி' என்ற சிறிய ஸ்கூட்டரெட்டையும் அறிமுகம் செய்தது. பின்பு, 1991-ம் ஆண்டு 'கேபி 4 எஸ் சாம்பியன்' என்ற முதல் 4 ஸ்ட்ரோக் பைக்கை அறிமுகம் செய்தது பஜாஜ். இந்த பைக்கும் மக்களின் வரவேற்பைப் பெற்றது. 1993-ம் ஆண்டு மீண்டும் பியாஜியோவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது பஜாஜ். ஆனால், அது வெற்றி பெறவில்லை. இந்த ஆண்டு 'பஜாஜ் ஸ்ரைட்' (Stride) எனும் ஸ்கூட்டர் அறிமுகமானது. அந்தச் சமயத்தில், ஜப்பான் நிறுவனங்களுடன் உள்ள கூட்டணி மட்டும் இல்லாமல் மேற்கொண்டு என்ன செய்வது என யோசித்தது பஜாஜ். ஏற்றுமதி வர்த்தகத்தை வேறுவிதமாகக் கையாண்டது. அதாவது, மேற்கத்திய நாடுகள் தவிர்த்து அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவு, கிழக்காசிய நாடுகளுக்கும் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது. இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு பஜாஜ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உரம் சேர்த்தது. 1994-ம் ஆண்டு விலை குறைவான கார் தயாரிக்கும் திட்டமும் பஜாஜிடம் இருந்தது. ஆனால், இந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு ஜப்பானைச் சேர்ந்த 'டோக்கியோ ஆர் அண்டு டி' என்ற ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது. இந்த நிறுவனத்தின் உதவியுடன் தனது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையை மேம்படுத்தியது பஜாஜ். இந்தச் சமயத்தில், 'உலகின் நான்காவது பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பாளர்' என்ற இடத்தில் இருந்தது அது. இந்த ஆண்டில் 'பஜாஜ் கிளாஸிக்' என்ற ஸ்கூட்டரும், 1995-ல் 'சூப்பர் எக்ஸ்எல்' என்ற ஸ்கூட்டரையும், 1996-ல் 'கேபி 100' என்ற பைக்கையும், 'ரேவ்' என்ற ஸ்டெப் த்ரூ பைக்கையும் அறிமுகம் செய்தது. 1997-ம் ஆண்டில் 'கேபி பாக்ஸர்' பைக்கையும், டீசல் ஆட்டோவையும் அறிமுகம் செய்தது. 1998-ம் ஆண்டில் தனது மூன்றாவது தொழிற்சாலையை நவீன தொழில்நுட்பத்துடன் புனேயில் துவக்கியது பஜாஜ். காலிபர், ப்ரவ்லர், ஸ்பிரிட் ஸ்கூட்டரெட், லெஜன்ட் எனும் 4 ஸ்ட்ரோக் ஸ்கூட்டர் ஆகியவற்றை இங்கு தயாரித்து அறிமுகம் செய்தது. இந்த ஆண்டில் இத்தாலியைச் சேர்ந்த 'கஜீவா' நிறுவனத்துடன் இணைந்து, மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் தயாரிக்கத் திட்டமிட்டு, புரோட்டோ டைப் வாகனங்களைக் காண்பித்தது. ஆனால், இந்த வாகனங்கள் எவையும் விற்பனைக்கு வரவில்லை. இந்தச் சமயத்தில் பஜாஜின் ஒரே போட்டியாளராக விளங்கியது ஹீரோ ஹோண்டா நிறுவனம்தான். 1999-ம் ஆண்டில் இத்தாலிய பியாஜியோ நிறுவனத்தையும், 2000-ஆவது ஆண்டில் மாருதியின் பங்குகளையும் வாங்க முயற்சித்தது. ஆனால், இந்த இரண்டுமே கைகூடவில்லை. இந்த ஆண்டில் பஜாஜ், 'சஃபையர்' எனும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. சத்தமில்லாமல், ரகசியமாக தனது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையின் சொந்த முயற்சியில் ஒரு பைக்கை உருவாக்கி வந்தது பஜாஜ். அந்த பைக்கை 2001-ம் ஆண்டு 150 சிசி மற்றும் 180 சிசி இன்ஜின்களுடன் 'பல்ஸர்' என்ற பெயர் சூட்டி இந்திய பைக் மார்க்கெட்டில் புதிய அத்தியாயத்துக்கு வித்திட்டது. 'பல்ஸர்' என்ற நாமகரணம்தான் பஜாஜின் விறுவிறு வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது என்றால் அது மிகை இல்லை. ஸ்கூட்டர் விற்பனையில் ஆரம்பித்து பின்பு தயாரிப்பில் இறங்கிய பஜாஜ் நிறுவனம், 'இனி ஸ்கூட்டர் தயாரிப்பது இல்லை' என்று அறிவித்து இருக்கிறது. பஜாஜின் 'விண்ட்' என்ற பைக், இந்தியாவில் தயாராகி 'கவாஸாகி' என்ற பெயரில் உலகம் முழுவதும் ஏற்றுமதி ஆனது. தற்போது, ஆஸ்திரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற 'கேடிஎம்' என்ற பைக் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவுக்கென ஸ்பெஷல் பைக் தயாரிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. பஜாஜ் - கேடிஎம் கூட்டணி வளர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், இனி உருவாகும் பஜாஜ் பைக்குகள் ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன், இந்தியாவில் உள்ள ஜப்பானிய தொழில்நுட்பம் கொண்ட பைக்குகளுக்குப் போட்டியாக இருப்பதுடன், விலையும் மிகக் குறைவாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்! 2007-ம் ஆண்டு ஆஸ்திரியாவைச் சேர்ந்த புகழ் பெற்ற பைக் நிறுவனமான கேடிம் நிறுவனத்தின் 14.5 சதவிகித பங்குகளை வாங்கியது பஜாஜ். 2008-ம் ஆண்டில் இந்தப் பங்குகள் விகிதம் 25 சதவிகிதமாக உயர்ந்து, 2009-ல் 31.72 சதவிகிதமாக அதிகரித்துள்ளது! கவாஸாகி ஸ்போர்ட்ஸ் பைக்குகளையும், கேடிஎம் ஸ்போர்ட்ஸ் பைக்குகளையும் பஜாஜ் தனது ப்ரோ பைக்கிங் ஷோரூம் மூலம் அறிமுகம் செய்யத் திட்டம் வைத்திருப்பதாகத் தெரிகிறது. 'இதன் முன்னோட்டத்துக்காகத்தான் நின்ஜா 250, பஜாஜின் ப்ரோ பைக்கிங் ஷோரூமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது' என்கிறார்கள் விகடன் 
பஜாஜ் ஆட்டோ லிமிடெட் -வரலாறு
காரைப் பராமரிக்க சம்மர் டிப்ஸ்!
வெயில் காலத்தில் ஆயில் மாற்றுவது, பெல்ட் சோதிப்பது அவசியம். நன்றி விகடன் காரைப் பராமரிக்க சம்மர் டிப்ஸ்! வெயில், மனிதர்களுக்கு மட்டுமல்ல... கார்களுக்கும் பிரச்னையைக் கொடுக்கக் கூடியதுதான்! வெயில் காலத்தில் நம்மை ஒழுங்காகப் பாதுகாத்துக்கொள்வது மாதிரியே, பல லட்சங்கள் கொடுத்து வாங்கிய காரைப் பராமரிக்க வேண்டியது கட்டாயம்!
வெயில் காலத்தில் அடிக்கடி டயரில் உள்ள காற்றின் அளவைப் பரிசோதிக்க வேண்டும். ஏனென்றால், அதிக வெப்பத்தால் டயர் பிரஷர் தானாகவே கூடும். அதனால், டயர் வெடிக்கும் அபாயம் இருக்கிறது. ஆகவே, டயர் பிரஷரை செக் செய்ய மறக்காதீர்கள்
வெயில் நேரத்தில் காரை வெட்டவெளியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் நிறுத்தினால், வெப்பம் காருக்குள் ஏறும்!
வெயிலில் காரை நிறுத்திவைப்பது காரின் பெயின்ட்டை பாதிப்பதோடு, காருக்கு உள்ளே உள்ள டேஷ் போர்டு உள்ளிட்ட பிளாஸ்டிக் பாகங்களையும் பாதிக்கும்!
இன்ஜின் கூலன்ட்தான் இன்ஜினை கூலாக வைக்க உதவுகிறது. வெயில் காலத்தில் இன்ஜின் கூலாக இருக்க வேண்டியது அவசியம். அதனால், கூலன்ட் அளவு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம்!
இன்ஜின் சூடாக இருக்கும்போது ரேடியேட்டர் மூடியைத் திறக்கக் கூடாது. கூலன்ட்டுக்குள் 'எத்திலின் கிளைக்கால்' எனும் அமிலம் இருக்கிறது. இது உடலில் பட்டால் பொத்தலே விழுந்துவிடும். அதனால், இன்ஜின் சூடாக இருக்கும்போது ரேடியட்டர் மூடியைத் திறக்கக் கூடாது!
இன்ஜின் சூடாக இருக்கும்போது, நேரடியாக ரேடியேட்டர் மீதோ இன்ஜின் மீதோ தண்ணீர் ஊற்றாதீர்கள்.
ஏ.ஸி கூலிங் சரியாக இல்லை என்றால், கேஸ் லீக்கேஜ் இருக்கிறதா என்று மெக்கானிக்கிடம் கொடுத்துப் பாருங்கள். வெயில் சீஸன் துவங்குவதற்கு முன்பு எப்போதுமே ஏ.ஸி சிஸ்டத்தை ஒரு முறை செக் செய்து கொள்வது நல்லது.
சன் ஸ்க்ரீன், விண்டோ ஷேடு ஷீட்ஸ் ஆகியவற்றை வாங்கி காருக்குள் பொருத்துவது அதிகப்படியான வெப்பத்தை காருக்குள் வரவிடாமல் தடுக்கும்!
வெயில் காலத்தில் அதிக வேகத்தில் செல்வது நல்லதல்ல. பழைய டயர்கள் என்றால், ஓவர் ஹீட்டாகி வெடிக்கும் நிலைமை வரலாம். அதனால், வெயில் காலத்தில் குறைந்த வேகத்தில் செல்வது நல்லது
கல்வி -ஆடோமொபைல் டிசைன் 50 லட்சம் சம்பளம்!
விறுவிறுவென வளர்ந்து வருகிறது இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்! கடந்த ஆண்டு மட்டும் கார், பைக் நிறுவனங்கள் 25 சதவிகித வளர்ச்சி கண்டிருக்கும் இந்தச் சமயத்தில், ஆட்டோமொபைல் படிப்புக்கு ஏற்பட்டு இருக்கும் டிமாண்டை சொல்லத் தேவையில்லை! 2016-ம் ஆண்டுக்குள் இரண்டரை கோடி ஆட்டோமொபைல் இன்ஜினீயர்கள் இந்தியாவில் தேவைப்படுவார்கள்!
ஆனால், வெறும் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படித்தால் மட்டுமே கரை சேர முடியாது. ஆட்டொமொபைல் இன்ஜினீயரிங்கில் இருக்கும் உட்பிரிவுகளில் ஸ்பெஷல் பாடங்கள் படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு 50 லட்சம் வரை சம்பளம் கொடுக்க பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன!
ஆட்டோமொபைல் டிசைன்
ஆட்டோமொபைல் டிசைன் படிப்புக்குத்தான் இப்போது செம மவுசு! டிசைன் பாடம் படித்தவர்களுக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆரம்பத்திலேயே ஆண்டுக்கு 6 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை சம்பளம் கொடுக்கின்றன.
டிசைனரின் பொறுப்பு என்ன?
நம்மூரைப் பொறுத்தவரை ஒரு காலத்தில் காரின் டிசைன் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், இப்போதோ, வாகனங்கள் ஸ்டைலாக இருக்க வேண்டும் என்பதில்

வாடிக்கையாளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். சொல்லப் போனால், காரின் தோற்றம்தான் அதன் வெற்றி - தோல்வியைத் தீர்மானிக்கிறது.
அதனால், ஆட்டோமொபைல் டிசைனரின் வேலை இப்போது பல சவால்களை உள்ளடக்கியதாக மாறியிருக்கிறது! காரின் வடிவமைப்பைத் தவிர காரின் உள் பக்கம், வெளிப் பக்கம், டேஷ் போர்டு உள்ளிட்ட பாகங்களுக்கு என்ன கலர் சரியாகப் பொருந்தி வரும் என்பதை டிசைன் செய்ய வேண்டியதும், ஆட்டோமொபைல் டிசைனரின் பொறுப்புதான்
எங்கே படிக்கலாம்?
அஹமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன் கல்லூரியில் ஆட்டோமொபைல் டிசைனில் பட்ட மேற்படிப்பு டிப்ளமோ பாடப் பிரிவு இருக்கிறது. இந்தப் பாடப் பிரிவில் சேர ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங், கட்டிடக் கலை அல்லது ஆட்டோமொபைல் டிசைனில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது இரண்டரை ஆண்டு காலப் படிப்பு. இந்தப் பாடப் பிரிவைப் படிக்க ஒன்றரை லட்ச ரூபாய் வரை செலவாகும்.
மும்பை ஐஐடியில் உள்ள இண்டஸ்ட்ரியல் டிசைன் சென்டரிலும் இதேபோல் 'டிரான்ஸ்போர்ட்டேஷன் டிசைன்' பாடப் பிரிவு உள்ளது. இது இரண்டு ஆண்டுகால முதுநிலைப் படிப்பாகும்.
இந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் டிசைனரான திலீப் சாப்ரியா, புனேவில் 'சென்டர் ஃபார் ஆட்டோமோட்டீவ் ரிசர்ச் அண்டு ஸ்டடீஸ்' என்ற பெயரில் ஆட்டோமொபைல் டிசைன் கல்லூரியை நடத்தி வருகிறார்''இங்கே இளநிலை மற்றும் முதுநிலை என இரண்டு வகையான பாடத் திட்டங்கள் உள்ளன. பன்னிரண்டாவது படித்தவர்கள் அல்லது பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படித்தவர்கள் இளநிலைப் பாடத் திட்டத்தில் சேர முடியும். 'ஆட்டோமோட்டீவ் ஸ்டைலிங்' எனப்படும் இது 3 ஆண்டு காலப் படிப்பாகும். அதேபோல், பட்ட மேற்படிப்பு பாடத் திட்டமும் உண்டு. இது இரண்டு ஆண்டு காலப் பாடத் திட்டம். இதில் கலை, அறிவியல் என எந்த துறையில் பட்டப் படிப்பு படித்தவர்களும் சேரலாம். அதேபோல், டிப்ளமோ படித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்த அனுபவம் உள்ளவர்களும் இந்தப் பாடத் திட்டத்தில் சேர முடியும். இதில் சேர ஆண்டுக்கு சுமார் 7 லட்ச ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்'' என்கிறார் திலீப் சாப்ரியா
நீங்கள் கார் ,மோட்டார் சைக்கிள் போன்றவைகளில் ஆர்வம் உடையவரா??
ஆட்டோமொபைல் மார்க்கெட் டாப் கியருக்கு மாறிக்கொண்டு இருப்பதால், புதிய மாடல்களை உடனடியாகக் களமிறக்கி, விற்பனையைப் பெருக்குவதில் கார், பைக் நிறுவனங்கள் மும்முரமாக இறங்கிவிட்டன! மே முதல் டிசம்பர் வரை இந்த ஆண்டு பல மாடல்கள் வரிசை கட்டி வரக் காத்திருக்கின்றன. வரப் போகும் கார், பைக்குகளைப் பற்றிய முன்னோட்டம் இதோ...
எதிர்பார்ப்பை அதிகம் தூண்டியிருக்கும் நிஸான் மைக்ரா, ஜூன் மாதவாக்கில் விற்பனைக்கு வர இருக்கிறது. பெட்ரோல், டீசல் என இரண்டு இன்ஜின்களுடனும் வெளிவர இருக்கிறது மைக்ரா. இதன் விலை 4.5 லட்ச ரூபாயில் இருந்து ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கலாம்!
நீண்ட காலமாகத் தள்ளிக் கொண்டே போன 'சான்ட்டா ஃபீ' கா¬ர இறுதியாக இந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர முடிவெடுத்துவிட்டது ஹ¨ண்டாய். வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த கார், 2.2 லிட்டர் காமென் ரெயில் டீசல் இன்ஜினுடன் வெளிவர இருக்கிறது. இந்த இன்ஜினின் அதிகபட்ச சக்தி 197 bhp. அக்டோபர் மாதம் சான்ட்டா ஃபீ விற்பனைக்கு வர இருக்கிறது!
எஸ்யூவி மார்க்கெட்டில் டீசல் கார்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டே போவதால், ஹோண்டா தனது சிஆர்-வி மாடலில் டீசல் இன்ஜினை இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது. காமென் ரெயில் டீசல் இன்ஜினைக் கொண்ட இதன் சக்தி 134 bhp. இது வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கிறது!
ஸ்டைலாக இருக்கும் ஃபியட் லீனியா டீசல் மாடலில், பவர் இல்லை என்பதுதான் ஒரே குறை. அதற்குத் தீர்வு சொல்ல 1.6 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜினுடன் வெளிவர இருக்கிறது லீனியா. பெரிய இன்ஜின் என்பதால், இதன் விலையும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்! கிட்டத்தட்ட 10-11 லட்ச ரூபாய் விலையில் வெளிவர இருக்கிறது லீனியா 1.6 மல்ட்டி ஜெட்.
இனோவாவுக்குப் போட்டியாக டாடா களமிறக்கப் போகும் கார் ஆரியா. வெகுவிரைவில் அறிமுகமாக இருக்கும் இந்த காரின் விலை, கிட்டத்தட்ட 12-14 லட்ச ரூபாய்க்குள் இருக்கும். 2.2 லிட்டர் இன்ஜினுடன் களமிறங்க இருக்கும் இதன் சக்தி 140 bhp. டாடா சஃபாரியில் இருக்கும் அதே இன்ஜின்தான் என்றாலும், இதில் பல மாற்றங்களைச் செய்திருக்கிறது டாடா!
ஸ்பார்க்கைப் போலவே 800 சிசி இன்ஜினைக் கொண்ட மாடலையும் இந்த ஆண்டு வெளியிட இருக்கிறது ஜெனரல் மோட்டார்ஸ். இதன் விலை ஸ்பார்க்கைவிட குறைவாக இருக்கும். அதே சமயம், மைலேஜ் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறது ஜெனரல் மோட்டார்ஸ்!
140 bhp சக்தி கொண்ட பவர்ஃபுல் டீசல் இன்ஜினைக் கொண்ட ஸ்கோடா யேட்டி காரை, இந்த ஆண்டு அக்டோபர் மாதவாக்கில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது ஸ்கோடா. 4-வீல் டிரைவ் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் என எஸ்யூவி கார்களுக்கே உரித்தான அத்தனை வசதிகளுடனும் வெளிவர இருக்கிறது யேட்டி!
மல்ட்டி பர்ப்பஸ் வெஹிக்கிள் மார்க்கெட்டுக்கு இந்தியாவில் இருக்கும் அதிக வரவேற்பை அடுத்து, புதிய எம்பிவி வாகனத்தை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்த இருக்கிறது மாருதி. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரில், மொத்தம் ஏழு பேர் அமர்ந்து பயணிக்க முடியும். இதன் விலை கிட்டத்தட்ட 7 லட்ச ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கலாம்!
விற்பனையில் தேங்கிக்கொண்டே இருக்கும் எஸ்எக்ஸ்-4 காரில், டீசல் இன்ஜினைப் புகுத்தி புத்துயிர் கொடுக்க இருக்கிறது மாருதி. 1.6 லிட்டர் திறன் கொண்ட ஃபியட்டின் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜினுடன் களமிறங்க இருக்கிறது எஸ்எக்ஸ்-4 டீசல். ஹ¨ண்டாய் வெர்னா, ஃபோர்டு ஃபியஸ்டா ஆகிய கார்களுக்குப் போட்டியாகக் களமிறங்கப் போவதால், அவற்றைவிட இதன் விலை குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்!
தீபாவளி ரிலீஸாக ஸ்பார்க் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது ஜெனரல் மோட்டார்ஸ். ரேவாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த காரில், லித்தியம் ஐயான் பேட்டரிகள் கொண்ட மாடலும் வெளிவர இருக்கிறது. ஸ்பார்க் எலெக்ட்ரிக்கின் விலை கிட்டத்தட்ட 5 லட்ச ரூபாயில் இருந்து ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டாவின் வெற்றிகரமான மாடலான கரோலா ஆல்டிஸில் டீசல் இன்ஜின் கொண்ட மாடல் வெளிவர இருக்கிறது. 1.4 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜினுடன் வெளிவர இருக்கும் இந்த கார், 90 -100 bhp சக்தியை வெளிப்படுத்துமாம்!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது அறிமுகப்படுத்தப்பட்ட எட்டியோஸ், இந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஹேட்ச்பேக், செடான் என இரண்டு மாடல்களாக வெளிவர உள்ள எட்டியோஸில், முதலில் செடான் மாடலே விற்பனைக்கு வர இருக்கிறது. இதில் 1.4 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட இரண்டு மாடல்களுமே விற்பனைக்கு வர இருக்கின்றன.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருந்த யூனிகார்ன் கான்செப்ட் பைக்கை, 'டேஸ்லர்' என்ற பெயரில் ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது. மே மாதம் வெளிவர இருக்கும் இந்த பைக்கில், டிஸ்க் பிரேக் மற்றும் டிஜிட்டல் மீட்டர் உள்ளிட்ட புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் விலை 68-70 ஆயிரம் ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கலாம்!
யமஹா YBR 110 மாடலை அடுத்து விரைவில் விரைவில் SZ 125 பைக்கைக் களமிறக்க இருக்கிறது யமஹா. கிளாடியேட்டரில் இருக்கும் அதே இன்ஜின்தான் இந்த பைக்கில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் விலை 50-55 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும்!
டிவிஎஸ் பைக்குகளில் தனி முத்திரை பதித்த 'மேக்ஸ் 100' பைக்கை மீண்டும் புதுப் பொலிவுடன் கொண்டு வர இருக்கிறது டிவிஎஸ். 'மேக்ஸ் 4 ஆர்' என்ற பெயரில் மீண்டும் அறிமுகமாகி உள்ள இந்த 100 சிசி பைக், விற்பனையில் மீண்டும் ஒரு ரவுண்டு வரும் என எதிர்பார்க்கிறது டிவிஎஸ். 110 சிசி இன்ஜின் கொண்ட இந்த பைக்கின் விலை 40 - 44 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும்!
பல்ஸரின் மார்க்கெட்டைப் பிடிக்கப் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது டிவிஎஸ். 160,180 மாடல்களை அடுத்து 'அப்பாச்சி 220' என்ற பைக்கைக் களமிறக்க நேரம் பார்த்து வருகிறது. ஏற்கெனவே 'பவர்ஃபுல் பைக்' என பெயரெடுத்த அப்பாச்சியின் சக்தியை மேலும் கூட்டி, வசதிகளையும் அதிகரித்து அப்பாச்சி 220-ஐ விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது டிவிஎஸ்!
நன்றி விகடன்
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)


